

அறிவியல் கண்டுபிடிப்புகள் மிக வேகமாக நம் வாழ்க்கை முறையை, கலாச்சாரம், பண்பாட்டை, புழக்கத்தில் இருந்த கருவிகளை மாற்றி அமைத்துள்ளது. மின்சாரத்தால் இயங்கும் வீட்டு உபயோக பொருள்களின் வருகையால் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த கற்கருவிகள் இன்று மிக வேகமாக மறைந்து வருகிறது. ஆனாலும்கூட அம்மி, உரல், ஆட்டுரல், திரிகை என்று கற்கால நாகரீகத்தின் சுவடுகள் நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதன் பெருமையை மாணவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
உரல், உலக்கை: முல்லை நில வாழ்க்கையில் நெல்லும் புல்லுமான சிறிய வகை தானியங்களின் உறையினை நீக்குவதற்கு மனிதன் கண்டுபிடித்த கருவி தான் உரலும் உலக்கையும். தொடக்க காலத்தில் பாறைகளில் தானியங்களை குவித்து வைத்து மர உலக்கையால் குற்றியிருக்கிறார்கள். பாறைகள் நிறைந்த பகுதிகளிலும், மலைப்பகுதிக் கிராமங்களிலும் பாறை குழிகளை காண முடிகிறது.
கையினால் பற்றிக்கொள்ள ஒன்றும் அடிப்பகுதி ஒன்றுமாக இந்த கற்கருவிகள் எல்லாம் இரண்டு பொருள்களின் சேர்க்கையாக அமைகின்றன. அம்மிக்கும் ஆட்டுரலுக்கும் கற்குழவிகள், திரிகைக்கு மூடியும் இரும்பு கைப்பிடியும் இவை அரைப்புக் கருவிகள்.
உரலின் துணைக் கருவி உலக்கை,இது கருங்காலி மரத்தினால் செய்யப்பட்டது. இதன் அடிப்பகுதி இரும்பு குப்பியால் ஆனது. மேற்பகுதியில் இரும்பிலான பூண் கட்டப்பட்டிருக்கும். உலக்கையின் சராசரி நீளம் நான்கு அடியாகும். இன்றும் அவல் இடிப்பதற்கு உரலும் உலக்கையும் பயன்படுகின்றன. உரலுக்கு மேலே தானியங்கள் சிதறாமல் இருக்க மூங்கிலாலோ பிரம்பினாலோ வட்ட வடிவ மறைப்பினை செய்து உரலின் மீது அதற்கென வெட்டப்பட்ட காடியின் மீது வைக்கிறார்கள். அடிப்பகுதியும் மேற்பகுதியும் இல்லாத இதற்கு 'குந்தாணி' என்று பெயர்.
பண்டைக்கால தொழில்நுட்பத்தின் எளிமையான வெளிப்பாடு உலக்கை.நெல் வகைகளையும் புல் வகைகளையும் அரிசியாக்குவதை குற்றல், தீட்டல் என்ற இரண்டு வினைச் சொற்களால் குறிக்கின்றனர். குற்றிய தானியத்தை உமியும், தவிடும் நீக்கப் புடைத்துச் சலிப்பதை 'தீட்டல்' என்ற சொல் குறிக்கிறது.
உடல் உழைப்பு: கனமான நான்கடி நீள உலக்கையைக் கொண்டு கல்லுரலில் குற்றுதல் கடுமையான உடல் உழைப்பு ஆகும். பெண்கள் குற்றும்போது உஸ்...உஸ்.. என்ற சத்தத்தை இசை ஒழுங்காக களைப்புத் தெரியாமல் இருப்பதற்காக எழுப்புகின்றனர். ஆண்கள் பாடும் படகுப் பாட்டை போல பெண்கள் உலக்கைப் பாட்டு பாடியிருக்கிறார்கள் இதற்கு "வள்ளைப்பாட்டு" என பெயர். மசாலா பொடிகள் இடிக்கும் சிறிய உலக்கை 'கழுந்து' எனப்படும். இது இரண்டடி நீளம், இரும்பு பூணோ குப்பியோ இருக்காது.
உரல் உலக்கைப் பற்றிய நம்பிக்கைகள் தமிழ் மக்களுக்கு நிறையவே இருக்கின்றன. உலக்கையை எப்போதும் நட்டமாகவே சுவரில் சாத்தி வைக்க வேண்டும். தரையில் கிடத்தக்கூடாது. உரல் குழி நிரம்பும் அளவிற்கு மழை பெய்தால் அதை உழவு மழை என்பர் விவசாயிகள்.
அன்று சமையல் செய்வதற்கு உரல், உலக்கை, ஆட்டுக்கல், அம்மிக்கல் மிகவும் உதவியாக இருந்தது. இதை பயன்படுத்துதல் என்பது ஓர் உடற்பயிற்சி சார்ந்த முறைதான். குழம்பு மணக்க சுவையான மசாலாக்களை அம்மியில் அரைத்த காலம் மலையேறிவிட்டது. கிராமங்களில் ஒரு சில வீடுகளில் தான் இவற்றை இன்று பார்க்க முடிகிறது. வரும் தலைமுறையினர் இதை அருங்காட்சியகத்தில் தான் பார்க்க வேண்டிய நிலை இருக்கும். மாணவ மாணவிகள் வாய்ப்பு கிடைக்கும்போது இந்த கற்கருவிகளை பயன்படுத்தி மகிழுங்கள். முன்னோர்களின் உழைப்பை உணருங்கள்.
- கட்டுரையாளர் ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சித்தையன் கோட்டை, ஆத்தூர் ஒன்றியம், திண்டுக்கல் மாவட்டம்.