Published : 01 Nov 2023 04:25 AM
Last Updated : 01 Nov 2023 04:25 AM

கதை நேரம்: உழைத்து வாழ வேண்டும்

ஓர் ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருந்தாங்க என்று கதை சொல்லத் தொடங்கினார், சிங்கப்பூர் தாத்தா சிங்காரவேல். பேரனும்- பேத்தியும் ஆர்வமாகத் தாத்தா கதையைக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. மாறாக...பேரன் பெரியசாமி தாத்தா..அந்தப் பழைய கதை எங்களுக்கு ஏற்கெனவே தெரியும். வேற கதை ஏதாவது சொல்லுங்க என்றான். தாத்தாவுக்கு என்னவோ போல ஆயிற்று. சரி, மறுபடியும் அந்தக் கதையில் இருந்து இன்னொரு சின்னக் கதை சொல்லட்டுமா? என்று கேட்டார் சிங்கப்பூர் தாத்தா.

உடனே பேத்தி பெரியநாயகி, தாத்தா! முதல் தடவை, காக்கா கதையில் ஏமாந்து போச்சு. அடுத்த கதையில் காக்கா புத்திசாலி ஆகி, நரி ஏமாந்து போச்சு. அந்த கதையும் எங்களுக்கு தெரியும் என்றாள். என்னப்பா, ரெண்டு பேரும் பாட்டி கதை சொல்லவிட மாட்டேங்கறீங்க.ம்..சரி.. அதே பாட்டி கதையில் இருந்து, இன்னொரு சின்னப் பாட்டி கதை சொல்லட்டுமா? என்றார் தாத்தா. அதற்கு பேரனும், பேத்தியும், எந்தக் கதையும் சுருக்கமாக சொல்லுங்க இல்லன்னா நாங்க இடத்தைவிட்டு எழுந்துவிடுவோம் என்று மிரட்டினர். சரி என்று கூறி தாத்தா இன்னொரு பாட்டி கதை சொன்னார்.

குழந்தைகளா.. ஒரு சின்னப்பாட்டி வடை சுட அடுப்பு பத்த வைச்சாங்க. அடுப்பு எரியல ஏன்னா ஈரவிறகு பாட்டி ஊதாங்குழல் எடுத்து..ஊ...ஊ...ன்னு ஊதுனாங்க ம்..ஹும் அப்புறமும் எரியல. அப்ப மரத்து மேல வந்து ஒரு காகம் உட்கார்ந்து கா..கா... என கத்தியது. பாட்டிக்கு கோபம் வடை சுடறதுக்கு முன்னாடி, திருட்டு காக்கா நீ ஏன் இங்க வந்த? என்று பாட்டி கேட்டாங்க.

அதற்கு காகம்... பாட்டி அடுப்புல நெருப்பு பிடிக்கல உன்னைப் பாத்தா எனக்கு பாவமா இருக்கு இந்த மரத்துல காய்ஞ்ச சுள்ளிக் குச்சிகளை ஒடிச்சு போடறேன். அதை எடுத்து பொறுக்கி அடுப்பில வைச்சுப்பாரு. இப்ப நல்லா எரியும் என்றது.

காகம் சொன்னது போல பாட்டி செய்தாள். இப்பொழுது தீப்பற்றி எரிந்தது. பாட்டிக்கு மிகவும்மகிழ்ச்சி. ஆஹா.. உனக்கு என்ன நல்ல புத்தி. திருட்டுத்தனத்தை விட்டுட்டு உழைச்சு பொழைக்கணும்னு உனக்கு ஆசை வந்திருக்கு. அதை நான் பாராட்டுகிறேன். இதோ எப்பவும் நான் வடை சுட்டு முதல் வடையை பிள்ளையாருக்குதான் வைப்பேன். இந்தா இனிமே சுடற முதல் வடை உனக்கு தான் என்று கூறி பாட்டி வடையை தூக்கி போட்டாள். அதை கவ்விக் கொண்ட காகம். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்ததால், பெருமையுடன் வடையைச் சாப்பிட்டது.

கதாசிரியர்: “100 சிறுவர் கதைகள்”

உள்ளிட்ட புத்தகங்களின் ஆசிரியர்,

“வானொலி அண்ணா” என்ற அடைமொழியோடு

அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றி

ஓய்வுபெற்றவர்.

- என்.சி.ஞானப்பிரகாசம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x