Last Updated : 27 Oct, 2023 04:30 AM

 

Published : 27 Oct 2023 04:30 AM
Last Updated : 27 Oct 2023 04:30 AM

குவிலென்ஸாய் இரு

எண்பதுகளின் தொடக்க காலம் அது. அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்று, என் அப்பா ஒரு பரிசோதனை செய்து காட்டினார். அந்த பரிசோதனை, என்னையும் என் அக்காவையும் மிகுந்த ஆச்சரியத் துக்கு உள்ளாக்கியது. சூரிய வெளிச்சம் அதிகமாக இருந்த ஒரு இடத்தில் நின்று கொண்டு, “இந்த பேப்பரை நான் தீக்குச்சி வைத்து எரிக்கமாட்டேன். ஆனால், சற்று நேரத்தில் அது தானாகவே எரியப் போகுது பாருங்க” என்று கூறி, ஒரு காகிதத்தை வைத்து அதன் மேற்புறம் சற்று தொலைவில் ஒரு லென்ஸைப் பிடித்தார். சிறிது நேரத்தில் கீழே வைக்கப்பட்ட காகிதம் எரியத் தொடங்கியது.

“பிள்ளைகளா, பற்ற வைக்கா மலேயே காகிதம் எரியும் அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது தெரியுமா? சூரியனிடமிந்து வருகின்ற ஒரே விதமான ஒளிக்கற்றைகளை இந்தக்குவிலென்ஸ் ஒரு புள்ளியில் குவித்து, அதன்மூலம் பெறப்படும் வெப்பத்தினால், இந்த காகிதம் எரிய உதவுகிறது. ஆம், பூதக் கண்ணாடி என்கிற இந்தக் குவிக்கும் தன்மையுள்ள குவிலென்ஸின் மகிமையால்தான் இந்த அதிசயம் நிகழ்ந்தது.

பலவகையாய் பிரிந்து வருகின்ற ஒளிக்கற்றைகளுக்கு ஆற்றல் அதிகம் கிடையாது. ஆனால், அவை ஒரே புள்ளியில் குவிக்கப்படும்போது, அதன் சக்தி மிகவும் அதிகரிக்கும். குவிலென்ஸின் குவிக்கும் இத் தத்துவத்தை, பிற்காலத்தில் உங்களது அனைத்து செயல்களுக்கும் பயன் படுத்த வேண்டும்.

நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலையும் மன ஒருமைப்பாட்டுடன், எண்ணக் கதிர்வீச்சுகளை ஒன்றுதிரட்டி, அந்த செயலில் முழுக்கவனத் தையும் செலுத்தி செயல்பட வேண்டும். செய்யக்கூடிய செயலின் ஒவ்வொரு சிறு விஷயத்தையும் உற்று நோக்கி, தீவிரமாய் அதுபற்றி சிந்தித்து, அதை திறம்பட முடிக்க ஏதுவான அனைத்து கூறுகளையும் உள்வாங்கி ஒரு குவிலென்ஸ் போல் செயல்பட வேண்டும்.

உங்கள் சிந்தனைக் குவியல் அனைத்தும், அந்த ஒரு செயலில் மட்டும் குவிந்து இருக்கும் போது தான், நீங்கள் எதிர்பார்க்கும் பலனைப் பெற இயலும்” என்று கூறினார். என் தந்தையின் இந்த அறிவுரை அன்றும், இன்றும், என்றும், எப்போதும், எல்லோருக்கும், பயனளிக்கக்கூடிய ஒன்றுதான் என்பதை எவரும் மறுக்க இயலாது. குவியாடியின் தன்மையை மனதில் நிறுத்தி, நாம் ஒரு செயலை செய்ய வேண்டும்.

இதுபோன்று செயல்படும்போது, இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்ற கூற்றிற்கேற்ப, ஒரு செயலைச் செய்யும் போது அதன் முடிவு பற்றி சிந்திக்காமல், செயலில் மட்டும் கவனத்தை வைத்து மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. முடிவு நாம் நினைத்தபடி அமையுமா என்ற எதிர்பார்ப்போடு ஒரு செய லைச் செய்யும் போது, நம் மனம் பதட்டத்தோடுதான் செயல்படும்.

ஆனால், விளைவைப் பற்றிய சிந்தனை ஏதுமின்றி ஒரு செயலைச் செய்யும்போது, பதட்டமின்றி ஒருமுக நோக்கோடு குவிலென்ஸ் போல் செயல்பட இயலும். எனவே, செயலின் விளைவை எதிர்நோக்காமல், எண்ணங்களை சிதறடிக்காமல், பதட்டத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் செயல்படும் பழக்கத்தை சிறுவய திலேயே குழந்தைகளிடம் உருவாக்க வேண்டியது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும்.

அதுமட்டுமின்றி எந்த ஒரு செயலைச் செய்யும்போதும், மனதை ஒருமுகப்படுத்தி, செயலின் நேர்த்தியில் கவனத்தை வைத்து, சிந்தனையை சிதறடிக்காமல், மனம் ஒன்றி செயலாற்றும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

- கட்டுரையாளர் தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, சிங்காடிவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x