

ஏழு கழுத வயசாகுது, ஆனாலும் இப்டி அழுதுட்டிருக்கியே...பொட்டப்புள்ளயாச்சும் அழுதுட்டிருக்கியே...எதுக்கு இப்டி ஒப்பாரி வச்சிட்டிருக்க?
இப்டிலாம் வார்த்தைய நாம கேட்டி ருக்க வாய்ப்புண்டு. அழறதென்ன அவ்ளவு பெரிய குத்தமா? அழுதா தப்பா? அழுதா அசிங்கமா? அதென்ன பொன்னு மாதிரி அழறன்னு சொல்றது? ஏன்? ஆம்பளப்புள்ள அழக்கூடாதா? அழறவங்களப் பாத்தா பரிதாபப்படனுமா? கலாய்க்கலாமா? சிரிக்கலாமா? ஏன் நமக்கு அழத்தோனுது? ஏன் நமக்கு அழக்கூடாதுன்னு தோனுது? இப்டி என்னென்னமோ கேள்விகள் நம்ம மனசுக்குள்ள எப்பயாச்சும் தோணியிருக்கும். வாங்க, இதப்பத்தி பேசலாம்.
நாமல்லாம் சாதரணமான மனுஷங்க. நமக்கு வெவ்வேற உணர்வுகள் இருக்கு. சந்தோஷம், கஷ்டம், கோவம், ஏமாற்றம், பயம், அவமானம், பதட்டம், ஆச்சர்யம், திருப்தி இப்டி சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி நமக்கு நம்மோட உணர்வுகள் வெளிப்படும். இதுல எந்த உணர்வையும் நாம சரின்னும் சொல்லத் தேவையில்ல, தப்புன்னும் பாக்கத் தேவையில்ல.
அந்தந்த நேரத்துக்கு நடக்குற நிகழ்வுகளுக்கு ஏத்த மாதிரி நம்ம மனசுல உணர்வுகள் வெளிப்படும், அதுதான் இயற்கை. இயற்கையான உணர்வுகள் வெளிப்படுறதை நாம வித்தியாசமா நினைக்க வேண்டியதில்லை, அது நமக்கே வெளிப்பட்டாலும் சரி, நம்மசுத்தி இருக்கவங்களுக்கு வெளிப்பட்டாலும் சரி.
சிலர் இருப்பாங்க, இந்தமாதிரி இயல்பா வெளிப்படுற விஷயங்களுக்குக்கூட எதாச்சும் சொல்லுவாங்க. பாவம். இயற்கையா நடக்குறதக்கூட இன்னமும் புரிஞ்சிக்காம இருக் காங்க, இதுல நம்மவிட வயசுல பெரியவங்களும் இருக்கலாம், சில சமயம் நம்ம அப்பா அம்மாவோ இல்லனா நம்ம டீச்சர், சாராவோகூட இருக்கலாம். யாருக்குப் புரியலன் னாலும் சரி நாம முடிஞ்சா அவங்களுக்கு புரிய வெக்கலாம், இல்லனா அவங்களால புரிஞ்சிக்க முடியலன்னு கடந்து போகலாம்.
மத்த எல்லா உணர்வு போலத்தான் எதோ ஒரு விஷயத்துக்காக நம்ம மனசுல வர்ற கஷ்டமும் கவலையும். தேவையில்லாத சந்தோஷம் தராத கஷ்டம் தரக்கூடியதுன்னு தெரிஞ்சும் அதை அப்டியே வச்சிட்டிருக்க நம்ம மனசு என்ன குப்பைத்தொட்டியா? கிடையவே கிடையாது. நம்ம எல்லாருக்குமே சந்தோஷமா வாழுறதுக்கு தான புடிக்கும்? அதுக்கு நம்ம கண் முன்னாடி ஒரு வாய்ப்பிருக்கும் போது நாம ஏன் கஷ்டத்தை மண்டைலயே வச்சுட்டு கெடக்கனும்?
எப்பயாச்சும் எதாச்சும் மனச கஷ்டப்படுத்தலாம், அப்டி நடந்தா அது வெறும் இயற்கையான நிகழ்வுதான். அதுக்கு நாமளும் இயற்கையா ரியாக்ட் பண்ணிட்டு போயிரலாம். என்ன செய்றதுன்னு தான் உங்களுக்கே தெரியுமே. நம்ம கஷ்டத்தை சுத்தி இருக்க யார்கிட்ட வேணாலும் சொல்லலாம். சொல்லி அழலாம். தப்பேயில்ல. அது ஒன்னும் குத்தமில்ல. அழுறது அசிங்கமும் இல்ல. அது வெறும் தற்காலிக உணர்வோட வெளிப்பாடு.
அவ்ளோ தான். இதுல ஆண் பெண்ணுன்னுலாம் வித்யாசமில்ல. எல்லாருக்கும் சந்தோஷமும் சிரிப்பும்போலத்தான் கஷ்டமும் அழுகையும். யாராச்சும் நம்ம சுத்தி அழுதாங்கன்னா கலாய்க்காம, சிரிக்காம, ரொம்ப முக் கியமா பரிதாபமெல்லாம் படாதீங்க. வேற என்ன தான் செய்றதுன்னு கேக்குறீங்களா? அவகளோட அழுகையை மதிங்க, அவங்கள நிம்மதியா அழவிடுங்க. அழுது முடிச்சதும் அவங்களோட உக்காந்து சாதாரணமா பேசுங்க, போதும்.
சுத்தி இருக்கவங்க ஆயிரம் சொல்லுவாங்க, யாருக்கும் எந்த பாதிப்புமில்லாம நிம்மதியா சந்தோஷமா வாழக்கூடிய உரிமை நமக்கு இருக்கு. எந்த கஷ்டமா இருந்தாலும் அதை அழுகையின் மூலமா தீத்துட்டு அடுத்த வேலைய பாக்க போய்ட்டே இருக்கலாம். நமக்கு ஆயிரம் வேலை இருக்கு, வாங்க அதப்பாத்துக்கிட்டு போய்ட்டே இருப்போம்.
- கட்டுரையாளர் இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தட்டான்குட்டை, அணைக்கட்டு ஒன்றியம், வேலூர் மாவட்டம்