Last Updated : 11 Oct, 2023 04:30 AM

 

Published : 11 Oct 2023 04:30 AM
Last Updated : 11 Oct 2023 04:30 AM

தேனீயாய் இரு...

தாங்கள் விரும்பியதைப் படிக்க விடாமல் தடுத்ததாகவும், படிக்க விரும்பாததைப் படிக்க வற்புறுத்தியதாகவும் தங்கள் பெற்றோர் பற்றி இளைஞர்களும் மாணவர்களும் கூறுவது காலங்காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு. வற்புறுத்திப் படிக்கச் செய்ததால்தான் இன்று தங்கள் பிள்ளைகளின் வாழ்வு நல்ல நிலையில் இருப்பதாகப் பெற்றவர்கள் கூறுவதும் எல்லாக் காலங்களிலும் நடக்கும் நிகழ்வு.

பிள்ளைகளின் விருப்பத்திற்கு மாறாக, தாங்கள் நல்ல படிப்பெனக் கருதுவதை படிக்கச் சொல்வதற்கான காரணங்களை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு விளங்க வைத்தால், குறை கூறுவது குறையலாம். பெரும்பாலான பெற்றவர்கள், தாங்கள் படிக்க விரும்பிப் படிக்க முடியாமல் போனதை பிள்ளைகளின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். இதில் பிள்ளைக்கும் விருப்பமிருந்தால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால், பிள்ளைக்கு விருப்பம் இல்லா விட்டாலும் கட்டாயப்படுத்தும் போதுதான் குழப்பங்கள் வருகின்றன. பெற்றவர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெற்றவர்களுக்கு, தங்களைச் சுற்றி வாழ்பவர்களின் பிள்ளைகள் படித்த படிப்பும், அதனால் அப்பிள்ளைகளுக்குக் கிடைத்த நல்ல வேலையும் பெரிதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், அப்பிள்ளைகள் வாழும் பாதுகாப்பான வாழ்வு, பெற்றவர்களின் நிலையிலிருந்து பார்க்கும் போது, உயர்வானதாகத் தெரிகிறது. அதனால், அப்பிள்ளைகளைப் போல் உயர்த்த நினைத்து, அதே படிப்பை படிக்கச் சொல்கிறார்கள். இதனைப் பிள்ளைகள் புரிந்து கொண்டால், குழப்பங்கள் ஏற்படாது.

ஆனால், பாதுகாப்பைப் பற்றி கவலைப்பட்டால் வாழ்வில் சிறக்க முடியாதென்பது பிள்ளைகள் பலரின்நம்பிக்கையாக உள்ளது. இப்படிப் பட்டவர்கள் தாங்கள் பெற்றவர்களின் கட்டுப்பாட்டில் வாழப்போவது படித்துமுடித்து வேலையில் சேரும் வரைமட்டும் தான் என்பதையும் உணரவேண்டிய ஒன்றாகும். ஏனெனில், பிள்ளைகள் வேலையில் சேர்ந்துவிட்டால் தங்கள் கடமை முடிந்த மகிழ்வில், பெரும்பாலான பெற்றவர் கள் பிள்ளைகளைப் பற்றிக் கவலைப் பட மாட்டார்கள்.

இனி, உங்கள் வாழ்வு உங்கள் கையில். அந்த வேலையில் இருந்துகொண்டே, ஓய்வு நேரங்களில் பிடித்த படிப்பினைப் படித்து, பிடித்த வேலையை, தொழிலைப் பயின்று வாழ்வினை உங்களுக்குப் பிடித்த வகையில் முன்னேற்றிக் கொள்ளலாம் அல்லவா?. பின்னர், அதில் உயர்வடையும் போது, பெற்றவர்கள் படிக்கச் சொன்ன படிப்பினால் வந்த வேலையை விட்டுவிடலாம் அல்லவா? அதைவிடுத்துப் பெற்றவர்களால்தான் வாழ்வு சிறக்கவில்லையென்று கூறுவது என்ன நியாயம்? இதைப் பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

தாங்கள் படிக்க சொல்லும் படிப்பு, பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை யென்றால் நன்றாக படிக்காமல் பிள்ளைகளின் வாழ்வு வீணாகலாம். பிள்ளைகளுக்குப் பிடித்ததைப் படிக்க வைத்தால், அதில் அவர்கள் சிறப்பாகப் படித்து நல்வாழ்வு வாழலாம். பிள்ளைகள் விரும்பவதைப் படிக்க அனுமதித்து, தேவையான அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்துவிட்டால், அதில் தோற்றாலும் பெற்றவர்களைப் பொறுப்பாக்க மாட்டார்கள். இம்மூன்றையும் பெற்ற வர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பெற்றவர் கட்டாயபடுத்தியதைப் படித்தாலும், பிள்ளைகள் தாங்கள் விரும்பியதைப் படித்தாலும், மதிப்பெண் தகுதிக்கு எந்த படிப்பு கிடைக்கிறதோ அதனைப் படித்தாலும், கவனச் சிதறல்களை முடிந்த வரைதவிர்த்து, ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பை சிறப்பான வகையில் அளித்தால் மட்டும் தான் வெற்றி பெறமுடியும் என்பதைப் பிள்ளைகள் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். மற்றவர்களைக் குறை கூறுவதில் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

ஞாயிறை பூமி மறைத்ததால் நிலவில் இருட்டு

நிலவில் இறங்கிய ரோவரின் உறக்கம் சில காலம்

ஞாயிறின் ஒளி திரும்பினால், விழிப்படையலாமது

காத்திரு சில காலம், உனக்கும் வழி பிறக்கலாம்.

பெரும் ஞாயிறு நீ பெற்றவரெனும் சிறு திங்கள்

மறைத்த கிரகணத்தால் வாழ்வு இருட்டானதென

நினையாதே நம்பாதே காத்திரு சில காலம்

திங்கள் விலகும் ஒளிர்வாய் பேரொளியாய்

இல்லாவிட்டால் தேனைத் தேடிஅடையும் தேனீயாய் இரு. தேவையைத்தேடி உயர்வடை.?

- கட்டுரையாளர் எழுத்தாளர், வல்லமை சேர் மற்றும் வேர்களின் கண்ணீர் புத்தக ஆசிரியர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x