பொதுச் சமூகம் கொண்டாடும் வாசிப்பு இயக்க புத்தகங்கள்

பொதுச் சமூகம் கொண்டாடும் வாசிப்பு இயக்க புத்தகங்கள்
Updated on
1 min read

நூலகம் ஒன்றை ஏற்படுத்தி வாசிப்புப் பழக்கத்தை பரவலாக்கும் முயற்சியின் தொடக்கமாக 2022 நவ. 14 குழந்தைகள் தினத்தன்று எங்கள் தெருவில் படிப்பகம் ஒன்று தொடங்கப்பட்டது. இப்போது அந்த நூலகத்தின் புத்தக அலமாரியில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கான புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் அவர்களாகவே வந்து புத்தக அலமாரியில் இருந்து தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை எடுத்து வாசித்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் பள்ளி முடிந்து, வீட்டுப் பாடங்கள் முடித்துவிட்டு, இரவு 7.30 மணிக்கு வந்தால் 9.00 மணிவரை புத்தகங்கள் அவர்கள் கைவசம். வாசிப்பது, பாடுவது,கதை சொல்வது, கேட்பது, வரைவது என அவரவர் விருப்பம்போல் மகிழ்ச்சியான நேரமாக அந்நேரங்கள் மாறும்.

ஐநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வரிசையில், குழந்தைகள் வந்தவுடன் ஆர்வமுடன் எடுப்பது வாசிப்பு இயக்க புத்தகங்களைத்தான். சரியான போட்டா போட்டியாகிவிடும், எனக்கு உனக்கு என்று புத்தகங்கள் கைமாறும் அழகே அழகு. படித்ததை திரும்பத் திரும்ப படிக்கிறார்கள். கீழே வைக்க மனமில்லாமல் திரும்பத் திரும்ப புரட்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஓவியங்கள் ஒவ்வொரு நாளும் வரைந்து கொண்டே இருந்தாலும் சலிப்பதில்லை.

குழந்தைகளுக்கு பரிசு: பெற்றோர்கள், உறவினர்கள், நட்பு வட்டங்கள் என எல்லோரும் இப்புத்தகங்களைப் பார்த்துவிட்டு எங்களுக்கும் கிடைக்குமா? இப்புத்தகங்கள் என கேட்கின்றனர். பலரும் இப்புத்தகங்களை தங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் பரிசாக வழங்கவும் விரும்புகிறார்கள். புத்தகக் கண்காட்சியில் கிடைக்குமா? பாடநூல் கழகத்தில் கிடைக்குமா? பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை அணுகலாமா என கேட்ட வண்ணம் உள்ளனர்.

இதுதவிர சிறார் வாசிப்பினை முன்னெடுத்துச் செல்லும் பலரும் இப்புத்தகங்களை பார்த்த நாளில் இருந்து எப்போது தங்களுக்குக் கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஊர்ப்புற நூலகங்களும் இப்புத்தகங்கள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். ஒட்டுமொத்தமாக பொதுச் சமூகம் வாசிப்பு இயக்கப் புத்தகங்களை தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு வாசிக்கவும், வாங்கி வழங்கவும், கொண்டாடி மகிழவும் தயாராக உள்ளது.

- கட்டுரையாளர் மாநில கருத்தாளர், வாசிப்பு இயக்கம், ஆத்தூர், தூத்துக்குடி மாவட்டம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in