

மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பது போல, அறிவை வளர்த்துக்கொண்டு பலன் பெற வேண்டும் என்ற பொன்மொழிக்கு சொந்தக்காரர், மாநில உரிமை, மொழி உரிமை, சமூக நீதி சிந்தனையாளர், அந்த சிந்தனையை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் கஞ்சிவரம் நடராஜன் அண்ணாதுரை. இவரை சி.என். அண்ணாதுரை என்றும் அறிஞர் அண்ணா என்றும் மக்கள் அழைத்தனர்.
இவர் வாழ்வில் நடந்த சுவாரஸ்ய மான சம்பவங்கள்: நெசவாளர் குடும்பத்தில் 1909செப்டம்பர் 15-ம் தேதி நடராஜன் - பங்காரு அம்மாளுக்கு மகனாகபிறந்தார் அண்ணா. பச்சையப்பன் பள்ளியில் பள்ளி படிப்பும், பச்சையப்பன் கல்லூரியில் பட்டப்படிப்பும் படித்தார்.
படிக்கும் காலத்தில் வகுப்புகளுக்கு தவறாமல் செல்கிற அண்ணா நூலகத்தில் நீண்ட நேரம் செலவிடுவார். கல்லூரிக்காலத்தில் தமிழ், ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றது பின்னாளில் அரசியல் மேடைப்பேச்சுக்கு உதவியது. கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த அண்ணா 1931ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர் பேரவையின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாண்டுகள் கழித்து கல்லூரி பொருளாதாரத் துறை மாணவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார். காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக 6 மாதம் பணி செய்தார். பிறகுசென்னை கோவிந்தப்ப நாயக்கன்நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரிய ராக பணியாற்றினார்.
தனது 28 வயதில் 1937-ல் ஈரோடு சென்ற அண்ணா அங்கு பெரியாரின் குடி அரசு, விடுதலை நாளிதழ்களில் துணை ஆசிரியராக 60 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு செய்தார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் உறுதியாக இருந்த அண்ணாவின் திறமையைக் கண்டு வியந்த பெரியார், துறையூரில் நடந்த சுயமரியாதை இயக்க மாநாட்டை தலைமையேற்று நடத்தும் பொறுப்பை அண்ணாவிடம் ஒப்படைத்தார்.
1948-ல் ‘நல்ல தம்பி' திரைப்படத்திற்கு அண்ணா வசனம் எழுதியிருந்தார், 1949ம் ஆண்டு அண்ணாவின் கதை வசனத்துடன் வெளியான ‘வேலைக்காரி' படம் தான் உண்மையில் திரைத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் விதமாகவும், சமானிய மனிதர்களைப் பற்றியும் பேசியது. அண்ணா தமிழக முதல்வராக இருந்த காலத்தில் சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று 1969 ஜனவரி மாதத்தில் பெயர் மாற்றம் செய்து மக்களால் ‘தமிழ்நாடு' என்று அழைக்கப்பட்டது.
1969-ல் மறைந்த அண்ணாவின் இறுதி ஊர்வலத்துக்காக சென்னையில் குவிந்தவர்கள் எண்ணிக்கை 1.5 கோடி என்று மதிப்பிடப்பட்டது. இந்த எண்ணிக்கை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் பதிவானது. 1980-ல் அண்ணா பிறந்தகாஞ்சிபுரம் இல்லம் நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. இன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.