

உலக அளவில் பலமுறை அகழாய்வு செய்யப்பட்டு வரும் நகரங்களில் மிக முக்கியமானது ஆதிச்சநல்லூர். இந்தியாவின் முதல் அகழாய்வும் இங்குதான் தொடங்கப்பட்டது. சுமார் மூன்று நூற்றாண்டு காலம் (1876 - 2023) கிட்டத்தட்ட 147 ஆண்டுகள் பலதரப்பட்ட நாடுகளைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்களால் பல்வேறு கட்ட அகழாய்வுகள் ஆதிச்சநல்லூரில் நடைபெற்றுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் பாளையங்கோட்டையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது ஆதிச்சநல்லூர். அங்குள்ள பறம்பு என்று கூறப்படும் மண்மேட்டில் தான் தொடர்ந்து அகழாய்வுகள் நடைபெற்று வருகிறது.
ஈமக்காட்டில் புதைந்து கிடக்கும் அதிசயம்
இறந்தோர்களை புதைக்கும் ஈமக் காட்டை தேடி கடல் கடந்து ஒருவர் வந்தார் என்றால் அது நம்மால் நம்ப முடிகிறதா? உண்மையில் அப்படி ஒருவர் ஜெர்மன் நாட்டில் இருந்து கப்பலேறி இந்தியாவை வந்தடைந்தார். ஆதிச்சநல்லூரில் உள்ள பறம்பில் புதைக்கப்பட்டு இருந்த மனித புதையல்களை அகழ்ந்தெடுத்து அரிய பல பொருள்களை ஜாகோர் என்ற வரலாற்று ஆய்வாளர் கண்டுபிடித்தார். அவரைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ரீ என்பவரும் பாரீஸ் நகரத்தைச் சேர்ந்த எம் லூயிஸ் லேபிக் என்பவரும் ஆய்வுகள் செய்தனர்.
ஆதிச்சநல்லூரில் ஈம தாழிகளை புதைப்பதற்கு என்றே பாறைகளில் தனித்தனியாக உட்குடைவு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முதுமக்கள் தாழி ஒன்றில் உமிநீங்கிய நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. AMS கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்ததில்உமி நீங்கிய அந்த நெல்மணியின் காலம் கிமு 1155 என கண்டறியப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல்பூர்வ ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மிக நுட்பமாக இறந்தோர்களை அடக்கம் செய்யும் பண்பாட்டினை கொண்டிருந்த மக்களின் வாழ்விடப் பகுதிகள், வாழ்வியல் நடைமுறைகள் எப்படி இருந்தது என்ற கேள்வி நூற்றாண்டுகளை கடந்து இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு விடை காணும் வகையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வாழ்விடப் பகுதிகளிலும் அகழாய்வுகள் மேற் கொண்டு வருகிறது.
தொடர்ச்சியான அகழ்வாராய்ச்சி யின் மூலம் தற்போது இரும்பு காலம் மற்றும் வரலாற்று தொடக்க காலம் என இரண்டு காலகட்ட வாழ்விடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த வாழ்விடங்கள் இரும்பு காலத்திற்கு முன்னும் பின்னும் வாழ்ந்த மக்களின் வரலாற்றை சான்றுகளுடன் உல கிற்கு வெளிப்படுத்தியுள்ளது. அகழ் வாய்வின் போது நுண் கற்கால கருவிகள் கிடைத்திருப்பதன் மூலம் இரும்பு காலத்திற்கு முன்பே மக்கள் இங்கு வாழ்ந்திருக்கக்கூடும் என்றும் அறிய முடிகிறது.
வரலாற்று ஆய்வாளர் ஜெரோம் ஜேக்கப்சன் ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மனிதர்களே தென்னிந்தியாவின் பூர்வ குடிகள் என்றும் மத்திய தரை கடல் மக்கள் தென்னிந்தியாவிற்கு வருவதற்கு முன்னரே தமிழ் பூர்வ குடிகள் இந்த பெரும் நிலப்பரப்பில் வாழ்ந்து வந்ததாகவும் கூறுகிறார். மேலும் ஆதிச்சநல்லூரில் கிடைக்கப் பெற்ற எலும்புக்கூடுகள் மொனோக்கா பகுதியில் கிடைத்த மேல் பழங்கற்கால பெண்ணின் மண்டை ஓட்டுடன் ஒத்து வருவதாகவும் ஜெரோம் கூறியுள்ளார்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர் சூக்கர் மேனும் சுமித்தும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடுகளில் ஒன்று மத்திய தரை கடல்மனிதனின் மண்டை ஓடு என்று கணித்துக் கூறுகின்றனர்.
வரலாற்று ஆய்வாளர்கள் சீவலும் குகாவும் ஆதிச்சநல்லூரில் கிடைக்கப் பெற்ற மண்டை ஓடுகள் சிந்து சமவெளியில் கிடைத்த மண்டை ஓட்டுடன் ஒத்துப்போவதாக கூறியுள்ளனர். வாளும் கத்தியும் காசுகளும் மட்டும் அல்ல எம் மக்களின் எலும்புக்கூடுகளும் கடல் கடந்த நாடுகளுடன் இருந்த தொடர்பை உறுதி செய்யும் சான்றாக அமைந்துள்ளது வியப்பின் உச்சம்.
கட்டுரையாளர்
ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி, குலமங்கலம்,
மதுரை மாவட்டம்