உரையாடல்களால் உயிர்பெறும் வகுப்பறைகள்

உரையாடல்களால் உயிர்பெறும் வகுப்பறைகள்

Published on

நான் வாசிப்பு இயக்க கருத்தாளராக தேர்வு செய்யப்பட்டு அந்தப் பள்ளிக்கூடத்திற்கு முதன் முதலில் போகும்போது மிகுந்த பயத்தோடு சென்றேன். போகும் வழி எல்லாம் என் தந்தை எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே வந்தார். அந்த ஊரின் பின்புலத்தையும் அங்குள்ள மக்களின் செயல்பாடுகள், உணர்வுகளை விவரித்தார். அதனால் அச்சத்தோடு தான் அந்தப் பள்ளிக்குள் நுழைந்தேன்.

ஒழுங்கு கட்டுப்பாடுகள் நிறைந்த ஒரு கிறிஸ்தவ பள்ளியில் படித்த நான், அந்த பள்ளிக்கூடத்தை ஆச்சரியமாக பார்த்தேன். வாசிப்பு இயக்க கருத்தாளராக நான் சென்ற அந்த பள்ளிக்கும் நான் படித்த பள்ளிக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருந்தது. பெரும்பாலான ஆண் குழந்தைகள் சரளமாக தகாத வார்த்தை பேசினர். தன்னை ஒரு பெரிய ஆள் போல் சித்தரித்துக் கொண்டு பேசுவதும் என்னை ஆன்ட்டி என்று கேலி செய்வதுமாக இருந்தார்கள்.

நான் அவர்களுக்கு முதலில் புத்தகங்களை கையில் கொடுக்காமல் அவர்களோடு கொஞ்ச நேரம் பேசினேன். பேசும்போது ஏழாம் வகுப்பில் படிக்கக்கூடிய ஒரு மாணவன் "அக்காஎன் பெயரில் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு இருக்கு தெரியுமா?" என்றான்.எனக்கு தூக்கி வாரிப் போட்டது "என்னடா சொல்ற" என்று மிகுந்தபதட்டத்தோடு கேட்டேன் அப்போதுதான் மற்ற மாணவர்கள் சொன்னார்கள். அவங்க வீட்டுக்கு பக்கத்துல ஏதோ ஒரு சண்டையில கைகலப்பு ஏற்பட்டு இவன் கத்தியை தூக்கிவிட்டான் என்று. காவல்துறையினர் இவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதிலிருந்து இவன் தன்மீது வழக்கு இருப்பதாக பெருமையாக பீற்றிக்கொள்கிறான் என்று சொன்னதும் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். அதன் பின்பு நான் அவர்களிடம் நிறைய உரையாடினேன்.

ச.ஜெபா செளந்தரி
ச.ஜெபா செளந்தரி

நான் அவர்களோடு பேச ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு மாணவருக்குள் இருந்த மனசு வெளிப்பட்டது. குடும்பச்சூழல் தெரிந்தபோது வேதனை அதிகரித்தது. ஒரு நாள் பேராசிரியர் ச. மாடசாமி எழுதிய "நோ சொல்லு" என்ற கதை வகுப்பில் உரக்க வாசிக்கப்பட்டது. அதையடுத்து நீண்ட உரையாடல் இருந்தது. எதற்கெல்லாம் நோ சொல்ல வேண்டும்? ஏன் நோ சொல்ல வேண்டும்? நோ சொல்லாவிட்டால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும். இப்படி கலந்துரையாடல் நீடித்தது. நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்படி ஒரு உயிரோட்டமான உரையாடல் அந்த வகுப்பில் நடக்கும் என்று. எதற்கெல்லாம் நோ சொல்ல வேண்டும் என்று அவர்கள் வரிசையாக சொன்னார்கள். இதுவரை அவர்கள் நோ சொல்லாதது குறித்தும் பேசினார்கள். ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்பதை விவரித்ததோடு மட்டுமின்றி இனிமேல் அவ்வாறு செய்வதில்லை என்றும் தெரிவித்தனர். இது சரி, இது தப்பு, இதை நீ செஞ்சிருக்கலாம், இதை நீ செஞ்சிருக்கக்கூடாது என எந்த ஒரு தீர்ப்பையும் நான் சொல்லவில்லை. அவர்களே பேசினார்கள். எது சரி என்று அவர்களே உரையாடினார்கள். எது தவறு என்று அவர்களே தீர்மானித்தார்கள். இப்படிப்பட்ட உரையாடல் தொடர்ந்து ஒன்றரை மாதங்களாக அந்த வகுப்பில் நீடிக்கிறது.

இப்போது எல்லாம் என்னைப் பார்க்கும் போது "அக்கா வந்துட்டாங்க" என்று ஓடி வருகிறார்கள். வகுப்பறைக்கு வெளியே பழக்க தோஷத்தில் தகாத வார்த்தைகள் சொல்லிட்டாலும் "டேய் அக்கா இருக்காங்கடா" என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

வாசிப்பு இயக்கத்தின் செயல்பாடு இப்படி ஒரு மாற்றத்தை அவர்களது நடத்தையில் ஏற்படுத்தி இருக்கிறது என்பதில் கருத்தாளராக மிகுந்தமகிழ்ச்சி அடைகிறேன். உயிரோட்டமான உரையாடல்களை மாணவர்கள் மத்தியில் வாசிப்பு இயக்கம் ஆரம்பித்து வைத்துள்ளது. இது தொடர்ந்தால் வகுப்பறையில் நல்ல பல மாற்றங்களைக் காண்பது உறுதி.

- ச.ஜெபா செளந்தரி

கட்டுரையாளர்

வாசிப்பு இயக்க கருத்தாளர், மதுரை மேற்கு ஒன்றியம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in