

எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்ற ஔவையாரின் கூற்றிற்கு இணங்க முகத்திற்கு கண் எவ்வளவு முக்கியமோ அதுபோல எண்ணையும் எழுத்தையும் கற்க கரும்பலகை அவசியம்.
என்னதான் வாய்மொழியாகக் கற்பித்தாலும் கரும்பலகை வழியாக எண்ணையும் எழுத்தையும் கற்பிக்கும் முறைக்கு தனி மகத்துவம் உண்டு. பள்ளிக்கூடம் அமைவதற்கு முன்னால் கற்களிலும் குகைகளிலும் எழுதி வந்தான் மனிதன். பலகை என்றாலே மரத்தினால் செய்யப்பட்ட பொருள் என்று அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு மரத்தினால் செய்யப்பட்ட கரும்பலகை பள்ளிக்கூடம் தோன்றிய காலத்தில் உதயமானது.
அரசு நடவடிக்கை
பழைய காலத்தில் பள்ளிகள் எல்லாம் திண்ணைப் பள்ளிக்கூடமாக இருந்தது. நாகரீகம் வளர வளர, மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கூரைக் கட்டிடத்தில் பள்ளிக்கூடம் நடைபெற்றது. அவ்வப்போது கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்து மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால், கூரை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்தது. அப்போது, மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு மண் சுவற்றுடன்கூடிய ஓட்டுக் கட்டிடங்களாக பள்ளிக்கூடம் உருமாறியது. அந்த கட்டிடத்தில் வியர்க்க விறுவிறுக்கத்தான் மாணவர்கள் கல்வி கற்க நேரிட்டது.
அப்போது மூன்று கால்கள் கொண்ட மரச்சட்டத்தில் கரும்பலகையை வைத்துவகுப்புகள் நடத்தப்பட்டன. அந்த கரும்பலகையை வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களாலும் முழுமையாக பார்க்க முடியாது. அதனால் கரும்பலகையில் எழுதிப் போட்டதை மாணவர்களுக்கு காண்பிக்க அங்கும் இங்குமாக கரும்பலகையை திருப்பிக் காட்டிய காலமும் உண்டு.
எதிர்கால தூண்கள்
பின்னர் மாணவர்கள்தான் நாட்டின் எதிர்கால தூண்கள் என்பதால் தமிழக பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதன் பயனாக கூரைக் கட்டிடத்தில் இருந்து கான்கீரிட் கட்டிடங்களுக்கு பள்ளிக்கூடங்கள் மாறின. அதைத் தொடர்ந்து அங்குஅடிப்படை வசதிகளும் அதிகரிக்கப் பட்டன. பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் வகுப்பறைகளில் மின்விசிறிகள்கூட பொருத்தப் பட்டன.
அப்போதுதான் பெரிய வகுப்பறைகளின் சுவற்றில் நீளமான அகலமான கரும்பலகை உருவாக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏனென்றால் வகுப்பறையில் எந்தப் பகுதியில் இருந்தாலும் கரும்பலகையில் ஆசிரியர் எழுதிப் போடுவதை முழுமையாக பார்த்து கற்க முடிந்தது. ஆசிரியர்களுக்கும் இந்த கரும்பலகை பெரிதும் பயனளித்தது. மரச்சட்டங்களில் வைக்கப்பட்டிருந்த சிறியகரும்பலகையில் பாடங்கள் கற்பிக்கும்போது அதில் எழுதியதை அடிக்கடி அழித்து பாடப்பகுதிகளை எழுதிப் போட வேண்டியிருந்தது. ஆனால், சுவற்றில் அகன்ற திரை போல அமைக்கப்பட்ட கரும்பலகையில் அதிக பாடப்பகுதிகளை எழுதி சொல்லித் தர முடிகிறது.
கணினியில் ஸ்மார்ட் போர்டு
இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் வகுப்பறைகள் ஸ்மார்ட் கிளாஸாக மாறிவிட்டன. கரும்பலகை வெள்ளைப் பலகைகளாகிவிட்டன. கணினியில் ஸ்மார்ட் போர்டும் வலம் வருகிறது.
என்னதான் புதுமை புகுத்தப் பட்டாலும் பழமைக்கான மவுசு குறையவில்லை. கரும்பலகையில் தங்களது திறமையை ஆசிரியர்கள் மட்டுமல்ல குழந்தைகளும்தான் தங்கள் திறமையைக் காட்ட முயற்சிக்கின்றனர். ஆம், செயல்வழிக் கற்றல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோது, ஒவ்வொருவகுப்பறையிலும் கரும்பலகைக்கு கீழ்பகுதியில் கீழ்மட்ட கரும்பலகையும் ஏற்படுத்தப்பட்டது. இது மாணவர்களுக் கானது. இதில், சுட்டிக் குழந்தைகள் தங்களுக்கு தெரிந்தவற்றை கிறுக்குவது, ஓவியம் வரைவது, சொற்களை எழுதுவது என வகுப்பறை செயல்பாடுகளை சுவாரசியமாக்குகிறார்கள்.
கருப்பு தங்கம்
குழந்தைகளுக்காக பலரும் வகுப்பறை சூழலை தங்கள் வீடுகளிலேயே கொண்டு வந்துள்ளனர். இப்படி பலபரிமாணங்களைக் கண்டுள்ள கரும்பலகை கற்பித்தலில் மிகச்சிறந்த துணை கருவியாக இன்றளவும் இருக்கிறது. "ஓல்டு இஸ் கோல்டு" என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போல அனைத்து பள்ளிக்கூடங்களிலும் கரும்பலகை கம்பீரமாக காட்சியளிக்கிறது. அத்துடன் மக்களின் மனதிலும் கல்வெட்டு போல அன்றும் இன்றும் என்றும் நீடித்து நிலைத்திருக்கும் மலரும் நினைவுகளில் ஒன்றாகவே நிலைபெற்றுவிட்டது கரும்பலகை எனும் கருப்பு தங்கம்.
- கட்டுரையாளர் இடைநிலை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, முத்து நாகையாபுரம், சேடபட்டி, மதுரை மாவட்டம்.