

ஆயிரம் உறவு முறைகள் இவ்வுலகில் இருப்பினும் ஆசிரியர் மாணவன் உறவு அகிலத்தில் சிறப்பானதாய் கருதப்படுவதன் காரணம் எதிர்பார்ப்புகள் நிறைந்த அத்தனை உறவுகளுக்கு மத்தியில் கொடுப்பதை மட்டுமே கடமையாய் கொண்டு தனிமனித வளர்ச்சிக்கும் உலக வளர்ச்சிக்கும் வித்திடும் புனிதம் நிறைந்த உறவாய் ஆசிரியர் இருப்பதே. அத்தகைய சிறப்பு பொருந்திய உறவு வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உடன் பயணிப்பது ஒரு வரமாகும்.
அந்த வகையில் நான் பெற்ற வரமாய் என் பள்ளிப்பருவ நாள் முதல் மருத்துவ மேற்படிப்பு முடித்திருக்கும் இக்காலம் வரை என்னை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் என் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் இன்று ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராய் பல மாணவர்களுக்கு வழிகாட்டும் எனது வணக்கத்திற்குரிய ஆசிரியர் அருணா ஹரி.
நான் ஆரம்பக் கல்வி கற்ற காலங்களில் அறிவியல் ஆசிரியராக பல மாணவர்கள் மனதில் அறிவியல் ஆர்வத்தை தூண்டினார். அவரது சிறப்பே கடினமான கோட்பாடுகளை எளிமையான நேர்மறையான மேற்கோள்கள் கொண்டு விளக்குவதுதான். எவ்வாறு ஒரு மருத்துவர் நோயைப் பற்றி மட்டும் சிந்திக்காது நோயாளியின் வாழ்க்கை சூழ்நிலையை கவனத்தில் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டுமோ அவ்வாறே ஒரு சிறந்த ஆசிரியர் தன் மாணவனுக்கு புத்தக பாடம் மட்டும் கற்பிக்காது அவன் வாழும் சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடிய வித்தையையும் கற்பிக்க வேண்டும்.
அத்தகைய சிறப்புமிக்க எங்கள்ஆசிரியர் கல்வியுடன் பிற கலைத்திறன்களை ஊக்குவிப்பதை தன் கொள்கையாகவே கொண்டு செயலாற்றுபவர். அவரது அற்புதமான கற்பித்தல்திறனில் முக்கியமாக ஒரு மாணவன் தனக்கு ஏற்படும் சிக்கல்களை தன்னிச்சையாய் கையாளக்கூடிய திறனைமேம்படுத்தி ஒழுக்க நெறிப்படுத்துவது. சமீபத்தில் அவர் தலைமைஆசிரியராய் பணிபுரியும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை அப்பள்ளி மாணவர்களையே நிகழ்த்தச் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்.
கடுகடுப்பான நெறித்த புருவங்களுடன் இருக்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில் புன்னகை மாறாத முகத்தோடு கனிவான வார்த்தை கொண்டு எக்கணமும் பூரிப்புடன் உற்சாகத்துடன் மாணவர்களை அணுகும் அவர் ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் கேட்கும் சந்தேகத்திற்கு அளிக்கும் அதே முக்கியத்தை முதலாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் பதில் தந்து இளம் மனதில் கேள்வி கேட்கும் ஊக்கத்தை வளர்ப்பது தனிச்சிறப்பு.
‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்’. அவ்வண்ணம் நன்கு படிக்கும் மாணவனுக்கும் தகுந்த பாதை காட்டுவது அதிமுக்கியம். ஒரு மாணவனின் குணாதிசயத்தை வடிவமைக்கவும் , எதிர்காலத்தை எவ்வித பயமுமின்றி எதிர்கொள்ளவும் தேவையான நற்பண்புகளை வழங்குவதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.
அப்துல் கலாம் தனது சொற்பொழிவுகளில் ‘மாணவர்களிடம் பெரிய தாக்கத்தை ஆசிரியர்கள் குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் ஏற்படுத்த முடியும்’ என்பதை அவருடைய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர் பறவைகளை கொண்டு நடத்திய பாடமே ஒரு மிகப்பெரிய ராக்கெட் இன்ஜினியராக உருவாக வித்திட்டது என்று குறிப்பிடுவதுண்டு.
எனவே, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களே எதிர்கால உலகின் அடிப்படையை கட்டமைக்கிறார்கள். அத்தகைய உயரிய பொறுப்பினை எங்கள் ஆசிரியர் போன்ற எண்ணற்கரிய ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றி மாணவர்களை மேலோங்கச் செய்து, இந்நாடு செழிக்க வித்திடுவார்கள்.
- கட்டுரையாளர் டாக்டர் திவ்யா, லால்குடி, திருச்சி மாவட்டம்.