

“மங்கையராக பிறப்பதற்குமாதவம் செய்திடல் வேண்டுமம்மா!”என்றார் கவிமணி.“ஆசிரியராக இருப்பதற்குஅருந்தவம் செய்திடல் வேண்டும்!” என்றே எண்ணுகிறேன்.
ஆசிரியரைக் கண்டவுடன் இரு கைகளையும் குவித்து வணக்கம் செய்திட்ட காலம் தற்போது மாறி ஆசிரியரும் மாணவரும் சரிநிகர் சமமாக அமரும் காலகட்டத்தில் இருந்து வருகிறோம். “ஆசிரியர் சொல்வதே தாரக மந்திரம்!” என்ற காலம் மருவி பரிணாமவளர்ச்சி அடைந்து இன்று ஆசிரியரும் மாணவர்களும் கலந்துரையாடும் உயிரோட்டமுள்ள வகுப்பறையாக மாறியுள்ளது. மாணவர்களின் படைப்பாக்கத் திறனை ஊக்கப்படுத்தும் விதத்தில் இன்றைய பாடத்திட்டம் அமைந்துள்ளது மகிழ்ச்சிக்கு உரியது.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக நான் பணியேற்றபோது இருந்த காலகட்டத்திற்கும் இப்போதைய சூழலில் ஆசிரியராக பணியாற்றுவதற்கும் இமாலய வித்தியாசம் உள்ளது. ஆசிரியர்- மாணவர் உறவு என்பது அன்றைய சூழலில் மரியாதை கலந்த பயத்துடன் விளங்கியது.
ஆசிரியராக பணியேற்ற புதிதில் மாணவர்கள் என்னைக் கண்டால் பயந்து நடுங்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் எனக்கு கீழ்ப்படிந்து நடப்பார்கள் என்று தவறான புரிதலில் இருந்தேன். காலம் மாற மாற அனுபவம் கற்றுத்தந்த பாடம் எத்தனையோ உண்டு.
அன்பிற்கு அடிபணியாத உள்ளம் இவ்வுலகில் இல்லை என்பதை எனது 20 ஆண்டுகால அனுபவம் கற்றுத் தந்தது. இரும்பு நட்டுகளும் போல்டுகளும் பொருத்தப்பட்ட மெஷினுக்கு நாம் பாடம் நடத்தவில்லை; மாறாக ரத்தமும் சதையுமாக இருக்கின்ற உணர்வுகளுடன் விளங்கும் குழந்தைகள் நமது மாணவர்கள் என்ற புரிதலை ஏற்படுத்தியது எனது இந்த ஆசிரியப் பணி அனுபவம்.
உணர்வுப்பூர்வமான பணி: யார் வேண்டுமானாலும் ஆசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியராகலாம். ஆனால் அதனை உணர்வுப் பூர்வமாக உணர்ந்து ஆசிரியப் பணியை விரும்பி ஏற்றுக் கொண்ட ஒருவரால் மட்டுமே ஆசிரியப்பணியை நிறைவாக செய்திட முடியும்.
மருத்துவரும் விஞ்ஞானியும் பொறியாளரும் மட்டுமல்லாது உலகில் உள்ளஎத்தனையோ பணிகளை உருவாக்கிவிடுவது ஆசிரியப் பணி. தன்னைவிட தனது மாணவர் உயர்ந்த நிலையில் இருப்பதைக் கண்டும், அதிக வருமானம் பெறுவதைக் கண்டும் பொறாமை கொள்ளாது, மாறாக மிக அதிக உற்சாகமும் மகிழ்ச்சியும் பெறுகின்ற ஒரே பணி ஆசிரியப் பணி.
தனது மாணவரின் படிப்படியான வளர்ச்சியினை கண்கூடாக கண்டு உவகை கொள்கின்ற ஒரு மனம் இருக்கும் என்றால் அது ஆசிரியரின் மனமாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். மாணவனின் உடல் நலனில் ஏற்படுகின்ற மாற்றத்தையும், உளவியல் ரீதியாகஏற்படுகின்ற சிக்கல்களையும் மிகக் கூர்ந்து நோக்குகின்ற பரிவான கண்கள் ஆசிரியரின் கண்கள்.
“நாளைய சமுதாயம் இன்றைய வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகிறது!” என்பதற்கேற்ப ஒரு ஆசிரியர் நினைத்தால் மாணவனை மனிதனாகவும் மாற்றலாம்; பகுத்தறிவு கொண்ட மாமேதையாகவும் மாற்றலாம்.
“நானிலம் போற்றும்
மாமனித சமுதாயம் உருவாவது
அர்ப்பணிப்புடன் பணியாற்றும்
ஆசிரிய சமுதாயத்தினாலே!”
- கட்டுரையாளர்: தலைமை ஆசிரியர், பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை மாவட்டம்.