

பேராசிரியர் பணி முடித்து களைப்புடன் பயணம் செய்து வீடு சேரும் நேரம் மழலையின் நிலைமை பார்த்து கோபம் வந்தது. அருகில் சென்று கண்டிக்க முயன்ற போது, அம்மா நீ மிகவும் களைப்போடு வந்துருப்பீங்க தானே, இந்தாங்க இதைச் சாப்பிடுங்க என்று ஒரு கோப்பையை கையில்கொடுத்த தருணம் அன்பில் என்னோட அம்மாவை மிஞ்சிவிட்டாள், இரண்டு வயது முடிவுறாத மழலை.
நானும் இருபது, இருபத்து ஐந்து வருடம் முன்னாடி சென்று பார்த்தேன். பள்ளி படிப்பு முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் வீட்டின் அருகில் குழந்தைகளுடன் விளையாடியதை நினைத்தேன். அப்போதெல்லாம் மண்ணில்கை வைத்தாலே அடி விழும். இருந்தாலும் மண்ணில் விளையாடுவதை விட்டதில்லை. இப்போதெல்லாம் யாருமே மண்ணில் கை வைத்து விளையாட விரும்புவதில்லை. எல்லாம் மாறிவிட்டது.
இந்நிலையில், உடலின் களைப்பு நீங்க உணவு அல்லது தேநீர், காபி குடிக்க வேண்டும் என்று எனது மழலை தெரிந்து வைத்திருப்பது ஆச்சரியம்தான். அதனால் அன்றைய தினம் களைப்பு நீங்கி நானும்சேர்ந்து விளையாடும் மழலை ஆனேன். விளையாட்டு மழலைவிருப்பம், அவர்கள் சுயமாக விளையாட அனுமதிப்போம்.
- முனைவர் கா.சாகித்யபாரதி, கட்டுரையாளர், கணிதத்துறை விரிவுரையாளர், அரசினர் மகளிர் கல்லூரி, கும்பகோணம்.