

தமிழகத்தில் இதுவரை தொல்லியல் துறையால் 22 மாவட்டங்களில் 40 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு தொடக்கவரலாற்று காலம் முதல் நவீனகாலம் வரையிலான பல வகையானபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு அகழாய்வும் சில சிக்கல்களுக்கும் சில சந்தேகங்களுக்கும் விடையளிக்கின்றன. அதேநேரத்தில் புதிய ஊகங்களையும் கேள்விகளையும் உருவாக்குகின்றன.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட போதிலும் கீழடி அகழாய்வு பெற்ற கவனத்தை மற்ற அகழாய்வுகள் பெறவில்லை. ஏனென்றால் தமிழக நிலப்பரப்பில் நடந்த ஆய்வுகளில் கீழடியில் தான் நாகரீக வளர்ச்சி அடைந்த ஒரு பண்பட்ட சமூகம் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொல்பொருள்கள் உலகத் தமிழ்பரப்பில் மிகப்பெரிய அளவிலான ஆர்வத்தையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
மேலும் தமிழகத்தின் பல அகழாய்வு தளங்களில் கிடைக்கப் பெற்ற பொருட்களுக்கும் கேரளாவில் உள்ள பட்டணம் (முசிறிபட்டிணம்) அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்களுக்கும் இடையே ஒருஒற்றுமை காணப்படுகிறது. இருந்தபோதிலும் மற்ற அகழாய்வு தளங்களில் கிடைக்காத தனித்தன்மை வாய்ந்த செங்கல் கட்டிடங்கள் அதிக அளவில் கீழடி அகழ்வாய்வில் கிடைத்தது என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள்.
சிந்து சமவெளியும் கீழடியும்: சிந்துவெளி நாகரிகம் கி.மு 15-ம் நூற்றாண்டு (3500 ஆண்டுகளுக்கு முன்பு) வாக்கில் இறுதி நிலைக்கு வந்தது எனலாம். கரிமகாலக் கணிப்பு அடிப்படையில் கீழடி பண்பாடானது கி.மு ஆறாம் நூற்றாண்டு (2600ஆண்டுகளுக்கு முன்பு) வாக்கில் தொடங்கியது என அறிய முடிகிறது. சிந்துவெளி நாகரிகத்திற்கும் கீழடி பண்பாட்டிற்கும் இடையேயான கால இடைவெளி ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.
இருந்தபோதிலும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர் பாலகிருஷ்ணன், "சிந்துசமவெளி விட்ட இடமும் சங்க காலம் தொட்ட இடமும் ஒன்று" என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டுதொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். சிந்துவெளி பரப்பில் காணப்படக்கூடிய ஊர் பெயர்களை தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்து அவர் இவ்வாறான ஒரு முடிவுக்கு வருகிறார்.
வரலாற்று அறிஞர் பி.பி.லால்,தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப் பெற்ற பானை ஓடுகளில் இருக்கும்குறியீடுகள் சிந்துவெளி எழுத்துக்களோடு நெருங்கிய உறவு கொண்டவையாக காணப்படுகிறது என்கிறார்.
குறியீடுகள் மற்றும் சிந்துவெளி எழுத்துக்களுக்கு இடையே காணப்படும் ஒற்றுமையானது இவ்விரு பண்பாட்டிற்கும் இடையே மொழியியல் சார்ந்த உறவு இருக்கக்கூடும் என்றஅடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்தபோதிலும் சிந்து சமவெளி நாகரிகம் செழித்து இருந்த காலக்கட்டத்தில் தென்னிந்தியாவில் இன்றைய கேரளா போன்ற பகுதிகளில் மக்கள் உணவு தேடி நாடோடிகளாக அலைந்து திரிந்தனர் என்ற கருத்தும் உள்ளது.
மேலும் செவ்வியல் இலக்கியங்களான சங்க இலக்கியம் படைத்திட்ட தமிழர்களுக்கும் சிந்துவெளி மக்களுக்கும் இடையே தொப்புள் கொடி உறவு இருக்கிறது என்றால், ஏன் சிந்து சமவெளி பரப்பில் இதுபோன்ற இலக்கிய ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனின் கேள்விக்கு நாகரிக வளர்ச்சி அடைந்த சிந்துவெளி மக்கள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்த பிறகு தங்களுடைய அடுத்த கட்ட பங்களிப்பை இலக்கியம் சார்ந்து செய்திருக்கலாம். இவ்வாறு பதில் சொல்லி மழுப்பியிருந்தாலும் அவனது கேள்வி வரலாற்று தேடலை விரிவு செய்ய வேண்டிய தேவையை உணர்த்துகிறது.
- கட்டுரையாளர் ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி குலமங்கலம், மதுரை மாவட்டம்.