கழிவுநீரில் கிடைக்கும் தண்ணீரும் தரமான உரமும்...

கழிவுநீரில் கிடைக்கும் தண்ணீரும் தரமான உரமும்...
Updated on
2 min read

இஸ்ரேல் போன்ற நாடுகள் கழிவுநீரை ஒரு சொட்டுகூட வீணாக்குவதில்லை. சிங்கப்பூரில் கழிவுநீரை பலமுறை சுத்தகரித்து குடிநீராகவே பயன்படுத்துகின்றனர். அப்படி இருக்கும் போது இதுபோன்ற மாற்றத்தை நாம் ஏன் வீட்டிலிருந்து தொடங்கக்கூடாது. வீட்டு கழிவிலிருந்து தோட்டச் செடிகளுக்கு நீரும், உரமும் உருவாக்க முடியும்.

"கழிவு கழிவல்ல கழிவாக்கப்படும் வரை". கழிவு நீரை வகைப்படுத்தி பிரித்து அவற்றை எளிய தொழில்நுட்ப முறைகள் மூலம் மறுசுழற்சி செய்து மறுபயன்பாட்டிற்கு கொண்டு வரலாம்.

சாம்பல் கழிவு நீர் (Sullage) என்பது சமையலறை, குளியலறை, துணி துவைத்தல், உடமைகளைக் கழுவும் நீர் ஆகியவை சேர்ந்து உண்டாகிறது. கழிவறைக் கழிவுகளும் இதில் கலந்தால் அது கருப்புக் கழிவுநீர். சிறுநீர் கழிவு மட்டும் இருந்தால் அது மஞ்சள் கழிவு நீர். மலக்கழிவு பழுப்பு கழிவுநீர் எனப்படுகிறது.

அனைத்து கழிவுகளையும் பயனுள்ள உரமாகவும் நீராகவும் மாற்ற முடியும். என்றாலும் நமது வீடுகளில் எளிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி சாம்பல் கழிவுநீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம்.

இயற்பியல் முறை, வேதியியல் முறை, உயிரியல் முறை, கசடு நீக்குதல் ஆகியவை பொதுவான மறுசுழற்சி முறைகள் ஆகும். திடக்கழிவை அகற்றுதல், வடிகட்டுதல், பாக்டீரியா சிதைவு என மூன்று கட்டங்களாக இது செயல்படுத்தப்படுகிறது.

எப்படி உரமாகிறது: சாம்பல் கழிவு நீரை தொட்டிகளில் (soak pit) தேக்கி வைத்து மூன்று நாட்களுக்குப் பிறகு வடியச் செய்து தோட்டத்திற்கும் கழிவறைக்கும் பயன்படுத்தலாம். இயற்கையாகவே கழிவுநீரில் இ-கோலை, ஸ்ட்ரெப்டோகாகஸ், சூடோமோனாஸ் போன்ற பாக்டீரியாக்கள் உருவாகும்.

இவை காற்றில்லா சுவாசம் மூலம் கழிவு நீரிலுள்ள கொழுப்பு, எண்ணெய், கொழுப்பு அமிலங்கள், உணவு போன்ற கரிமப் பொருட்களை சிதைத்து கசடுகளை படிமங்களாக்கிவிடும் (Sedimentation). இந்தக் கழிவுப் படிமத்தை உலர வைத்து உரமாக பயன்படுத்தலாம்.

தொட்டியிலிருந்து வடிந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் கூழாங்கல், சரளைக்கல், மணல் போன்றவற்றை பதித்து வைப்பதன் மூலம் சிதைக்கும் பாக்டீரியாக்கள் அங்கு தங்கி மேலும் தூய்மை செய்யும். வாய்க்காலின் ஓரங்களில் கழிவு நீரை சுத்திகரிக்கும் தாவரங்களான வாழை, கல்வாழை, விசிறிவாழை, மணிவாழை, சேப்பங்கிழங்கு, கோரைப்புல், நாணல் போன்றவற்றை வளர்க்கலாம். இவ்வாறு நுண்ணுயிரிகளையும் தாவரங்களையும் பயன்படுத்தி கழிவு நீரை சுத்திகரிப்பது "உயிரிய தீர்வு" (Bioremediation) எனப்படுகிறது.

குப்பை ஒன்றும் சப்பை இல்லை: வீட்டுக் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை (Composting) உரமாக மாற்றலாம். இதை விரைவாக சிதைக்க வேண்டுமென்றால் EM (Effective Micro Organism) கரைசலை வாங்கி பயன்படுத்தலாம். இது ஈஸ்ட், பூஞ்சை, ஸ்ட்ரெப்டோமைசிஸ், லாக்டிக் அமில பாக்டீரியா ஆகிய நுண்ணுயிரிகள் உறக்க நிலையில் (Dormant) இருக்கும்படி தயாரிக்கப்படுகிறது.

இது வேளாண் இடுபொருள் விற்பனை நிலையங்களிலோ, மாவட்ட வேளாண்மை அலுவலகத்திலோ கிடைக்கும். பயன்படுத்தும் முறை குறித்தும் விரிவாக அங்கே கேட்டு அறியலாம். குப்பை நொதித்து வெளிவரும் துர்நாற்றத்தை EM கரைசல் கட்டுப்படுத்தி, மட்கச் செய்யும் நுண்ணுயிரித் திரள்களை உருவாக்கும்.

நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் ஒரு நாளைக்கு வெளியேறும் மட்கும் கழிவு சராசரியாக 550 கிராம். மாதத்திற்கு சராசரியாக 17 கிலோ. இதை மக்கச் செய்ய தேவையான EM கரைசல் 150 மி.லி. (30ml உறக்க நிலை கரைசல் 120 ml நீர்).

சேகரிக்கப்பட்ட மட்கும் கழிவுக் குப்பையில் 7 வது,14 வது மற்றும் 30 வது நாளில் குப்பையை கிளறி விட்டு தெளித்து மூடிவிட வேண்டும். 45-60 நாட்களுக்குள் 2.5 கிலோ மட்கிய உரம் கிடைக்கும். நம் வீட்டிலேயே தரமான உரம் இருக்கையில் வீட்டுத் தோட்டம் பூத்துக் குலுங்காதா என்ன..!?

- கட்டுரையாளர் ஆசிரியர் (தாவரவியல்) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in