

பாட புத்தகங்களின் சுமை மற்றும் கடினத் தன்மை மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே துரத்துகிறது. பாடப்பொருள் தவிர்த்து வேறு எந்த புத்தகத்தையும் வாசிக்க பழக்காத நம் குழந்தைகள் கற்பனை வறட்சி மிகுந்தவர்களாக சிந்திக்கும் திறன் அற்றவர்களாக வகுப்பறையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை கல்வியாளர்கள் மட்டுமே பேசி வந்த மேற்கண்ட விஷயங்களை அரசு கவனத்தில் கொண்டு 90களில் தொடங்கிய அறிவொளி இயக்க திட்டத்தின் புதிய வடிவமாக மாபெரும் வாசிப்பு இயக்கம் என்ற திட்டத்தினை பள்ளிகளில் அறிமுகம் செய்து உள்ளது. வாசிப்பு இயக்க திட்ட உருவாக்கம் மற்றும் அதற்கான 53 புத்தகங்கள் வடிவமைப்பில் முன் னாள் பேராசிரியர் ச.மாடசாமி முக்கிய பங்காற்றியுள்ளார்.
வெளிச்சத்தில் வகுப்பறைகள்: வாசிப்பு இயக்கத்திற்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட 53 புத்தகங்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்தாளர்கள் பள்ளியின் வகுப்பறையை நோக்கிப் பயணிக்கின்றனர். வண்ண வண்ணபடங்களும் குட்டிக் குட்டி கதைகளையும் அருமையான பாடல்களையும் கொண்ட புதிய புத்தகங்களைப் பார்த்ததும் ஆர்வம் மேலிட அள்ளி வாரிஅணைத்து கொள்கின்றனர். இதுவரை இந்த வகுப்பறைகள் பார்த்திராத காட்சி அது.
வெள்ளைக் கட்டி, நான் தோசை சுடுவேன், மீனா கேட்ட தோசை, செம இனிப்பு, புது டீச்சர், எனக்கு பிடிச்ச டீச்சர், கிளியோடு பறந்த ரோகினி, கேப்ப களியும் கருவாட்டு குழம்பும், கணக்கு போடும் காக்கா, பாதை, வால் போன்ற புத்தகங்கள் கடந்த இரண்டு வாரங்களில் குழந்தைகளால் அதிகமாக வாசிக்கப்பட்ட புத்தகங்கள்.
கருத்தாளர் அக்காக்கள்: கதை சொல்வதற்காகவே ஒரு அக்கா!, பாடவேளை முழுவதும் கதைகள் மட்டுமே வாசிப்பது இவை இரண்டும் வகுப்பறைக்கு புதிய வெளிச்சத்தினை கொடுத்திருக்கிறது. வகுப்பறைக்குள் பெரும் மாயத்தை செய்யக்கூடிய வித்தைக்காரர்களாக சாகசங்களை செய்யக்கூடிய தேவதைகளாக வாசிப்பு இயக்க கருத் தாளர் அக்காக்கள் மாறத் தொடங்கி இருக்கிறார்கள்.
சிறப்பு அம்சம்: குழந்தைகள் விரும்பும் விதத்தில் அழகான வண்ண படங்களும் 16 பக்கங்களே கொண்ட சிறிய கதையும் வாசிப்பு இயக்க புத்தகங்களின் சிறப்பு அம்சம். குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய கதைகளும் அவர்கள் மிகவும் நேசிக்கும் விலங்கினங்கள் பற்றிய கதைகளும் அவர்கள் விரும்பும் வகுப்பறை பற்றிய கதைகளும் அவர்கள் ஏங்கித் தவிக்கும் எதிர்பார்க்கும் புதிய ஆசிரியர்களை பற்றிய கதைகளும் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொங்கும் மகிழ்ச்சி: வாசிப்பு இயக்க புத்தகங்களில் உள்ள படங்கள் பேசாத குழந்தைகளை எல்லாம் பேச வைக்கிறது. இதுவரை வகுப்பறையில் அனைவராலும் புறந்தள்ளப்பட்டு ஒதுக்கப்பட்டு ஒரு மூலையில் முடங்கி கிடந்த குழந்தைகள் மகிழ்ச்சி பொங்க முன்னே வந்து புத்தகங்களை தொட்டுத் தடவிப் பார்த்து படங்களை கொண்டு அவர்களாகவே கதைகளை கதைக்க தொடங்கி உள்ளனர்.
மனதை கனமாக்குகிறது: திக்கி திணறி வாய் நிறைய சிரிப்புடன் அவர்கள் கதை சொல்லும் விதத்தைக் காண கண்கள் இரண்டு போதாது. இதுவரை வாய் திறந்து எந்த வார்த்தைகளையும் பேசாத குழந்தைகள் படத்தினை பார்த்து அதுகுறித்து தத்தி தத்தி கூறும் திறன் உடையவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் வாசிப்பு இயக்க புத்தகத்திற்கு மட்டுமே முழுமையான பங்குஇருக்கிறது என்று மட்டும் சொல்லிவிட முடியாது. ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு குழந்தை கதை சொல்லும் விதத்தை பார்த்து குழந்தையின் அம்மா கண்ணீர் விட்டு அழுதது இப்பொழுதும் மனதில் அடர்ந்த கனத்தை உருவாக்குகிறது. வாசிப்பு இயக்கத்தின் மிகப்பெரிய பலம் கருத்தாளர்களாக வலம் வரும் அக்காள்கள்தான் என்றால் மிகை யாகாது.
- கட்டுரையாளர்: ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, குலமங்கலம், மதுரை.