

அமெரிக்க எழுத்தாளர் கேத்தரீன் மேயோ எழுதிய ‘மதர் இந்தியா’ (1927) என்னும் நூல் இந்தியச் சமூகத்தையும் பண்பாட்டையும் மிகவும் மோசமாகச் சித்தரித்தது. அதற்கான மறுப்பாக ‘மதர் இந்தியா’ (1957) திரைப்படத்தைத் தயாரித்து இயக்கி வெளியிட்டார் மெஹ்பூப் கான்.
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின்போது நாட்டைத் தாய்க்கு இணையாகப் போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பாரதத் தாய் என்னும் உருவகம் பயன்படுத்தப்பட்டது. மேயோ தன் புத்தகத்தில் இந்தியாவில் பெண்கள் மோசமாக நடத்தப்படுவதாகவும், அதனால் இந்தியாவுக்கு விடுதலை கொடுக்கக் கூடாது என்றும் எழுதியிருந்தார்.
‘மதர் இந்தியா’ திரைப்படம் சுயசார்புடன் இயங்கிய இந்தியத் தாயின் கதாபாத்திரத்தை முதன்மையாக வைத்து உருவாக்கப்பட்டது. அதன் மூலம் தியாகம் உள்ளிட்ட இந்திய விழுமியங்களையும் ஒழுக்கத்தையும் அறநெறிகளையும் பின்பற்றுவதன் மூலம் இந்தியப் பெண்கள் சக்திமிக்கவர்களாக விளங்கினார்கள் என்று காண்பித்தது. அசலான இந்தியத் தாய் என்பதைச் சுட்டுவதற்காகவே நூலின் தலைப்பேபடத்துக்கும் வைக்கப்பட்டது.
இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரமான ராதாவாக அப்போது இந்தி சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்த நர்கிஸ் நடித்திருந்தார். ஏழை விவசாயக் குடும்பத்தின் கடனை அடைக்கப் பாடுபடும் ஒற்றைத் தாயாக இந்தியப் பெண்களின் கடின உழைப்புக்கும் தியாகத்துக்கும் திரையில் அவர் உயிர்கொடுத்தார். அவருடைய கணவராக ராஜ் குமாரும் மகன்களாக ராஜேந்திர குமார். சுனில் தத் ஆகியோரும் நடித்திருந்தனர். நெளஷாத் இசையமைத்திருந்தார்.
இந்தியச் சுதந்திரத்தின் பத்தாண்டு நிறைவை கெளரவிக்கும் விதமாக 1957 ஆகஸ்ட்டில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், இரண்டு மாதம் தாமதமாகவே வெளியானது. வசூலில் மிகப் பெரிய சாதனையைப் படைத்தது, பல திரையரங்குகளில் ஓராண்டுக்கு மேல் ஓடியது. அதுவரையிலான இந்திய சினிமாக்களில் மிகப் பெரிய பொருட்செலவில் உருவான இந்தப் படம்,மிகப் பெரிய வசூலையும் குவித்தது.
விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இந்தப் படம் ஆஸ்கர் விருதுக்காக இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட முதல் படம் என்னும் பெருமையைப் பெற்றது. சிறந்த இந்தித் திரைப்படத்துக்கான தேசிய விருதை வென்றது. இன்றளவும் கல்ட் கிளாசிக்காகக்
கொண்டாடப்படும் ‘மதர் இந்தியா’, பெண்ணிய சிந்தனையின் தாக்கம் காரணமாக விமர்சனத்துக்கும் உள்ளாகிறது. ஆனால் இன்றளவும் சர்வதேச சினிமா விமர்சகர்களின் திறனாய்வுகளில் இந்தப் படத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.