

வருடத்தின் சில நாட்கள் நமக்கு மகிழ்ச்சியை நிரம்பத் தந்து, எப்போது நினைத்துப் பார்த்தாலும் நினைவில் தவழுகின்றன. பள்ளிகளில் பிறந்தநாட்களைக் கொண்டாடும் தருணத்தை நினைத்துப் பார்க்கலாம். பள்ளி குழந்தைகளில் பாதிபேருக்காவது, பள்ளி வேலை நாட்களில் பிறந்தநாள் வருகிறது என்றாலும் கூட, எத்தனை சாக்லேட் உறைகள் மண்ணில் வீசப்படும்.
ஒரு சிறுபகுதியில், சிறு எண்ணிக்கையில் உள்ள குழந்தைகளிடையே இந்தக் கேள்வியை கேட்டுப்பாருங்கள். தலைசுற்றுகிறதா? சின்னச் சின்ன விஷயங்கள்தான் நம் கண்முன்னே பூதாகாரமாய் வந்து நிற்கும்! இப்படி சின்னச் சின்ன விசயங்களில் கவனம் செலுத்தினால் கூட போதும், ஒரு பெரும் சுற்றுச்சூழல் சதி முறியடிக்கப்படும்.
நாம் தினம்தோறும் சந்திக்கும், கேள்விப்படும் விழாக்களை, அரசியல் மேடைகளை உற்றுக்கவனித்தால், நிலத்தின் மீது அதன் பாதுகாப்பின் மீதுசிறிதும் பொறுப்பு இல்லாத செயல்பாடுகளைச் செய்துவருவது புரியும். நாற்பது வயதுகளில் உள்ளவர்கள், பள்ளிக் காலத்தில் பெரும்பாலும் மை ஊற்றிப் பயன்படுத்தும் பேனாக்களையே பயன்படுத்தியிருப்போம்.
தற்போது பள்ளிகளில் பிள்ளைகள் பயன்படுத்தும் பேனாக்களைப் பார்க்கும்போது, மிகவும் விலை உயர்ந்ததாகவும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியனவாகவும் உள்ளன. இந்த பிளாஸ்டிக் எழுதுகோல்கள் மற்றும் பயன்படுத்தும் மாணவர்கள், ஒருவாரத்தில் பயன்படுத்தி நிலத்தில் வீசப்பட்ட பேனாக்களின் எண்ணிக்கை என்ற கணக்கைப் போட்டால், நிலம் எப்படி இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழும்.
வன்னி மரம்: சீமைக்கருவேலி மரங்கள் குறித்து இரு வேறு கருத்துகள் நிலவுவதைக் காண்கிறோம். ஒன்று நிலத்தடி நீர்வளத்தை இம்மரங்கள் உறிஞ்சிக் கொள்ளும். இரண்டாவது கருவேலி மரத்தின் சாதகங்கள் பட்டியலிடப்படுகின்றன. எரிபொருளின் தேவைக்காக வளங்களை அழிக்கிறார்களே என்று சமுதாயக்காடுகளில் விறகுகள்பெறுவதற்காக வளர்த்தெடுக்கவே கருவேலி மரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தமிழ்ப்பெயரில் வன்னி மரம் என்று அழைக்கப்படும் இம்மரத்திலிருந்து தேனீக்கள் தேன் எடுக்க பூக்கள் உள்ளன. மண்ணில் நைட்ரஜனை நிறுவ உதவுகிறது. இந்த மரங்களைக் கொண்டு பாலைவனத்திலும் வனங்களை உருவாக்க முடியும். இதன் மரப்பட்டைகள் கசாயமாக மனிதனின் உடல்நோய் தீர்க்க உதவுகிறது.
வன்னிமரத்தின் பயன்கள் ஏராளம். சமையல் காஸ் வருவதற்கு முன்பு விறகுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கருவேலி மரம் தற்போது நீர்வளம் குறைவதற்கான மூலகாரணமாக சொல்லப்படுவதற்கு பின்னுள்ள அரசியல் என்ன?
கீழடி மண்ணில் நிற்கும்போதே மூதாதையர்களின் எலும்புகளும் உயிர்பெற்று நம்முடன் வார்த்தைகளால் அளவளாவும் உணர்வு எழும்பும். தென்னை மரங்களுக்கிடையே நடைபெற்றுவரும் ஆராய்ச்சியில் 'ரௌலட்டட் வேர் ' என்றழைக்கப்படும் மேற்கத்திய பாணி மட்பாண்டங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளன.
ஊகங்கள் பலவற்றை மறைத்துக்கொண்டுள்ள ஒவ்வொரு பள்ளமும் ஆயிரமாயிரம் கேள்விகளை தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிறது. தகுந்த ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் மதுரை குறித்த ஏராளமான செய்திகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அறிவியல் விதிகள் அறிவோம்: ஆராய்ச்சியுடன் சரித்திர ஆய்வாளர்கள், தமிழ்ப்பெருமக்கள், அகழ்வாய்வில் வல்லுநர்கள், சமூகவியல் வல்லுநர்கள் நிரம்பியசபை ஒன்று கூட்டப்பட்டால், படித்தறிந்தஆதாரங்களோடு, கிடைத்த ஆதாரங்களையும் ஒப்பிட்டு செழுமைப்படுத்தினால் ஏராளமான தகவல்கள் கிடைக்கலாம்.
பழந்தமிழ் மக்கள் உபயோகப்படுத்திய அனைத்தையுமே தகவலாக பார்ப்பதை விட, கலாச்சாரம் சார்ந்து பார்க்கும்போது இலக்கிய வர்ணணைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இன்னும் உணர்ச்சிகரமான வரலாற்றை தெரிந்துகொள்ள முடியும்.
களவுபோகும் வாழிடங்கள். கலக்கத்தில் உயிரினங்கள். வாழிடம் என்பது அனைவருக்குமானது. மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகளும் வாழுமிடமாக பூமியை நிலைப்படுத்த வேண்டும் என்ற சூழலியல் அக்கறையுடன் தொடங்கும் இப்புத்தகத்தின் ஆசிரியர் சு.தினகரன். தமிழன் என்றால் 10 திருக்குறள் சொல்லு பார்ப்போம் என வினவும் நாமே, அறிவியல் விதிகளில் 10 விதிகளைச் சொல்வோமா? அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியா எதிர்நோக்கியுள்ள சவால்கள் பற்றியும் இப்புத்தகத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் ஆசிரியர்.
மக்கள் மீதும் மண்ணின் மீதும் அக்கறையும் பொறுப்பும் கொண்ட கட்டுரைகளை நமக்கு பொதிந்து வைத்துள்ளது "தென்னகத்தின் ஹரப்பா" நூல். ஒவ்வொரு கட்டுரையும் நம் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள அறிவியலை அறிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதோடு சூழலியல் காப்பதன் தேவையையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.