

ஆசிரியர் ஒருவர், நன்னெறிப்பாட வேளையில், சொர்க்கம் நரகம் என்பது பற்றி, ஒரு கதை சொல்லிக் கொண்டிருந்தார்.
“எல்லோரும் சொர்க்கத்துக்குப் போகணும்னுதான் நினைப்பாங்க. நானும் சொர்க்கத்துக்கு போகணும்னு தான் விரும்பறேன். நீங்க எல்லோரும்கூட, சொர்க்கத்துக்கு போகணும்னுதானே ஆசைப்படறீங்க?” என்று கேட்டார். “நான் நரகத்துக்கு போக விரும்பறேன் சார்” என்று ஒரு மாணவன் கூறினான். ஏன் என்று கேட்டபோது, “நீங்க சொர்க்கத்துக்கு போக விரும்பறதா சொன்னீங்களே, உங்களுக்கு பயந்துதான், நான் சொர்க்கத்துக்கு வராம, நரகத்துக்கு போக ஆசைப்படறேன் சார்” என்றா னாம்.
இதை ஒரு கதையாக கருதாமல், இதன் உள்ளார்ந்த கருத்தை சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். பள்ளிக்கு வருவதையும், ஆசிரியர் கற்பிப்பதையும் ஏன் சில மாணவர்கள் வெறுக்கிறார்கள்? பள்ளியை ஏன் நரகமாக கருதுகிறார்கள்?
ஏதோ ஒரு வகையில், ஆசிரியரின் அணுகுமுறை சில மாணவர்களின் மனதில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் இதற்கான காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால்தான் சில மாணவர்கள் பள்ளிக்கு வருவதை வெறுக்கின்றனர்.
அணுகுமுறைதான்... ஒரு ஆசிரியரின் வெளிப்பாடுகளும், அணுகுமுறையும், வார்த்தைப் பிரயோகங்களும், அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு வரவழைக்கத் தக்கதாக இருக்க வேண்டும். ஆசிரியர் என்பதன் பொருள் ‘குற்றத்தை அகற்றுபவர்’ என்பதாகும். எனில், ஆசிரியர் பேசும் வார்த்தைகள் அனைத்தும் மாணவன் மனதில் தோன்றும் குற்ற எண்ணங்களை களையக் கூடியதாக இருக்க வேண்டும் அல்லவா?
இனிய வார்த்தைகளை உபயோகித்து, இனிமையான சூழலை உருவாக்கி, இனிய நடத்தையைப் பயிற்றுவித்து, இனிய பண்புகளை வளர்க்க உதவுவதே ஒரு ஆசிரியரின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் பள்ளியை சொர்க்கமாக கருதி மாணவர்கள் பள்ளிக்கு விரும்பி வருவர். அவ்வாறெனில், பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றிய பயம் ஏதுமில்லாமல், மாணவன் மனதில் அவர் மீது மதிப்பு மட்டும் தோன்றும் வகையில் ஆசிரியரின் செயல்பாடுகள் இருத்தல் அவசியம்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? - வகுப்பறையில், பிரச்சினை வரும்போது, மாணவரின் நிலையில் நின்று ஆசிரியர் யோசிக்க வேண்டும். வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் குடும்ப சூழ்நிலை, அவர்களது உடல்நிலை பற்றிய தகவல்கள் முழுவதும்ஆசிரியர் அறிந்து வைத்திருக்க வேண்டும். மெல்லக் கற்கும் மாணவர்களின் கற்றலில், முன்னேற்றத்தை உடனடியாக எதிர்பார்க்கக் கூடாது. பலர் முன்னிலையில் அவனை கடிந்து பேசக்கூடாது. மேற்கூறியவற்றை ஒரு ஆசிரியர் பின்பற்றும்போது, அந்த வகுப்பறை சொர்க்கமாக இருக்கும்.
உண்மையில், சொர்க்கம் என்பதும்நரகம் என்பதும் வெளியில் உள்ளதல்ல. அது, நம் மனதில்தான் உள்ளது. மன அமைதியோடு இருந்து, அந்த அமைதியை நம் எதிரில் உள்ளவர்கள் மனதிலும் உருவாக்கும் போது, அந்த இடம் சொர்க்கமாக மாறுகிறது.
திட்டக்கூடாது: ‘எப்படி?’ என்றுதானே யோசிக்கிறீர்கள். வாருங்கள், இதுபற்றி சற்று பேசலாம். கணக்கு பாடம் நடத்த வகுப்பறைக்குள் நுழையும்போது, ஒரு மாணவன் ஓவியம் வரைந்து கொண்டிருந்தான் என்றால், உடனேடென்ஷன் ஆகி, அவனை திட்டித் தீர்க்கக் கூடாது.
“ஓவியம் வரைகிறவன் அல்லது வேறு வேலை பார்க்கிறவன் எல்லோரும், அதையெல்லாம் எடுத்து வைச்சிட்டு, இப்போ கணக்கை சற்று கவனிக்கலாமா?” என பொதுப்படையாய் கூறிவிட்டு, கணக்கை நடத்தத் தொடங்க வேண்டும். அனைவரின் முன்னிலையிலும் தவறு செய்த மாணவனின் பெயரைக் கூறாமல் இருந்தால், தன் தவறை உணர்ந்து திருந்துவதோடு மட்டுமல்லாமல், அந்த ஆசிரியரின் மீது மதிப்பும், மரியாதையையும் அந்த மாணவன் ஏற்படுத்திக் கொள்வான்.
எல்லாம் ஆசிரியர் கையில்தான்: மொத்தத்தில், வகுப்பறையைச் சொர்க்கமாக மாற்றுவது ஒரு ஆசிரியரின் கையில்தான் உள்ளது. மாணவர்களின் மனநிலைக்கேற்ப கற்பிக்கும் ஆசிரியரின் வகுப்பறை நிச்சயம் ஒரு சொர்க்கமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.