சுதந்திர சுடர்கள்: மீன் உற்பத்தியில் முன்னேற்றம்

சுதந்திர சுடர்கள்: மீன் உற்பத்தியில் முன்னேற்றம்

Published on

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2022 மீன் உற்பத்தியில் உலக நாடுகளிடையே முன்னணியில் இருக்கிறது இந்தியா. 7,516 கி.மீ. நீளக் கடற்கரையைக் கொண்டுள்ள இந்தியாவில் 3,827 மீனவ கிராமங்கள், 1,914 பாரம்பரிய மீன் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. ஒட்டுமொத்த மீன் உற்பத்தியில் நன்னீர் மீன்பிடித்தல் 55% ஆக இருக்கிறது.

மீன் உற்பத்தியில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக விளங்கும் இந்தியா, உலகளாவிய மீன் உற்பத்திக்கு 7.96% பங்களிக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக, நீர்வாழ்வன வளர்ப்பு மூலம் அதிக மீன் உற்பத்தி செய்யும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.

1950-51இல் 7.52 லட்சம் டன்களாக இருந்த இந்தியாவின் மீன்உற்பத்தி, 2018-19ஆம் ஆண்டுகளில் 125.90 லட்சம் டன்களை(17 மடங்கு அதிகம்) எட்டியிருப்பதாக மத்திய மீன்வளம், கால்நடைபராமரிப்பு - பால்வள அமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த மீன் உற்பத்தி14.73 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மீன் உற்பத்தி 1.07% பங்களிக்கிறது. மீன்வள ஏற்றுமதி மூலம் ரூ.334.41பில்லியன் வருவாய் ஈட்டப்படுவதாக தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் கூறுகிறது.

மத்திய அரசின் மீன்வளத் திட்டங்களின் அடிப்படையில், 2025நிதியாண்டுக்குள் மீன் ஏற்றுமதி1 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் சுமார் 40 லட்சம் மீனவர்கள் இருக்கிறார்கள்; மீன்வளத் துறை இந்தியா முழுவதும் சுமார் 1.45 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை10-ம் தேதி தேசிய மீன் உற்பத்தியாளர்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in