‘ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பெயரில் ஒரே நாளில் 4 ஆயிரம் விதைகளை பதியமிட்ட அரசு பள்ளி மாணவிகள்

ஒரே நாளில் 4 ஆயிரம் விதைகளை பதியமிட்டு நர்சரி உருவாக்கியுள்ள மதுரை அரசு மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள்.
ஒரே நாளில் 4 ஆயிரம் விதைகளை பதியமிட்டு நர்சரி உருவாக்கியுள்ள மதுரை அரசு மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள்.
Updated on
2 min read

மதுரை: மதுரையில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஒரே நாளில் 4 ஆயிரம் விதைகளை பதியமிட்டு நர்சரி உருவாக்கியுள்ளனர்.

மதுரை உலகநேரியில் யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 3000 மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பெயரில் ஒரே நாளில் 4 ஆயிரம் விதைகளை பதியமிட்டு மாணவிகள் நர்சரி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

பதியிமிடல் நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை சுசித்ரா தலைமை வகித்தார். நரசிங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த், மாநில சுற்றுச்சூழல் விருதாளர் அரிட்டாபட்டி ரவிச்சந்திரன், மாவட்ட பசுமை முதன்மையாளர் அசோக்குமார், இயற்கை ஆர்வலர்கள் ராகேஷ், பிரபு, வழக்கறிஞர் மலைச்சாமி, வட்டார பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்துவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது குறித்து பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினரும், பள்ளி நர்சரி ஒருங்கிணைப்பாளருமான மு.ரா.பாரதி கூறியதாவது:

பள்ளி மாணவிகள் கொண்டு வந்த விதைகளை கொண்டு 4 ஆயிரம்பதியம் போடப்பட்டு நர்சரி உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பதியமிடுவது எப்படி, அதற்கு மண், தேங்காய் நார், இயற்கை உரம் எந்தளவு கலக்க வேண்டும் என்பது குறித்து 3 நாள் பயிற்சி அளித்தோம்.

மாணவிகள் கொண்டு வரும் விதைகளை சேகரிக்க பள்ளியில் 10 பைகள் தொங்கவிடப்பட்டன அதில் அவர்கள் மா, பலா, புங்கம், அத்தி, வேம்பு, நாவல், நீர் கடம்பம், வன்னி, இலுப்பை, வாதானி, வன்னி, நெட்டி, மருத மர விதைகளை போட்டனர். தலா 72 குழிகள் கொண்ட 50 பிளாஸ்டிக் டிரேயில் மண், உரம், தேங்காய் நார் கலவையை நிரப்பி மாணவிகள் விதைகளை பதியமிட்டனர்.

சிறப்புப் பரிசு: டிரேயில் விதைகள் ஒரு வாரத்தில் முளைப்பு விடும். செடி 5 வாரத்தில் 3 முதல் 4 இஞ்ச் வரை வளரும். 5-வது வாரத்தில் செடி டிரேயில் இருந்து எடுக்கப்பட்டு நர்சரி பைகளில் வைக்கப்படும். இந்த செடி 4 முதல் 5 மாதங்களில் 2 அடி உயரம் வரை வளரும்.

பின்னர் மாணவிகளின் பிறந்தநாளின் போது செடி பரிசாக வழங்கப்படும். அதனை அவர்கள் விரும்பும் இடங்களில் நட்டு பராமரிக்க வேண்டும். ஓரளவு வளர்ந்ததும் அந்த செடியின் அருகில் நின்று குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in