

மழலை உள்ளம், இனிமையான மாணவப் பருவம், ஆக்கப்பூர்வமான இளைய சமுதாயம் இவை அனைத்தும் பெயரளவில் மட்டுமே இருந்துவிடுமோ? என்ற அச்சத்தினால் உருவானதே இக்கட்டுரை. 35 வருடங்களுக்கு முந்தைய சமுதாயத்தின் மழலை பருவமும் மாணவப் பருவமும் மகிழ்ச்சியாக இருந்ததற்கு காரணமாக நான் எண்ணுகின்ற சிலவற்றை உங்களிடம் பகிர விரும்புகிறேன்.
இரவு 8 மணிக்கு அம்மா சாப்பிடுவதற்கு அழைக்கும் போதும் கூட சுவாரசியமான ஒளிந்து பிடிக்கும் விளையாட்டையும், கல்லா மண்ணா விளையாட்டையும் விட்டுவிட்டு வீட்டிற்கு சென்ற ஞாபகம் இன்னும் நினைவில் உள்ளது.
விடுமுறை நாட்களில் ஆண், பெண் பிள்ளைகள் என்ற வேறுபாடு இன்றி கிட்டத்தட்ட 13 அல்லது 14 வயது வரை சொட்டாங்கல், பல்லாங்குழி, குண்டு விளையாடுதல், பம்பரம் விளையாடுதல், செஸ், கேரம்போர்டு போன்றவற்றை நேரம் போவதே தெரியாமல் விளையாடிவிட்டு மதிய உணவைக்கூட உண்ணவில்லை என்பதை மறந்து விட்ட தருணங்கள் நினைவில் நிற்கின்றன.
7 கல் விளையாட்டு, பச்சைக் குதிரை,காவியம் மணி காவியம், கண்ணாமூச்சி விளையாட்டு, ஓடிப் பிடித்து விளையாடுதல், ஜோடி புறா என்று ஓயாது ஓடிக்கொண்டிருந்த கால்கள் தளர்ந்ததாக நினைவில் இல்லை. அன்றைய காலக்கட்டத்தில் இரவினில் மின்வெட்டு என்பது மிக மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்ட தருணம்.
ஏனெனில் அடுத்தடுத்து இருக்கும் பக்கத்து வீட்டுஅக்காக்களிடம் அரட்டை அடிப்பதற்குஅந்த தருணத்தை விட பொருத்தமானதாக எதுவுமே இல்லை. வளர் இளம் பருவத்தின் அனைத்து விதமான மாற்றங்களை பற்றியும் புரிந்து பகிர்ந்து கொள்வதற்கு ஒத்த வயதுடைய பெண் பிள்ளைகளுடன் பேசிடுவதற்கு ஏதுவாக அமைந்தது அண்டை வீட்டின் மொட்டைமாடி.
ஞாயிறு விடுமுறை என்று வரும்? என்று காத்திருந்து அம்மாவின் அணியில் தங்கையும், அப்பாவின் அணியில் நானும் இணைந்து பல்லாங்குழி விளையாடிய மகிழ்ச்சி இன்றைய காலகட்டத்தில் அலைபேசியில் மூழ்கியுள்ள குடும்பங்களுக்கு கிடைத்திடுமா என்பது கேள்விக்குறியே!
இன்ஸ்டாகிராம், facebook, share chat, whats app, telegram, you tube இன்னும் எத்தனையோ செயலிகளில் நேரம் போவதே தெரியாமல் நண்பர்களுடன் அரட்டை அடித்து பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் மாணவர்களின் மூளை சிந்திக்கும் ஆற்றலையே இழந்திடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. முன்பெல்லாம் தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்தால், “கண்கெட்டிடும்! ரொம்ப நேரம் டிவி பார்க்காதே!” என்று பெரியோர்கள் அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள்.
இன்று பள்ளி சென்று வந்த நேரம் போக மீதியுள்ள மொத்த நேரமும் அலைபேசியிலேயே காலத்தைக் கழித்து வருகின்ற இளைய சமுதாயத்தினரின் நேரமும், சிந்தனைத் திறனும் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. வருங்கால சமுதாயத்தின் வளர்ச்சி என்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முயற்சியால் நிச்சயம் சாத்தியமே!
அலைபேசி என்னும் பெர்முடா முக்கோணத்தில் மாணவன் எனும் படகு காணாமல் போய்விடக்கூடாது. பெற்றோர்தங்களது வேலை நேரம் போக வீட்டிற்கு வந்தவுடன் அலைபேசியையோ மடிக்கணினியோ கைகளில் ஏந்தி கொள்ளாமல் தங்களின் பாசமிகு மழலைச் செல்வங்களை ஏந்தி மகிழலாம். வாசிப்பின் உன்னதத்தை மாணவர்களுக்கு உணர்த்திடும் முக்கிய தூண்டுகோலாக விளங்கிடலாம்.
மழலைப் பருவத்தில் தங்களின் கைகளை பிடித்து பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாத்தா, பாட்டியினை இன்று வளர்ந்த குழந்தைகள் ஆகிய பேரக்குழந்தைகள் அருகில் உள்ள கோயிலுக்கோ, பூங்காவிற்கோ அழைத்துச் செல்லலாம். தெருவிலுள்ள அண்டை வீட்டு குழந்தைகளுடன் விளையாட அனுமதித்து உடலும், உள்ளமும் உவகை கொள்ளச் செய்திடலாம்.
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவ மானது. அவர்களுக்கு எது விருப்பமோ அதில் நிபுணத்துவம் பெறுவதற்கு ஊக்கப்படுத்திடலாம். செடி வளர்த்தல், வீட்டை சுத்தமாகப் பராமரித்தல், செல்லப் பிராணிகளை கவனித்தல் எனஅவர்களது பொழுதுபோக்கு அம்சங்களைகுழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திடலாம்.
சிந்திப்போம்...வழிகாட்டுவோம்...
- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை