

நாங்கள் ஓர் அரசு உதவிபெறும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள். எங்கள் பள்ளியின் நூலகத்தை மறுசீரமைத்து அங்கே பயிலும் குழந்தைகளின் வாசிப்பினைப் பலப்படுத்த வேண்டும். சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு புத்தகம் வாங்கினால் போதுமா?
இதுபோன்ற பல நண்பர்கள் தங்களின் பள்ளியில் ஏதாவது செய்திட வேண்டும் என முனைகின்றார்கள். மற்ற உதவிகளைக் காட்டிலும் நூலகத்தை மறுசீரமைக்க முனைகின்றனர். ஏனெனில் பலருக்கும் அதன் தேவையும் அவசியமும் புரிந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் புத்தகங்களை வாங்கி குவிக்கின்றனர். வாசிக்க வைத்துவிடத் துடியாய் துடிக்கின்றனர். சின்னதாக ஒரு வழிகாட்டுதல் அவர்களுக்கு தேவையாக இருக்கிறது.
நூலகத்தில் நூல்கள் வாசிக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அதைவிட முக்கியமானது நூலகத்தைச் செயல்பட வைப்பது. புத்தகங்களை மட்டும் கொடுத்தால் தனியாக, சுயவாசிப்பு செய்ய எல்லாக் குழந்தைகளாலும் இயல்பாக முடியாது. அதனால் கொஞ்சம் கூடுதல் ஊக்கம் கொடுப்பது முக்கியம். செயல்பாடுகள் மூலம் அதனைக் கொண்டு வரவேண்டும். ஆனால் அதற்கு முன்னர் பல விஷயங்களைச் செய்து அடித்தளத்தை வலுவாகப் போட வேண்டும். இதனை பல வகைகளில் செய்யலாம்.
ஒன்று - இரண்டு ஒருங்கிணைப்பாளர்களை அங்கே கண்டுபிடியுங்கள். அவர்கள் பள்ளி ஆசிரியர்களாக இருத்தல் நலம். குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை இருப்பது நலம். இவர்களுக்கு நிச்சயம் வாசிப்பின் மீது ஈர்ப்பு அல்லது வாசிப்பின் அவசியம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். வாசகர்களாக இருப்பின் நலம், இல்லையெனில் உடனடியாக தொடங்க வேண்டும். நூலகத்தை குழந்தைகள் கொண்டே சீரமைக்க வேண்டும். குழந்தைகளையே கைவசம் இருக்கும் நூல்களைப் பட்டியலிடச் சொல்லலாம்.
சிறார் புத்தகங்கள், படக்கதைகள், குழந்தைகள் புத்தகங்கள், சுவரொட்டிகள், அகராதி, பாடல்கள் என பலவகையான நூல்களை வாங்கலாம். வழக்கமான திருக்குறள், பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள், நீதிநெறிகள் கதைகள் இவைகளைத் தாண்டிக் கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த புத்தகங்களை தேட முயல்வது மிக முக்கியம்.
சிறார் இதழ்களை வரவழைப்பது மிக முக்கியம். பள்ளிக் கல்வித்துறை சார்பாகத் தேன்சிட்டு, ஊஞ்சல் இதழ்கள் வெளிவருகின்றன. அவற்றைப் பள்ளிக்குள் கொண்டுவருவது அவசியம். மாயா பஜார், வெற்றிக்கொடி, விஞ்ஞானத் துளிர், சுட்டி யானை, குட்டி ஆகாயம், பெரியார் பிஞ்சு, பொம்மி, தும்பி, பஞ்சுமிட்டாய் எனப் பல இதழ்கள் வெளிவருகின்றன. இதழ்களிலிருந்து வாசிக்கத் தொடங்கியவர்களே இப்போது அடர் வாசகர்களாக உள்ளனர்.
சரி, குழந்தைகளை எப்படி எல்லாம் வாசிக்க உற்சாகப்படுத்தலாம்? ஒருங்கிணைப்பாளர் கதையை சத்தமாக வாசித்தல், கூடவே, குழந்தைகளைச் சத்தமாக வாசிக்க வைத்தல். ஒருங்கிணைப்பாளர் கதையை வாசிக்கும் போது குழந்தைகள் என்ன வரியை, வார்த்தையை வாசிக்கின்றார் எனப் பின் தொடர்வது. சொல்லினையும் எழுத்தினையும் மிக எளிதான மனதில் இருத்திக் கொள்வார்கள். இதற்கு அனைவரிடமும் அதே புத்தகம் இருப்பது அவசியம். ஒருங்கிணைப்பாளருக்குப் பதில் மற்றொரு குழந்தையையும் வாசிக்க உற்சாகப்படுத்தலாம்.
குழந்தைகளே கூட்டாக வாசிப்பது. ஒருவர் மற்றவரிடம் இருந்து கற்றுக்கொள்வார்கள். இரண்டு மூன்று குழந்தைகளை ஒன்றாக அமர்ந்து வாசிக்க வைப்பது. குழுவில் ஒருவராவது சரளமாக வாசிக்ககூடியவராக இருந்தால் நலம். குழந்தைகள் தனியாக வாசிப்பது. இதுவே நம் இலக்கு. சின்னச் சின்ன புத்தகங்கள், சின்னச் சின்ன கதைகளில் ஆரம்பிப்பது நல்லது. படித்து முடித்துவிட்ட ஓர் உணர்வு அவர்களை இன்னும் உற்சாகமாக வாசிக்க வைக்கும்.
மேலே கூறிய நான்கு வாசிப்பு செயல்பாடுகள் சமக்ரசிக்ஷா - மகிழ்ச்சியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வாசிப்பு கலாச்சாரத்தையும் உருவாக்கும் கையேட்டில் கூறப்பட்டுள்ளவையே. 2020-ம் ஆண்டில் வெளியான கையேடு. பல முயற்சிகள் இப்படித் தொடர்ந்து எல்லாப் பள்ளிகளிலும் வேறு வேறு வடிவங்களில் நடைபெறட்டும்.
- கட்டுரையாளர் சிறார் எழுத்தாளர்; தொடர்புக்கு: umanaths@gmail.com