

ஒருவர் செய்யும் செயல் எதிர்பார்த்தபடி அமையாவிட்டால், “எல்லாம் என் நேரம்” என்று சொல்லி அலுத்துக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இது அலுத்துக் கொள்வதற்காக சொல்லப்பட வேண்டிய வார்த்தை அல்ல, ஒரு செயலை வலுத்துக் கொள்வதற்காக சொல்லப்பட வேண்டிய வார்த்தை.
நிம்மதியாய் வாழ வேண்டும் என்றோ, ஏதேனும் சாதனை புரிய வேண்டும் என்றோ ஆசைப்படுகிற ஒவ்வொருவரும், ஒரு நாளின் 24 மணி நேரத்தை நேர்த்தியாய் பயன்படுத்தக் கற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆம், வாழ்வின் வெற்றி மட்டுமல்லாமல், ஒரு செயலின் நேர்த்தியும் நேர மேலாண்மையைப் பொறுத்தே அமைகிறது. நேரத்தை ஒருவர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதைப் பொறுத்தே, அவர் மனதில் மகிழ்ச்சியும், வாழ்வில் நிம்மதியும் ஏற்படும்.
ஒரு வேலையை செய்து முடிக்க இயலாவிடில், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் அதற்கான பதிலாக, சொல்லக்கூடிய பொதுவான வாக்கியம் எது தெரியுமா?
“எங்கப்பா, எனக்கு நேரமே கிடைக்கல” என்பதுதான் அந்த வாக்கியம். நீங்களும் அந்த வாக்கியத்தை ஒரு முறையேனும் உயயோகித்திருப்பீர்கள் தானே.
“நேரமே கிடைக்கல” என்பது தவறான வார்த்தைப் பிரயோகம் ஆகும். ஏனெனில், நேரம் என்பது கிடைக்கக் கூடியதல்ல. ஒதுக்கக்கூடியது. அதாவது, ஒரு நாளின் 24 மணி நேரத்தைநாம் எவ்வாறு ஒதுக்கி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்துதான் ஒரு வேலையை நம்மால் சிறப்பாக செய்து முடிக்க இயலும்.
வாழ்வில் வெற்றி பெற்ற அல்லது சாதனை படைத்த அனைவரும் தங்களது, நேரத்தை திட்டமிட்டு சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர் என்பதை அவர்களது வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறிய முடிகிறது.
மகாத்மாவாக விளங்கிய காந்தியடிகள், ஏவுகணை மனிதர் என போற்றப்பட்ட ஏ.பி.ஜே. அப்துல்கலாம் போன்றோர் ஒரு நாளில் 18 மணி நேரம் உழைத்துள்ளனர். உண்மையில் 18 மணிநேர உழைப்பு என்பது சாத்தியமா? என்றசந்தேகம் உங்களுக்கு வரக்கூடும். எவ்வளவு நேரம் உழைக்க வேண்டும் என்பது, அந்த வேலையின் முக்கியத்துவம், வேலை முடிய வேண்டிய நாள் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும். நேர மேலாண்மை பற்றிய தெளிவு இதற்கு உதவக்கூடும்.
நிலுவையில் உள்ள வேலைகளை செய்து முடிக்க ஒரு நாளின் நேரத்தை எவ்வாறு திட்டமிடுவது என்பதில் குழப்பம் நிலவுகிறதா? சரி, முதலில் உங்கள் முன் உள்ள வேலைகளை பட்டியலிடுங்கள். உடனடியாக செய்து முடிக்க வேண்டிய வேலையில் தொடங்கி, அடுத்தடுத்த வேலைகளை வரிசையாக எழுதுங்கள்.
ஒவ்வொரு வேலையையும், நீங்கள் செய்து முடிக்க ஆகும் தோராயமான நேரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களது வழக்கமான வேலைக்கிடையில் இந்தவேலையை செய்வதற்கு வாய்ப்புள்ளதா என சிந்தியுங்கள்.
வழக்கமான வேலைகளுடன் சேர்த்து, இதையும் செய்ய இயலாது என கருதுபவர்கள், தங்களது தூங்கும்நேரத்தை சற்றே தியாகம் செய்ய வேண்டும். 18 மணி நேரம் உழைத்து, சிறந்தவர்கள் உறங்கிய நேரம் வெறும் 6 மணி நேரம் மட்டுமே. அவர்களைப் போன்றே தூக்கத்தைக் குறைத்து, திறமையை வெளிப்படுத்தி, வெற்றியை நிலைநிறுத்த நம்மாலும் முடியும் அல்லவா?
திட்டமிட்டு செயலாற்றுவதன் மூலம்மட்டுமே, வெற்றியோ அல்லது மகிழ்ச்சியோ நிலைப்படும். நேரம் இல்லை என்று வருத்தப்படுவதை விட, ஒருநாளில் நாம் பயன்படுத்த தவறிய அல்லது உறங்குகின்ற நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்த சிறு வயதிலேயே பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.
தேவைப்படும் நேர்வுகளில் இவ்வாறு திட்டமிட்டு செயலாற்றினால், தேவையற்ற மன உளைச்சல் நம் மனதைநிரந்தரமாய் அகலும்.
- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர், அரசு உயர் நிலைப் பள்ளி, துண்டல்கழனி, காஞ்சிபுரம் மாவட்டம்