

சாகித்திய அகாடமி அமைக்கப்பட்ட பிறகு ஆங்கில இலக்கியத்துக்காக வழங்கப்பட்ட முதல் விருதைப் பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர்.கே.நாராயண். ‘தி கைடு’ (The guide) என்னும் நாவலுக்காக இந்த விருதை அவர் பெற்றார்.
மால்குடி என்னும் கற்பனை ஊரை ஆர்.கே.நாராயண் தனது கதைகளுக்காக உருவாக்கியிருந்தார். இந்த நாவலும் மால்குடியில் நிகழ்வதுபோல் சித்த ரிக்கப்பட்டிருந்தது.
தனித்துவம் வாய்ந்த தனது கதைகளுக்காக நாராயண் இந்த ஊரை உருவாக்கினார். 1935-இல் வெளிவந்த அவருடைய ‘சுவாமி அண்ட் பிரண்ட்ஸ்’ கதையில்தான் மால்குடி முதன்முதலில் சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்த ஊரில் சரயூ என்னும் கற்பனை நதி, மெம்பி என்னும் அடர்ந்த காடு, 'பாம்பே ஆனந்த பவன்' என்னும் உணவு விடுதி ஆகியவை உண்டு. மக்கள் நெருக்கடி மிகுந்த சந்தைத் தெருதான் ஊரின் மையப் பகுதி. அந்த ஊரிலிருந்த ரயில் நிலையத்தில் கதையின் பல பகுதிகள் நிகழும்.
கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள ஆகும்பே என்னும் கிராமம் மால்குடியாக இருக்கக்கூடும் என பின்னர் கண்டறியப்பட்டது. ‘மால்குடி டேஸ்’ என்னும் பெயரிலான புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர் இந்த ஊரில்தான் எடுக்கப்பட்டது.
‘தி கைடு’ நாவலின் நாயகன் ராஜூ, ஒரு சுற்றுலா வழிகாட்டி. தொல்பொருள் ஆய்வாளர் மார்கோவின் மகள் ரோஸி மீது அவனுக்குக் காதல். ரோஸிக்கு நடனம் மீது அதீத ஆர்வம். ஆனால், அவளது தந்தைக்கு அதில் துளியும் விருப்பமில்லை. ராஜூ, ரோஸிக்கு நடனம் குறித்து நம்பிக்கைகளை விதைக்க, அவர்கள் நெருக்கமாகிறார்கள்.
மகளுடன் பிணங்கி, மால்குடியிலிருந்து மதராஸுக்குப் போகிறார் மார்கோ. ராஜூவும் ரோஸியும் ஒன்றாகிறார்கள். ரோஸி விரும்பியதுபோல் ஒரு பெரிய நடனக் கலைஞர் ஆகிறார். ஆனால், ராஜூவோ மோசடியில் ஈடுபட்டுச் சிறை செல்கிறான். இப்படிக் கதை, வாழ்க்கையின் கோர யதார்த்தத்தில் முடிகிறது. இந்த நாவல் தேவ் ஆனந்த நடிப்பில் ‘கைடு’ என்னும் பெயரிலேயே இந்தித் திரைப்படமாகி வெற்றி பெற்றது.