

கடந்த 1947 ஆகஸ்ட் 14இல் நம் நாட்டிலிருந்து பிரிந்தது பாகிஸ்தான் மட்டுமல்ல. அரசியல் காரணங்களுக்காக நடந்ததாகக் கருதப்படும் இப்பிரிவினையால் இரண்டு நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான உறவினர்களும் பிரிந்தார்கள். பஞ்சாபின் மூன்றில் இரண்டு பங்கு பாகிஸ்தானுடன் சென்றுவிட்டது.
ஒவ்வொரு வருடமும் சுமார் இரண்டாயிரம் பேர் அமிர்தசரஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜலியான்வாலா பாக்கிலிருந்து வாகா எல்லைக்கு ஊர்வலமாக சென்றுவந்தனர். வாகா எல்லை அருகில் உள்ள அட்டாரி கிராமத்தில், மெழுகுவர்த்திகளை ஏற்றிவிடியவிடிய நடைபெறும் சமாதான விழாவில் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தானில் இருந்தும் பல முக்கியப் பிரமுகர்கள் இந்தியாவுக்குவந்து இதில் கலந்துகொண்டுள் ளனர். சமீப ஆண்டுகளாக பாதுகாப்பு காரணமாக, சிலருக்கு மட்டும் அட்டாரி-வாகா எல்லையில் மெழுகுவர்த்தி ஏற்ற அனுமதி கிடைக்கிறது.
பிரிவினைக் கலவரத்தால் பலியானவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாபிகள். அவர்களுக்காக பாகிஸ்தான் அருகே இருக்கும் அட்டாரி-வாகா எல்லையின் இந்தியப் பகுதியில் ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. சமீப ஆண்டுகளில் சில கி.மீ. தொலைவு உட்பகுதிக்கு இது இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது. ஆகஸ்ட் 14இல் செல்பவர்கள் இங்குதான் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
பாகிஸ்தான் சென்று திரும்புதல்: பஞ்சாப் நாட்டுப்புற பாடல்கள் ஆய்வு மையத்தின் தலைவர் பூபேந்தர் சிங் சாந்து, பஞ்சாப் அரசுமின்துறையின் உதவி பொறியாளரும்கூட. பிரிவினை குறித்து அவர்நினைவுகூர்ந்த போது, “இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது குறைந்த பட்சம் ஆறு மாதங்களில் பத்து லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.
இரு நாடுகளின் மதவாதிகளால் ஏற்பட்ட பிரிவினைக்கலவரங்களால் உயிரிழந்தவர்களில் இந்து, முஸ்லிம், சீக்கியர்கள் அடக்கம். 1947-க்குப் பிறகு மாவட்ட துணை ஆட்சியர்களிடம் ஜாமீன் அளித்து, சிறப்பு அனுமதி பெற்று பலர் பாகிஸ்தானுக்கு சென்று வந்தனர். பாகிஸ்தானியர்களும் இந்தியாவிற்கு வந்து சென்றனர். இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்ட பின், இது மாறி விட்டது” என்கிறார்.
துண்டிக்கப்பட்ட உரையாடல்: தொடர்ந்த நண்பர் பூபேந்தர் சாந்து, ‘சீக்கியர்களின் குருவானகுரு நானக் பிறந்த இடம் பாகிஸ்தானில் உள்ளது. ஆனால், அங்குஎளிதாகச் செல்ல முடிவதில்லை. ‘சாரே ஜஹான்சே அச்சா! இந்துஸ்தான் ஹமாரா!‘ என நாம் பாடிக் கொண்டிருக்கும் தேசியப் பாடலை பாடிய அல்லாமா இக்பாலின் வீடும்பாகிஸ்தானில் உள்ளது. அங்குள்ளஉறவினர்களுடன் தொலைபேசியில் சாதாரணமாக நடை பெற்றுக்கொண்டிருந்த உரையாடல்கள், உளவாளி பட்டத்திற்கு அஞ்சி நின்றுபோயின’ என ஆதங்கப் படுகிறார்.
எனவே, எல்லையில் பதற்றத்தைத் தணித்து, தொடக்கக் காலத்தில் இருந்தபடி விசா நடைமுறைகளைத் தளர்த்தி, இரண்டு நாடுகளிடையே மீண்டும் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.
பிரபல பஞ்சாபி எழுத்தாளரும், கவிஞருமான பீபா பல்வந்த் சிங்கூறுகையில், ‘பாகிஸ்தான் பஞ்சாபில் வாழும் முஸ்லிம்களும் பஞ்சாபி மொழி பேசுகின்றனர். இரண்டு நாட்டு பஞ்சாபிகளுக்காக கதை, கவிதை நூல்கள் இப்போதும் வெளிவருகின்றன. அவற்றைப் படித்து இன்புறுகிறோம்.
ஒரு காலத்தில் லாகூர்வாசிகள் உணவருந்த வேண்டி, 50 கி.மீ. தொலைவிலுள்ள அமிர்தசரஸின் ஹோட்டல்களுக்கு வந்து சென்றுள்ளனர். பாகிஸ்தான் நாளிதழ்களைப் படிக்காமல் இங்குபலருக்கு பொழுது ஓடாத காலம்ஒன்றிருந்தது. உறவினர்களைப் பிரிவதுதான் எவ்வளவு வேதனை?‘ என உணர்ச்சி வசப்படுகிறார்.
இரும்பு வேலி: பாகிஸ்தானின் இந்திய எல்லையில் உள்ள வாகா கிராமத்தில் அதேதினத்தில் சமாதான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் இந்திய முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு திரும்பிய காலம் ஒன்று உண்டு. இப்படி சூழல் இணக்கமாக இருந்த காலத்தில் ஓடிய சம்ஜாவுதா எக்ஸ்பிரஸ் ரயிலும் பேருந்து வசதியும், தம் நாட்டு எல்லையைத் தாண்டுவதை இப்போது நிறுத்திவிட்டன. இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையே உள்ள இரும்பு வேலியை உருக்கி பாலமாக்க முயலும், பஞ்சாபிகளின் கனவு தொடர்கிறது.