என் வீட்டுத் தோட்டத்தில்...
தக்காளி என்ற வார்த்தையை இப்போது உச்சரிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதன் விலை உயர்ந்ததே இதற்கு காரணம். டீக்கடை முதல் டிவி விவாத நிகழ்ச்சி வரை தக்காளி பெரும் பேசு பொருளாகிவிட்டது.
தக்காளிக்காக இனிமேல் நீங்கள் கடைக்கு, ரேஷன் கடைக்கோ போக வேண்டாம். சாலையோர வியாபாரியை எதிர்பார்த்தும் காத்திருக்க வேண்டாம். கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன் என்பார்கள். அதுபோலத்தான் தக்காளிச் செடிகளை வீட்டைச் சுற்றியோ, மாடியிலோ வளர்த்து ஆண்டு முழுவதும் பயன்பெறலாம். பொதுவாக நல்லவடிகாலுடன் கூடிய மண் தக்காளிக்கு உகந்தது. தென்னை நார் கழிவு கலந்த மண் உகந்தது.
செர்ரித் தக்காளி, திராட்சைத் தக்காளி, கலப்பினத் தக்காளி, மரபு வகை நாட்டுத் தக்காளி என சில வகைகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். பொதுவான ரகமான மரபுவகை தக்காளிகளை வீட்டில் வளர்ப்பதும் பராமரிப்பதும் எளிது.
நாற்றாங்கால்: தயாராக உள்ள மண்ணை சிறிய தொட்டிகளிலோ, கோப்பைகளிலோ தளர்வாக ஈரத் தன்மையுடன் நிரப்பி விதைகளை ஊன்ற வேண்டும். மிதமான வெயில் படும் இடத்தில் வைத்துதினமும் நீர் தெளிக்க வேண்டும். 7 முதல் 10 நாட்களுக்குள் தக்காளி நாற்றுகள் முளைத்துவிடும். 3 வாரங்கள் வரை நாற்றங்காலில் வளர்க்கலாம்.
பின்னர் வளர்ப்புப் பைகளிலோ, தொட்டிகளிலோ அல்லது, நேரடியாக தோட்ட மண்ணிலோ நடவு செய்யலாம். சற்று ஆழமாக நடவு செய்யும் போது அதிக வேர்கள் பிடித்து செடிகள் நன்கு திடமாக வளரும். 6 முதல் 8 மணி நேரம் வரை சூரிய ஒளி நேரடியாகப்படும் இடத்தில் செடிகளை வளர்க்க வேண்டும். லேசாக அசையும் அளவிற்கு காற்றோட்டம் உள்ள இடத்தில் இருப்பது மகரந்தச் சேர்க்கையை ஊக்குவிக்கும்.
நீர் பாய்ச்சுதல்: தக்காளிக்கு எப்பொழுதும் ஈரம் இருப்பது அவசியம். மேல்மண் உலர்ந்த பிறகு நீர் பாய்ச்ச வேண்டும். நிறைய ஊட்டச்சத்து தேவைப்படும் செடி வகை என்பதால் 15 நாட்களுக்கு ஒரு முறை தொழு உரம் இடுவது சிறந்தது. திரவ கடல்பாசி உரத்தை (Seaweed Liquid Fretilizer 20ml 5 Lwater - 300ml per plant) பயன்படுத்துவதால் செடிகளுக்கு சத்துக்கள் கிடைப்பதோடு நத்தை பூச்சிகள் வரவிடாமல் தடுக்கும்.
2 அடி உயரம்வரை வளர்ந்த செடிகளை தாங்கி நிற்கும்படி பந்தல் அமைப்பது அவசியம். இதனால் செடிகள் மண்ணில் படர்ந்து தக்காளிகள் வீணாவதையும், நோய்த் தொற்றையும் தவிர்க்கலாம்.
அறுவடை காலம்: 7 முதல் 10 நாளில் விதை முளைக்கும். 20 நாட்களில் நாற்றங்கால் தயாராகிவிடும். பின்னர் நாற்று நடவு. 25 முதல் 30 நாட்களில் பூக்கள் மலரும். 35 முதல் 45 நாட்களில் காய்கள் காய்க்கும். தக்காளிப்பழம் 60 முதல் 100 நாட்களில் தக்காளி கிடைக்க தொடங்கும்.
ஒரு தக்காளி செடியில் 20 முதல் 30 பழங்கள் வரை கிடைக்கும். அதாவது 2 அல்லது 3 கிலோகிராம். வீட்டில் ஐந்து தக்காளி செடிகள் இருந்தால் ஒரு கிலோ தக்காளி கிடைக்கும். ஒரு தக்காளி செடியின் வாழ்நாளில் 5 முதல் 7 முறை பழங்கள் அறுவடை செய்யலாம். பொதுவாக வருடத்தில் 7 முதல் 10 முறை அறுவடை செய்யலாம். வயலில் தக்காளி பயிரிட்டால் ஏக்கருக்கு 8 முதல் 10 டன்கள் வரை கிடைக்கும்.
- கட்டுரையாளர்: தாவரவியல் ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்.
