வாசிப்பு என் சுவாசிப்பு

வாசிப்பு என் சுவாசிப்பு
Updated on
2 min read

தலை குனிந்து எனை வாசித்தால் தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைப்பேன் என்கிறது புத்தகம். வாசிப்பு என்பது அன்றாட வாழ்க்கையில் இயல்பான ஒரு செயல்பாடாக இருக்க வேண்டும். அன்றாடம் நாம் குளிப்பது, சாப்பிடுவது போல குழந்தையின் வாசிப்பு கருவறையில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

குழந்தை கருவறையில் இருக்கும் போதே தாய் நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் குழந்தையின் மூளை விருத்தி அடைகிறது என்கின்றனர் அறிஞர்கள். நான்கு மாத குழந்தையை டிவி முன் அமர்த்தினால், வாசிப்புத் திறன் குறைவதற்கு நாமே அடிக்கல் நாட்டுகிறோம்.

மாறாக பூக்கள், பறவைகள், விலங்குகள், நிறைந்த புத்தகத்தை புரட்ட கற்றுக் கொடுங்கள் வாசிப்பின் ஆர்வம் தானாகவே ஆரம்பித்து விடும். குழந்தைகளுக்கு பிறந்தநாளா? வீட்டில் விசேஷமா? பொம்மை, விளையாட்டு சாதனங்கள் வாங்கி பரிசளிப்பதில் காட்டும் ஆர்வம் புத்தகம் வாங்கி பரிசளிப்பதில் இல்லை என்பது கவலை தரும் உண்மை.

எதிர்கால வெற்றிக்குரிய திறவுகோல்: வாசிப்பு என்பது குழந்தைகளின் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான ஒரு ஆயுதம். எதிர்கால வெற்றிக்குரிய ஒரு திறவுகோல்.

எழுத்தாற்றல் குறைந்த பிள்ளைகள் பற்றிய ஆய்வில் அவர்களுடைய வாசிப்பு திறன் குறைவாக இருந்ததே என்று கண்டறியப்பட் டுள்ளது.

ஒரு "நூலகம் திறக்கப்படும்போது பத்து சிறைச்சாலைகள் மூடப்படுகின் றன" என்றார் மகாத்மா காந்தி. "நூல் பல கல்" என்றார் அவ்வையார்.

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்றார் வள்ளுவர். "காலம் என்னும் ஆழ்கடலில் நீந்தி அறிவு என்னும் துறைமுகத்தை அடையகலங்கரை விளக்கமாய் விளங்குவது நூல்களே" என்றார் தாகூர். "உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோலவே மனதுக்கு பயிற்சி புத்தக வாசிப்பு" என்கிறார் சிக்மன் பிராய்ட்.

என் வாசிப்பின் தொடக்கம்: என் தாயார் அதிகம் படிக்காதவராக இருந்தாலும் நன்கு எழுத படிக்க தெரிந்தவர். அப்பொழுதெல்லாம் மளிகை பொருட்களை கட்டி தரும் பேப்பரில் இருக்கும் சின்ன சின்ன செய்திகளை கூட வாசிப்பார். அதைப்பார்த்து வளர்ந்த நான் சிறிது சிறிதாக அவர்களைப் போலவே சிறு பேப்பர் கிடைத்தாலும் எடுத்து வாசிக்கஆரம்பித்தேன். அன்று முதல் அது ஒரு வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.

வீட்டில் தொலைக்காட்சி இல்லா ததால், பொழுதுபோக்கே புத்தக வாசிப்பு என்றானது. அதன்பிறகு படிப்பிற்கு தேவையான குறிப்புகளை எடுக்கவும் உதவியாக இருந்தது.சிறு வயது முதல் வாசிப்பதால் எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

வாசிக்கும் போது ஏற்படும் உணர்வு: நான் எப்பொழுதும் வாசிக்கும் போது அந்த சூழ்நிலையில் இருப்பது போன்றே ஒரு உணர்வு ஏற்படும். சோகமான ஒரு நிகழ்வை வாசிக்கும் போது மனதில் ஒரு சோகமான உணர்வு ஏற்படும். மகிழ்வான நிகழ்வை வாசிக்கும் போது மனதில் இனம் புரியாத மகிழ்வு ஏற்படும். இயற்கை சூழல் பற்றிய கதையோ கட்டுரையோ வாசிக்கும் போது இயற்கைச் சூழலில் சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியாய் மனம் சிறகடித்து பறப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். அதை வாசிப்பின் மூலம் நான் அதிகம் உணர்ந்திருக்கிறேன்.

விதைகள் பின்னால் விருச்சங்கள்: குழந்தைகள் இந்நாள் விதைகள்பின்னால் விருச்சங்கள். எதிர்காலத்தில் மரச்சட்டங்களாகவும், அடுப்பெரிக்க உதவும் விறகுக் கட்டைகளாகவும் ஆகாமல் நல்ல நிழல் தந்து உதவும் விருச்சங்களாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய ஆற்றல் பெற வேண்டும்.

இந்த உண்மையை உணர்ந்து வாசிப்புத் திறனை வளர்த்துவாழ்க்கை என்னும் இனிய பயணத்தை சீருடனும் சிறப்புடனும் பயனுள்ள வகையில் கழிக்க சுவாசிக்கும் வரை வாசிக்கும் மனிதன் ஆவோம்!....

- கட்டுரையாளர், ஆசிரியர், பல்லோட்டி தொடக்கப்பள்ளி நாகமலை, மதுரை மாவட்டம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in