

பிரிட்டிஷ் ஆட்சியில் சமூகத்தில் பின்தங்கிய மக்களின் விடுதலைக்காக போராடியவர் புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன். பத்திரிகையாளரான அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ஓயாமல்பாடுபட்டார். கல்விஉரிமை, தீண்டாமை ஒழிப்பு, ஆலய நுழைவு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சட்டமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்தார். வட்டமேசை மாநாடு, பூனா ஒப்பந்தம் ஆகியவற்றின் வாயிலாக ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையை பெற்று தந்தார்.
மறுக்கப்பட்ட கல்வி: 1850-ம் ஆண்டுக்கு முன்பு வரை மெட்ராஸ் மாகாணத்தில் பள்ளி, கல்லூரிகள் அதிகளவில் தொடங்கப்படவில்லை. கிறிஸ்துவ அமைப்பினர், ஆங்கிலேயரின் முயற்சியால் அங்கொன்றும் இங்கொன்றுமாக பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஒரு மாவட்டத்திற்கு ஒன்றிரண்டுபள்ளிகள் இருந்தாலே பெரிய விஷயமாக இருந்தது.
குருகுல கல்வி முறையில் உயர்சாதியினருக்கு மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் பிற சாதியினர் ஆங்கிலேய பள்ளிகளில் சேர விரும்பினர். அத்தகைய பள்ளிகளில் ஒடுக்கப்பட்ட மாணவர்களை சேர்ப்பதற்கு, பிற சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆசிரியர்கள் அவர்களுக்கு பாடம் கற்பிக்கவும் மறுத்தனர். பள்ளிக்கூடங்களிலே பகிரங்கமாக தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது.
1838-ம் ஆண்டு செங்கல்பட்டில் இருந்த கொலம்பஸ் பள்ளியில் 3 ஒடுக்கப்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் படித்த 100 உயர்சாதி மாணவர்களும் வகுப்புக்கு வராமல் புறக்கணித்த சம்பவமும் நடந்திருக்கிறது.
சாதி மீறி சாதித்தவர்: இத்தகைய காலக்கட்டத்தில், இரட்டைமலை சீனிவாசன் செங்கல்பட்டு மாவட்டம் கோழியாளத்தில் 1860-ம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி இரட்டைமலை – ஆதியம்மை தம்பதிக்கு மகனாக பிறந்தார். அவரது தந்தை செல்வந்தராக இருந்த போதும் சீனிவாசனால் எளிதாக கல்வி கற்க முடியவில்லை. பள்ளிக்கூடங்களில் சாதி கொடுமையை அனுபவிக்க நேர்ந்தது. இதனால் ஊர் விட்டு ஊர் செல்ல நேர்ந்தது. தஞ்சாவூருக்கு சென்று பெரும் சவால்களுக்கு மத்தியில் பள்ளியில் சேர்ந்தார். அங்குதீண்டாமை காரணமாக பிற மாணவர்களோடு பழகவும், விளையாடவும் முடியாமல் தவித்தார். ஏராளமான தொல்லைகளுக்கு மத்தியில் பள்ளி படிப்பை முடித்தார்.
கல்லூரியில் படிக்க சென்ற போதும்அவருக்கு இதே பிரச்சினை தொடர்ந்தது. அதற்காக கோயம்புத்தூருக்கு இடம்பெயர்ந்த அவர் அரும்பாடுபட்டு கல்லூரியில் சேர்ந்தார். அந்த கல்லூரியில் மொத்தமாக 400 மாணவர்கள் இருந்தனர். அதில் 390 பேர் பிராமணர்கள். 10 பேர் மட்டுமே வேறு சாதியினர். இதில் இரட்டைமலை சீனிவாசன் மட்டுமே ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர். இதனால் கல்லூரியிலும் சாதி கொடுமைகளை அனுபவிக்க நேர்ந்தது.
இத்தகைய கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்காக தினமும் கல்லூரி மணி அடிக்கும் வரை மரத்தின் பின்னே ஒளிந்திருப்பார். மணி அடித்த பின்னரே வகுப்பறைக்கு செல்வார். வகுப்பு முடிந்து மணி அடித்த உடன், முதல் ஆளாக வெளியே ஓடிவிடுவார்.
ஏனென்றால், ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் எவராவது தன்னை சாதி ரீதியாக அவமானப்படுத்திவிடுவார்கள் என்றஅச்சம் காரணமாக இதையே வழக்கமாக கொண்டிருந்தார். இவ்வாறு கல்வி கற்பதற்காக பட்ட கஷ்டங்களை இரட்டைமலை சீனிவாசன் தனது 'ஜீவிய சரித்திர சுருக்கம்' நூலில் விவரித்திருக்கிறார்.
முதல் பட்டியலின பட்டதாரி: ‘கல்வியின் மூலமாக மட்டுமே மாற்றம் நிகழும்' என்பதை ஆழமாக நம்பிய இரட்டைமலை சீனிவாசன் படிப்பில் கவனம் செலுத்தினார். 3 ஆண்டுகள் கஷ்டப்பட்டு கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடித்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் மேற்கத்திய கல்வி முறையில் பட்டம்பெற்ற முதல் பட்டியலின பட்டதாரி என்ற பெருமையை இரட்டைமலை சீனிவாசன் பெற்றார்.
இந்திய அளவிலும் இவரே முதல் தலித் பட்டதாரி எனவும் கருதப்படுகிறது. ஏனென்றால் 1880களில் பள்ளி, கல்லூரிகளும் அதிகளவில் ஆரம்பிக்கப்படவில்லை. பெருந்தலைவர் எம்.சி.ராஜா, பாபாசாகேப் அம்பேத்கர் போன்றோரும் அப்போதுபிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கல்விக்காக போராடியவர்: கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார். பள்ளிகளில் அனைத்துசாதியினரும் படிக்கும் வசதி, அனைவருக்கும் இலவச கல்வி, ஆதிதிராவிடர்களுக்கான தனிப்பள்ளிகள், விடுதிகள், தொழிற்கல்வி ஆரம்பிக்க வேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.
ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, வெளிநாடு சென்று படிக்க நிதியுதவி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் குரல் கொடுத்தார். இதன் விளைவாகவே ஒடுக்கப்பட்டோருக்கு கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம், சமூக விடுதலை சாத்தியமானது.
ஜூலை 7 இரட்டை மலை சீனிவாசன் பிறந்த நாள் |
- கட்டுரையாளர், தொடர்புக்கு: vinoth.r@thehindutamil.co.in