

“மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டு மம்மா!” என்றார் கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை.
பெண்களுக்கான சம உரிமைமறுக்கப்படும் போதும், பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகும் போதும் அதனை தட்டிக் கேட்கின்ற உரிமை ஏற்படும் போது, அது ஒரு இயக்கமாக மாறுகிறது.
1909-ல் அமெரிக்காவிலும், 1910-ல் ஜெர்மனியிலும், 1917-இல் சோவியத் ரஷ்யாவிலும் என்று பல நாடுகளிலும் பெண் உரிமை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது. 1960-ல் பெண்ணுரிமைக்கான இயக்கமாக மாறியது. 1911-ல் ஆஸ்திரியா, ஜெர்மனி, டென்மார்க், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இந்த இயக்கம் தொடங்கி 2011-ல் நூற்றாண்டு நிறைவை நோக்கி இந்தப் பயணம் சென்றது. 1975-ல் ஐக்கிய நாடுகள் மார்ச் 8-ஐ சர்வதேச பெண்கள் தினமாக அறிவித்து விடுமுறையும் அளித்து சிறப்பித்தது.
மகளிர் தினம்: இன்றும்கூட மார்ச் 8 அன்று தனது அம்மா, தோழி, சகோதரி, காதலி மற்றும் மனைவிக்கு பூக்கள் கொடுத்தும், பரிசுப் பொருட்கள் கொடுத்தும் தங்களது அன்பையும் பெண்களின் மீது அவர்களுக்கு உள்ள மரியாதையையும் ஆண்கள் வெளிப்படுத்துகின்றனர்.
ஆனால், 12-ம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் செய்யும் நிலை வேதனையளிக்கிறது. இதே மாணவிகளை சிறுவயதில் நீ என்னவாகப் போகிறாய்? என்று கேட்கும்போது டாக்டராகப் போறேன், டீச்சராகப் போறேன், போலீசாக போறேன் என்று கூறிய பெண் குழந்தைகள் 12-ம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்று, 40 அல்லது 45 வயதுக்குள் பேரக் குழந்தைகள் எடுப்பதைப் பார்க்கும் வேதனையாக இருக்கிறது.
பெற்றோரின் பொறுப்பு: இந்த விஷயத்தில் பெற்றோரைக் குறை கூற விரும்பவில்லை. ஆனால்அவர்கள் தங்களது ‘பொறுப்பு முடிந்தால் போதும்’ என்ற மனநிலைக்கு வந்து விடுவதுதான் கூடுதல் வேதனை. இதனை பெண் உரிமை மறுப்பாகவே பார்க்கத் தோன்றுகிறது.
பெண்கள் வெறும் பிள்ளை பெற்றுத் தருகின்ற இயந்திரம் அல்ல, அவர்களுக்குள்ளும் ஆசைகள், கனவுகள், இலக்குகள் இருக்கும் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மனைவியுடன் கலந்துரையாடல்: அடுத்ததாக வீட்டில் நடக்கின்ற மிக முக்கியமான முடிவுகளில் மனைவியிடமும் கலந்துரையாடலாம். கணவர்கள் “உனக்கு ஒண்ணும் தெரியாது, பேசாம இரு!” என்று மனைவியை அடக்கி வைப்பதை இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக காண முடிகிறது. “நீ என்னம்மா சொல்ற?” என்று அவர்களிடமும் கருத்தினை கேட்பது நல்லது.
கல்வி செல்வம்: மனைவி இறந்த பிறகு ஒரு கணவன் ஒன்று குடிக்கு அடிமையாக இருப்பார் அல்லது தனது பிள்ளைகளை பார்த்துக் கொள்ள மறுமணம் செய்திருப்பார் அல்லது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம்கூட ஏற்பட்டுவிடலாம்.
ஆனால் இதே ஒருபெண் தனது கணவன் இறந்த பிறகுதனது பிள்ளைகளை வளர்ப்பதற்காகமன உறுதியுடனும், தன்னம்பிக்கையுடனும் படித்து வேலை பார்த்து தனது பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை. ஏற்படுத்திக் கொடுத்திருப்பார். எனவே அழியாத செல்வமான கல்வி செல்வத்தை பெண்களுக்கு மறுக்காமல் தர வேண்டும்.
மனைவிக்கு உதவும் மனப்பாங்கு: பெண்கள் வீட்டில் உள்ள தனதுஆண் பிள்ளைகளிடம் வீட்டு வேலைகளை செய்வதற்கு பழக்கிவிட வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் தனது மனைவிக்கு உதவும் மனப்பாங்கு ஏற்படும். இதற்கு முதலில் பெண்களின் மனநிலைதான் மாற வேண்டும். தனது ஆண் பிள்ளைகள் வேலை பார்க்கக்கூடாது என்ற அந்த மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இவ்வாறு இருந்தால் எல்லா நாட்களும் பெண்கள் தினம் தான். பெண்களுக்கும் சம உரிமையும், பாதுகாப்பும் இருந்தால் தனிப்பட்ட முறையில் பெண்கள் தினம் கொண்டாட வேண்டிய அவசியமே ஏற்படாது.
“பெண்மையை போற்றுவோம்; பெண் உரிமை மறுப்பு சமுதாயத்திற்கு பேரிழப்பு!” என்பதை உணர்வோம்.