

விஞ்ஞானிகள் ராக்கெட்விட்டாலும் எலும்பிச்சை பழத்தைக் கட்டிதான் அனுப்புவார்கள் என்பது இங்கு நகைச்சுவையாக்கப்பட்டுள்ளது. இத்தகையசெயல் மற்றவர்களிடையே ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளை நாம் உணர வேண்டும். அந்த வகையில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக குழந்தைகளைக் கேள்வி கேட்கத் தூண்டுகிறது புக்ஸ் பார் சில்ரன் பதிப்பகத்தின் ‘கேள்வி கேட்டுப் பழகு’ நூல்.
மூடநம்பிக்கை என்பது இன்று பாமரர்களைவிடப் படித்தவர்களிடையே அதிகமாக இருக்கின்றது. மாணவர்களிடம் மூடநம்பிக்கையைக் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள் ஏற்படுத்த வேண்டிய கடமை உள்ளது.
இன்று அதிக அளவில் தொழில்நுட்ப சாதனங்களின் மூலமாகவே மூடநம்பிக்கை பரப்பப்படுகிறது. வாட்சப்பில் பாம்பு படம் வந்தால் அதை இருபத்தைந்து நபர்களுக்கு ஷேர் செய்ய வேண்டும்.
நல்லது நடக்கும் என்பார்கள். வீட்டில் அம்மா, அப்பா, நண்பர்கள் ஷேர் செய்தால் அதை நாமும் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை உணர வேண்டும். குழந்தைகளுக்கு உண்மையான காரணத்தை கூற வேண்டும். அவர்களை கேள்வி கேட்க தூண்டவேண்டும் என்கிறனர் நூலாசிரியர்களான சக.முத்துக்கண்ணன் மற்றும் ச.முத்துக்குமாரி.
கிரகணம் பார்க்கலாமா? - கிரகணம் என்றால் வீட்டைவிட்டு வெளியே போகக்கூடாது. சாப்பிடக்கூடாது. கர்ப்பிணி பெண்கள் வெளியே வந்தால் ஊனமாகக் குழந்தை பிறக்கும்.கிரகணம் முடிந்ததும் வீட்டைத் துடைக்க வேண்டும், குளிக்க வேண்டும் என்ற கதைகளை, படித்தவர்களும் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள் என்பது வேதனை.
சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே சந்திரன் நகர்வதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியன் மறைவதைக் கிரகணம் என்கிறோம். இது வானத்தில் நடக்கும் ஆச்சரியம். இந்த வான அதிசயத்தை எல்லோரும் பார்க்கலாம். சூரியக்கண்ணாடி போட்டு குடும்பமாகவும் பார்க்கலாம் என்பதை குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்.
அதேபோல், கனவு காணாதவர்களே உலகில் இல்லை. பேய், பிசாசு, பாம்பு போன்றவை நம்மை கனவில் துரத்த காரணம், அவை குறித்து நமக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் அச்சம்தான். நம் ஆழ்மனத்தில் பதிந்துவிடும் சம்பவங்கள்தான் கனவாக புதிய வடிவில் வருகிறது.
போலி அறிவியல்: எவ்வித ஆதாரமும் இல்லாத,அறிவியல் சோதனைகள் மூலம் நிரூபிக்கப்படாத தகவல்கள் கற்பனையே அன்றிஅறிவியல் அல்ல என்பதை குழந்தைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
வேப்பமர உச்சியில நின்னு பேயொன்னு ஆடுதுன்னு சொல்லி வைச்சாங்க, வீரத்தை முளையிலே கிள்ளி வச்சாங்க என்கிற பழம்பாடல் உண்டு. தமிழ்ச் சினிமாவில் பேய்ப்படத்திற்கென்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. தொடர்ந்து பேய் இருக்கிறது என்கிற மூடநம்பிக்கையை சினிமாவும் பரப்பி வருகிறது.
இந்நிலையில் இந்தப் புத்தகம், குழந்தைகளிடத்தில் பேயைப் பார்த்து கேள்வி கேட்க சொல்கிறது. “நைட் பூராசுத்துறியே! எப்போ தூங்குவ? உன் உலகத்துல ஸ்கூல் இருக்கா? ஏன் பொண்ணுங்க மட்டும் பேயா வர்றீங்க? ஆம்பள பேயே இல்லையா? என கேட்கத் தூண்டுகிறார். பேய் குறித்த அச்சத்தை முற்றிலும் மாணவர்களிடத்தில் இருந்து தவிர்ப்பதற்கான சிறந்த வழி இது .
கேள்வி நோட்டு: புத்தகத்தில் இறுதிப் பக்கம் வெற்றுக்கோடுகளாக உள்ளது. அதில் குழந்தைகள் தங்களின் கேள்விகளை எழுதவேண்டும் என்னும் நோக்கத்தில் விடப்பட்டுள்ளது. மிக எளிய வழியில் குழந்தைகளிடம் மூடநம்பிக்கைக்கு எதிராக கேள்வி எழுப்பும் மனநிலையை புத்தகத்தை வாசித்தால் பெறமுடியும்.
- கட்டுரையாளர்: முதுகலைத் தமிழாசிரியை.
தொடர்புக்கு: devavino86@gmail.com