

மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தித் தூக்கி எரியும் பொருட்கள் மிகவும் அபாயகரமானவை. இவை ‘பயோ மெடிக்கல்’ (Bio Medical) கழிவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவ்வாறு வெளியேறும் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. கூர்மையான பொருட்கள், ரத்தம், உடலில் இருந்து வெளியாகும் திரவங்கள், உடல் பாகங்கள், ஊசிகள், இன்ஜக்சன் பாட்டில்கள், மருத்துவர்கள் பயன்படுத்தும் கையுறைகள் ஆகிய மருத்துவம் சார்ந்த கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுகின்றன. இதனால் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் நோய் தொற்று ஏற்படுவது மட்டுமல்ல, கூர்மையான பொருட்களால் ஆபத்து ஏற்படுகிறது.
பயோ மெடிக்கல் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016-ல் கொண்டு வரப்பட்டது. மருத்துவ கழிவுகளை தரம் பிரித்து அனுப்புவது இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிகளில் ஒன்று. மருத்துவமனையிலிருந்து வெளியேறும் குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதற்காக சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு என நான்கு நிறங்களில் நான்கு குப்பைத் தொட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. சிவப்பு குப்பை தொட்டியில் நெகிழி கழிவுகள், சிரஞ்சி புட்டிகள், மஞ்சள் தொட்டியில் தொற்று கழிவுகள், பேன்ட்டேஜ், காட்டன் மற்றும் ப்ளசன்டா. நீலத் தொட்டியில் கண்ணாடி பாட்டில்கள், டிஸ்கார்ட் மெடிசின்ஸ், கருப்பு தொட்டியில் ஊசியில்லா சிரஞ்சிகள், உலோக பொருட்கள் ஆகியவற்றை பிரித்து அந்தந்த போட வேண்டும்.
இந்த விதிமுறைகளில் கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் கவனமாகப் பின்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தரம் பிரித்துக் கழிவுகளை வெளியேற்றியதால் கரோனா பரவலைத் தடுக்கவும் அது கைகொடுத்தது. பயோ மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுசிறை, ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.