

பள்ளிக்கூடம் என்பது மாணவ சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் ஆலயம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பள்ளியில் அறிவுறுத்தப்படுகின்ற, “உணவை வீணாக்காதே! பகிர்ந்து உண்” என்பது போன்ற அறிவுரைகளின் மகத்துவத்தை உணர்வதற்கான வாய்ப்பாக அமைந்தது எனது ஆன்மீகப் பயணம். அதனைப் பற்றி உங்களிடம் பகிர விரும்புகிறேன்.
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளசதுரகிரி மலை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். தாணிப்பாறை என்ற மலையடிவாரத்தில் இருந்து சதுரகிரி மலைக்குச் செல்வதற்கு நடை பயணமாக மட்டுமே செல்வது சாத்தியம். கிட்டத்தட்ட 14 கிலோமீட்டர் நடை பயணமாக மலைஏறிய பின் தான் சதுரகிரி மலை உச்சிக்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியும்.
கற்களும் பாறைகளும் ஆக அமைந்துள்ள பாதையில் மன தைரியமும், உடல்ஆரோக்கியமும் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும். ஒரு சில இடங்களில் பாறைகளில் படி போன்ற அமைப்புகள் செதுக்கப்பட்டுள்ளன. அடர்ந்த வனத்தினூடே காட்டு விலங்குகளாலும், நடைபயணம் மேற்கொண்ட மனிதர்களாலும் உருவாக்கப்பட்ட பாதையில் நடந்து சென்றால் மலைகளின் ஊடே, அழகான இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான சூழலில் இறைவன் வீற்றிருப்பதைக் கண்டு ரசிக்கலாம்.
அன்னதான கூடங்கள்
இந்த ஆண்டு வெயில் அதிகம் என்பதால் கிட்டத்தட்ட நான்கரை மணி நேர நடை பயணத்திற்குப் பின்பே எங்களால் சதுரகிரி அடைய முடிந்தது. அங்கும் இரண்டு அன்னதானக் கூடங்கள் உள்ளன. எண்ணில் அடங்கா நல்லுள்ளங்களின் நன்கொடையால் அன்னதானம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதைக் காணும் போது மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் திகழ்வதை கண்கூடாக காணலாம். ஏனெனில் மலையேறிச் சென்ற களைப்பினில் அங்கு கிடைக்கின்ற சூடான உணவு அமிர்தமாக இருக்கிறது. அப்படி கிடைக்கின்ற உணவினை சமைப்பதற்கு எத்தனை பேர் கடுமையாக உழைத்திருக்க வேண்டும் என்று என் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. ஏனெனில் நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்கள் எந்த ஒரு சுமையும் இன்றி ஏறுவதற்கே ஒரு கம்பின் உதவியினை நாட வேண்டிய சூழல் உள்ளகடுமையான மலைப்பாதை. அதில் உணவுதயாரிப்பதற்காக எடுத்துச் செல்லப்படும் அரிசி, பருப்பு, காய்கறிகள், சமையல்எண்ணெய், கேஸ் போன்ற அத்தனையையும் சுமந்து சென்ற மனிதர்களுக்கு மனதார நன்றி கூறிக்கொண்டு உணவை அருந்தினேன். அப்போது நான் கண்ட காட்சி என் மனதை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது.
அன்னதான கூடத்தின் அருகே வைக்கப்பட்ட குப்பைத்தொட்டி முழுவதும் வீணாக்கப்பட்ட உணவு நிரம்பி வழிந்ததைப் பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. எவ்வளவு கடினமான மலை பாதையில் சுமந்துவரப்பட்ட பொருட்களினால் சமைக்கப்பட்ட உணவை வீணாக்குவதற்கு எப்படி மனம் வந்தது என்று எண்ணி வருத்தமுற்றேன்.
அப்போதுதான் பள்ளிக்கூடத்தில் நாம்அடிக்கடி அறிவுறுத்துகின்ற வாக்கியமான “உணவை வீணாக்காதீர்” என்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். வெறுமனே உணவை வீணாக்காதீர் என்று சொல்வதற்கு பதிலாக அந்த உணவு தயாரிப்பின் பின்னணியில் எத்தனை பேரின் உழைப்பு உள்ளது என்பதையும் இளம் உள்ளங்களில் பதிந்திட செய்வது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையே என்று உணர்ந்தேன்.
மூன்று வயதிலிருந்து உணவின் அருமையையும், அதன் பின்னணியில் உள்ளவர்களின் உழைப்பின் மகத்துவத் தையும் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தும் போது இதுபோன்ற பொது இடங்களில் உணவை வீணாக்குவதை வெகுவாக குறைக்க முடியும் என்று நம்புகிறேன்.
- கட்டுரையாளர்
தலைமை ஆசிரியர்
பல்லோட்டி மே.நி.பள்ளி
நாகமலை, மதுரை