

வழக்கமாக காலையில் சீக்கிரமே பள்ளிக்குச் சென்று விடுவது எனது வழக்கம். அன்று நான் பள்ளிக்குள் நுழைந்தவுடன் என்னை பார்க்கத் தயாராக காத்திருந்தார் எட்டாம் வகுப்பு ஆசிரியை. அவரைக் கண்டவுடன் நான் வணக்கம் சொன்னேன். பதிலுக்கு அவரும் வணக்கம் சொன்னார். தொடர்ந்து பேசத் தொடங்கினார் அந்த ஆசிரியை.
சார் உங்க வகுப்பு ஈஸ்வரியை கொஞ்சம் கண்டித்து வையுங்கள் என்று கூறினார் பொத்தாம் பொதுவாக.
ஈஸ்வரியைப் பொருத்தவரையில் நல்ல மாணவி. ஆசிரியர் சொல்வதை அழகாய் கேட்டு நடக்கும் குணம், எழுத்து அழகாக இருக்கும். அப்படிப்பட்ட குழந்தையை பற்றி ஏன் இவ்வாறு சொல்ல வேண்டும் என்ற குழப்பத்தில்...
ஈஸ்வரி என்ன செய்தாள், டீச்சர் எதற்காக அந்த குழந்தையை கண்டித்து வைக்க வேண்டும் என வினவினேன்.
ஒருவித பதற்றத்துடன் மீண்டும் பேசத் தொடங்கினார் அந்த ஆசிரியை. கொஞ்சம்கூட அவளிடம் மரியாதை கிடையாது. ஆசிரியர்களுக்கு தக்க மரியாதை செலுத்துவது கிடையாது.
ஆசிரியர்களை காலையில் பார்த்தால்வணக்கம் சொல்லுவது கிடையாது. இது எப்படி சரியாக இருக்கும் என என்னிடம் கேள்வியை முன் வைத்தார். எல்லாம் உங்க வகுப்பு பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்கிற செல்லம் தான் என்று என்னை குற்றம் சாட்டினார். அதனால்தான் அவளை கண்டித்து வைக்குமாறு வகுப்பு ஆசிரியராகிய உங்களிடம் சொன்னேன் என்றார்.
சரி டீச்சர் நான் ஈஸ்வரியிடம் விசாரிக்கிறேன் என கூறினேன். மெதுவாய் எனது வகுப்பறைக்குள் நுழையும் முன் கண்ணில்பட்ட ஈஸ்வரி,அண்ணா வணக்கம் என்றார். பதிலுக்குசிரித்தபடியே நானும் வணக்கம் சொல்லி உள்ளே சென்றேன்.
வழக்கம் போல வகுப்பறையில் குழந்தைகளின் பங்கேற்போடு பாடத்தை நானும் குழந்தைகளும் கற்கதயாரானோம். காலை இடைவேளையின் போது ஈஸ்வரியை அழைத்தேன். என்ன ஈஸ்வரி பாப்பா, என்னிடம் தானாய் வந்து வணக்கம் சொல்கிறாய். ஆனால் குறிப்பிட்ட அந்த ஆசிரியையைப் பார்த்து காலையில் வணக்கம் சொல்வதில்லையாமே? ஏன் என்னவாயிற்று என்று கேட்டேன்.
வழக்கமாய் நான் தங்களுக்கு வணக்கம் சொல்லும் போது நீங்கள் என்ன செய்கிறீர்கள். நானும் வணக்கம்சொல்கிறேன் என்றேன். நானும் கடந்தவாரம் மூன்று நாட்களும் தொடர்ச்சியாக குறிப்பிட்ட அந்த ஆசிரியை அவர்களுக்கு வணக்கம் சொல்லி வந்தேன். நான் வணக்கம் சொல்வதை அவர்கள் சட்டை செய்வதே இல்லை. பார்த்தும் பார்க்காதது போல் நடந்துகொள்கிறார்கள். பதிலுக்கு தலையைக்கூட ஆட்டுவதில்லை. இப்படியாக கடந்தவாரம் மூன்று நாட்கள் போயிற்று இப்படிப்பட்ட சூழலில் என்னால் எப்படி அவர்களுக்கு தொடர்ச்சியாக வணக்கம் செலுத்த முடியும் என்றார்.
அவரின் கேள்வியில் நியாயம் இருப்பது எனக்குப் புரிந்தது.
அவர்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உனது பங்கிற்கு நீ வணக்கம் செலுத்துவது தானே சரியான முறை என கேள்வி எழுப்பினேன். எனது மதிப்பை அந்த ஆசிரியை எப்படி எதிர்பார்க்கிறாரோ, அதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கும் தானே. நான் எதிர்பார்ப்பது தவறா? எனக் கேட்டார். எனக்கு என்ன சொல்வது என்றுதெரியவில்லை. உன்னுடைய எதிர்பார்ப்பு சரியானதுதான். நிச்சயம் அந்தஆசிரியரிடம் தெரிவிக்கிறேன் என்றுசொல்லி சமாதானப்படுத்தினேன்.
பள்ளி மட்டுமல்ல, நிறைய இடங்களில் குழந்தைகள் மனம் வருந்தும்படியான நிகழ்வுகளும், அவர்களின் எதிர்பார்ப்புகளும் நிறையவே இருக்கின்றன. அவற்றை நாம்தான் கண்டறிய வேண்டும். கண்டறிவதோடு மட்டுமல்லாமல், காயப்பட்ட அவர்களுக்கு மருந்திட வேண்டிய அவசியமும் நமக்கு இருக்கிறது என்பதை அன்று உணர்ந்தேன்.
- அ. அமலராஜன்
கட்டுரையாளர்
தலைமையாசிரியர்,ஆர்.சி. தொடக்கப்பள்ளி,
மணியம்பட்டி, விருதுநகர்.
(ஓரிகாமி புத்தகத்தின் ஆசிரியர்)