

புத்தாண்டு தொடங்குகின்ற முதல்நாளில் தானே தீர்மானங்கள் எடுக்க வேண்டும்? இதென்ன, ஆண்டின் இடையில் ‘புத்தாண்டு தீர்மானங்கள்’ என்ற சந்தேகம், ஆகப்பெரும்பான்மையான மக்களுக்கு வரக்கூடும்.
ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு போன்றே சிறப்புமிக்க மற்றொரு புத்தாண்டும் உள்ளது. அதுதான் கல்விப் புத்தாண்டு.
ஜூன் 12 அன்றுதான் இந்த ஆண்டின் கல்விப் புத்தாண்டு தொடங்கியது. இந்தக் கல்வி புத்தாண்டில், கல்விப்பணியுடன் தொடர்புடைய அனைவருக்கும் கல்விப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன்.
நேர்மறை எண்ணங்கள்
புத்தாண்டு தொடங்கும் நாளில்,நம்மிடம் உள்ள நிறை, குறைகளை ஆய்வு செய்து, நேர்மறை எண்ணங்களைக் கூட்டி, எதிர்மறை எண்ணங்களைக் கழித்து, மாணாக்கரின் கற்றல் அடைவினைப் பெருக்கி, அதற்குத் தேவையான வழிமுறைகளை வகுத்து திட்டமிட்டு செயல்பட்டால்தான், முழுமையான வெற்றியை நம்மால் பெற இயலும்.
இங்கு வெற்றி என்பது மாணாக்கர் பெறுகின்ற கற்றல் அடைவினை மட்டுமே சார்ந்ததல்ல. வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தனது முழுஆளுமையை மாணாக்கர் வெளிப்படுத்துகின்ற திறமையையும் இது உள்ளடக்கியதாகும்.
உடல், உள்ளம், ஆன்மா (உயிராற்றல்) ஆகிய மூன்றின் ஒருமித்த வளர்ச்சியை, ஒரு மாணவனிடம் உருவாக்கிவிட்டால், அத்தகைய மாணவர்கள் இந்த சமூகத்தை மிகச் சிறப்பாய் வழிநடத்துவார்கள் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. உள்ளத்தின் வளர்ச்சியையும், உயிராற்றலின் வளர்ச்சியையும் உருவாக்குவதில் மிகப் பெரும்பான்மையான பங்கு ஆசிரியர்களுக்கே உள்ளது.
ஒரு வகுப்பறையில் பயிலும் அனைத்து மாணவரும், தன் எதிரில்இருக்கும் ஆசிரியரின் கற்பித்தலை மட்டுமல்லாமல், அவர்களது நடவடிக்கைகளையும் உற்று நோக்குகின்றனர். அவர்கள் கவனிக்கும் விஷயங்கள், அவர்களது ஆழ்மனதில் வேரூன்றுகிறது. இதனை நம் மனதில் நிறுத்தி, அதற்கேற்றவாறு நமது நடை, உடை பாவனைகளில் மட்டுமல்லாது, வார்த்தைப் பிரயோகத்திலும் நாம் அதிக கவனம் வைக்க வேண்டும். கால மாற்றத்தை கருத்தில் கொண்டு, இக்கால மாணாக்கரின் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை நீக்கி, அவர்களை பண்படுத்தும் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பள்ளியைப் பற்றி யோசிக்கும்போதும், பாடப்புத்தகத்தை வாசிக்கும்போதும், மாணவனின் மனதில் ஒரு துள்ளலும், மகிழ்வும் ஏற்பட வேண்டும். நம்மைப் பற்றிய பயம் ஏதுமில்லாமல், நம் மீது மதிப்பு ஏற்படும் வகையில் நமதுசெயல்பாடுகள் இருக்க வேண்டும்.
சமாளிக்கும் வழி
பிரச்சினைகளால் சூழப்பட்ட மாணவர்கள் இருக்கலாம். ஆனால், எந்த மாணவனும் பிரச்சினைக்குரிய மாணவன் இல்லை என்பதை உணர்ந்து. அவனதுபிரச்சினை என்ன என்று பொறுமையாய்க் கேட்டு, அதனை சமாளிக்கும் வழியை அவனுக்கு புரியவைத்து, கல்வியில் ஈடுபாடு ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
‘சிலபஸ்’ முடிக்க வேண்டுமே என்பதற்காக, மாணவர்களின் மனநிலை புரியாமல், இரண்டு அல்லது மூன்று பாட வேளைகள் தொடர்ச்சியாக கற்பிக்கக் கூடாது. ஏதோ ஒரு சிலகாரணத்தால், ஒருவேளை தொடர்ச்சியாக கற்பிக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது, இடையிடையே மாணவர்களை மடைமாற்றக் கூடிய வகையில் சில கதைகளைக் கூறி, அதன்பின் கற்பித்தலை தொடர வேண்டும். மொத்தத்தில் கற்றல் என்பதை மகிழ்வானதாக மாற்ற வேண்டும்.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின், உடற்கல்வி பாடவேளையை எக்காரணம் கொண்டும் பிற பாட கற்பித்தலுக்கு பயன்படுத்தக் கூடாது. விளையாட வாய்ப்பு வழங்குவதால், அந்த மாணவர்களின் உடல் மட்டுமின்றி மனமும் புத்துணர்ச்சி அடையும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
கல்வித் துறை முன்னெடுக்கும் எந்த ஒரு செயல்திட்டமும் வெற்றி பெற வேண்டுமானால், அதை முழுமையாய் செயல்படுத்த ஆசிரியர்களாகிய நம்மால்தான் முடியும். அதற்கு, மேற்சொன்ன தீர்மானங்களை நாம் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
- கலாவல்லி அருள்
கட்டுரையாளர்
தலைமை ஆசிரியர்
அரசு உயர்நிலைப்பள்ளி, துண்டல்கழனி, காஞ்சிபுரம் மாவட்டம்.