

இந்தியாவின் தலைசிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களை 1960களின் கடைசியில் பேட்டியெடுக்க முடிவு செய்த ஒரு நிருபர் அதற்கான பட்டியலைத் தயார் செய்தார். டாக்டர் சாம்பசிவன், டாக்டர் பானர்ஜி, டாக்டர் நம்பூதிரிப்பாட், டாக்டர் ஆர்.என்.ராய், டாக்டர் சலபதி ராவ், டாக்டர் கஜேந்திர சிங், டாக்டர் நரேந்திரன் என கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்ட மருத்துவர்களைப் பட்டியலிட்ட அவர், இதில் யாரையெல்லாம் முதலில் பேட்டியெடுக்கலாம் என்று பட்டியலை மறுபார்வையிட்டபோது அவருக்கு அதில் இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. தான் பட்டியலிட்டிருந்த அத்தனை பேருமே டாக்டர் ஜே.சி. என்று அழைக்கப்பட்ட டாக்டர் ஜேக்கப் சாண்டியின் மாணாக்கர்கள் என்பதுதான் அது.
டாக்டர் ஜேக்கப் சாண்டி: 1910-ல் கேரளாவின் கோட்டயம் அருகே உள்ள கிராமத்தில் பிறந்தார் ஜேக்கப். தேவாலயத்தின் பாதிரியாராகப் பொறுப்பு வகித்த பாட்டனார் மற்றும் தந்தையுடன் வளர்ந்த ஜேக்கப், முதலில் தானும் ஒரு பாதிரியாராகத்தான் ஆசைப்பட்டார்.
ஆனால், அவரது ஏழாவது வயதில், தந்தையுடன் வெளியூர் சென்றவர் திரும்பி வந்தபோது தம்பியைப் பிரசவித்த தனது தாய், போதிய மருத்துவ வசதிகள் இன்றி இறந்து போனதைக் கண்டு அதிர்ந்தார். தான் மருத்துவம் படிக்க வேண்டும் என்பதற்காகவே கடவுள் அந்த வழியைக் காட்டியதாக நம்பிய அவர், மருத்துவம் பயில முடிவுசெய்தார்.
தாயும் இல்லாமல், தந்தையும் வெளியூர் போவதால் சில காலம் தாய்மாமன் வீட்டில், சில காலம் பாட்டி வீட்டில் எனத் தங்கி பள்ளிப்படிப்பை முடித்தார். தென்னிந்தியாவின் ஒரே மருத்துவக் கல்லூரியாக இருந்த மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் 1931-ல் சேர்ந்தார். அவரது படிப்பிற்கு கல்லூரியின் முதல்வரான கலோனல் ஹம்ப்ரே உதவி புரிந்து நல்வழி காட்டினார்.
1936-ல் மருத்துவக் கல்வியை சிறப்பாக முடித்தார். அதே எம்எம்சியில் பயிற்சி மருத்துவராக அறுவை சிகிச்சை மற்றும் காது மூக்கு தொண்டை துறைகளில் சில காலம் பணியாற்றினார். அப்போது, மூளைக்கட்டி நீக்கும் அறுவை சிகிச்சைக்காக வந்த ஓர் இளைஞனை எவ்வளவு போராடியும் காக்க முடியாமல் போனது.
அந்த நிமிடத்தில்தான் தனது துறை இனி நரம்பியல் அறுவை சிகிச்சை என்று முடிவு செய்தார் டாக்டர் ஜேக்கப். அன்றிருந்த சூழ்நிலையில் அந்தத் துறை மருத்துவத்தை வெளிநாட்டில் மட்டுமே பயில முடியும். ஆகவே உயர்கல்வி பயிலத் தேவையான நிதியை சேமிப்பதற்காக அரபுநாடுகளுக்கு பணிபுரிய பயணம் மேற்கொண்டார்.
சாதனைகளுக்குச் சொந்தக்காரர்: பஹ்ரேய்னின் அமெரிக்க மிஷன் மருத்துவமனையின் தலைமை மருத்துவராக இருந்த டாக்டர் பால் ஹாரிசனை அங்கு ஜேக்கப் சந்தித்தார்.
ஹெர்னியா அறுவை சிகிச்சை முதல் தமனிகளில் மேற்கொள்ளப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் வரை அனைத்தையும் சுலபமாக செய்யப் பழகினார். "எதையும் சட்டென்று புரிந்துகொள்ளும் திறமை, அதனை செயல்படுத்தும் வேகம், அனைவரையும் அனுசரித்துச் செல்லும் குணம், சிரித்த முகம் என இந்த இளைஞன் எதிர்காலத்தில் எண்ணற்ற சாதனைகள் புரிவான்” என்று தனது மனைவி ஆன் ஹாரிசனிடம் எப்போதும் மெச்சிய பால் ஹாரிசன், ஒருகட்டத்தில் ஜேக்கப்பை தனது மகனாகவே எண்ணத் தொடங்கினார்.
1943-ல் பிலடெல்பியா மாகாணத்தின் பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சைத் துறையில் பயில அனுமதி பெற்றுக் கொடுத்ததுடன், அதற்கான கட்டணமான 900 அமெரிக்க டாலர்கள் பணத்தையும் ஜேக்கப்பிடம் கொடுத்து கண்ணீருடன் அமெரிக்காவுக்கு பால் ஹாரிசன் அனுப்பி வைத்தார்.
மனைவி தங்கம் மற்றும் பிறந்த குழந்தை மாத்யூ ஆகியோருடன் அமெரிக்காசென்றடைந்தார் ஜேக்கப். படித்துக் கொண்டே வில்லியம் கோன் எனும் தலைசிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுனருடன் அங்கு இணைந்து பணியாற்றிய ஜேக்கப், வலிப்பு நோய்க்கான அறுவை சிகிச்சை, புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை ஆகியவற்றில் நன்கு தேர்ந்து, FRCS (Canada) பட்டத்தையும் பெற்றார்.
தமிழ்நாட்டில் சேவை: இந்தியாவில் வேலூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட சிஎம்சி (CMC Vellore) மருத்துவக் கல்லூரியின் முதல்வரான டாக்டர் ராபர்ட் காக்ரெய்ன் கனடாவில் டாக்டர் ஜேக்கப்பை 1946-ல் சந்திக்க நேர்ந்தது. தமது மருத்துவக் கல்லூரியில் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையை தொடங்கி நடத்துமாறு ஜேக்கப்பிற்கு அவர் அழைப்புவிடுத்தார்.
தாம் படித்த தமிழகத்துக்கே சேவை செய்யும் வாய்ப்புக் கிடைத்ததும், அதை ஆர்வத்துடன் ஒப்புக்கொண்ட டாக்டர் ஜேக்கப், அதற்கான தனது அமெரிக்கப் படிப்பையும் முடித்துவிட்டு வருவதாக வாக்களித்தார்.
நாடு திரும்பியவர் நாட்டின் முதல் நரம்பியல் சிகிச்சைத் துறையான 'டாக்டர் பால் ஹாரிசன் நரம்பியல் துறை’யை தொடங்கினார். தனது துறையில் தேர்ந்த உதவியாளர்களை நியமித்ததுடன், அவர்களில் சிறந்த செவிலியர்களை தான் படித்த மாண்ட்ரீல் மருத்துவமனைக்கு சிறப்புப் பயிற்சி பெற அனுப்பி வைத்து, சிஎம்சியின் நரம்பியல் துறையை இன்னும் வலுவாக்கினார் டாக்டர் ஜேக்கப் சாண்டி.
இரவும் பகலும் உழைத்த அவரது உழைப்பு அந்தத் துறையையே முழுமையாக மாற்றியதுடன், டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் சுசீலா நய்யார், இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்களை வியந்து வருகை தருமளவு செய்ததுடன், அண்டை நாடான இலங்கையின் பிரதமரையே நம்பி அங்கே சிகிச்சைக்கு வரவைத்தது எனலாம்.
நாடெங்கும் உள்ள நரம்பியல் நோய் நோயாளர்கள் ஜேசி எனும் ஜேக்கப் சாண்டியின் உதவியை நாட, சிஎம்சியின் நரம்பியல் துறை அதிக படுக்கை எண்ணிக்கையுடன் வளர்ந்தது.
1955-ல் நரம்பியல் மருத்துவ மேற்படிப்பையும் தொடங்கினார். தனது முதல் மாணவர்களான கொல்கத்தாவின் டாக்டர் ஆர்.என்.ராய், குவாலியரின் டாக்டர் தார்க்கர் மற்றும் மும்பையைச் சேர்ந்த டாக்டர் கஹேந்திர சிங் ஆகியோருக்கு முழுமையான பயிற்சிகளை அளித்ததுடன், தான் கற்றுக் கொண்ட அனைத்தையும் தனது மாணவர்களுக்கு முழுமையாகத் தருவதை ஒரு கொள்கையாகவே கடைபிடித்தும் வந்தார்.
அப்படி தனது திறமைகள் அனைத்தையும் தன்னிடம் பயின்ற மாணவர்களுக்கு ஜேக்கப் வழங்கியதால் தான், இந்தியாவின் மிகச்சிறந்த நரம்பியல் மருத்துவர்களும், எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் நரம்பியல் மருத்துவத் துறையும் உருவானது. அதில் அவரது மகன் மாத்யூ சாண்டியும் ஒருவர் என்பதும், அவருக்குப் பின் சிஎம்சி வேலூரின் நரம்பியல் ஆராய்ச்சித் துறையில் டாக்டர் மாத்யூ தலைசிறந்து விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பணி ஓய்வுக்குப் பிறகு தனது சொந்த ஊர் கோட்டயத்தைச் சுற்றிலும் இருந்த கிராமங்களுக்குச் சென்று, அனைத்து தர மக்களுக்கும் அடிப்படை மருத்துவ உதவிகள், ஆலோசனைகள் மற்றும் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
1988 ஆம் ஆண்டு, 'Reminiscences and Reflections' எனும் சுயசரிதையை அவர் எழுத, சர்வதேச அளவில் அது பிரபலமடைந்தது.
"ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் சுதந்திரமும், மாணவர்களுக்கு கற்றுக் கொள்வதில் சுதந்திரமும், அனைத்திற்கும் மேலாக எதிர்காலம் குறித்த சிந்தனை இருவரிடமும் இருந்தால் தேசத்தின் பல தேவைகள் பூர்த்தி அடையும்" என்று சொல்லிலும் செயலிலும் வாழ்ந்து காட்டிய டாக்டர் ஜே.சி. தன் பணியை தொடர ஓர் அறிவுச் சமூகத்தையே உருவாக்கியவர்.
(மகிமை நிறைவுற்றது)
- டாக்டர் சசித்ரா தாமோதரன் | கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com