

அறிவியல்ஸ்கோப் மூலமாக கடந்த 29 வாரங்களாக அறிவியல் அறிஞர்களின் கொள்கைகள் கோட்பாடுகளைவிட அதனை அடைய அவர்கள் சந்தித்த சவால்களை விளக்கவே முற்பட்டோம்.
அறிவியல் கற்பதற்கு தடையாக உள்ள வறுமையை அவர்கள் வென்றெடுத்த வழிவகைகள் யாவை, அவர்களுக்கு குடும்பஉறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு உதவிகரமாக இருந்தார்கள், நடைமுறையில் இருக்கும் நம்பிக்கைகள் எவ்வாறு அவர்களது முன்னேற்றங்களுக்குத் தடையாக இருந்தன, முக்கிய மதம்எவ்வாறெல்லாம் முட்டுக்கட்டை போட்டது, ஆட்சியாளர்கள் எவ்வாறு அறிவியலாளர்களை தவறாகப் புரிந்துகொண்டனர், எத்தகைய இக்கட்டான சூழல்களில் விஞ்ஞானிகள் பணியாற்ற வேண்டிய இருந்தது, எவ்வாறு அந்த தடைகளையெல்லாம் அவர்கள் வென்றெடுத்தார்கள் உள்ளிட்டவற்றை பார்த்தோம். இன்றைக்கும் இத்தகைய சவால்கள் மறைந்தபாடில்லை.
தற்செயலாக கிடைக்கலாம்: அறிவியல் கற்றல் ஆனந்தமானது. கேள்விகளுக்கான விடைகளைத் தேடக் கூடியது. வந்த விடைகளை மேலும் கேள்விக்குள்ளாக்குவது.
இவ்வாறான தொடர் கற்றல் நிகழ அறிவியல் கற்றல் கற்பித்தலில் அடிப்படையான மாற்றங்கள் தேவைப்படுகிறது. அறிவியலை பாடம் என்ற சிமிழுக்குள் அடைக்காமல் இயற்கையிலிருந்து கண்டறியும் முயற்சிகள் வலுப்பட வேண்டும்.
ஒரு கேள்விக்கு ஒரே பதில் என்பது மாற வேண்டும். வரக்கூடிய பல பதில்களையும் ஏற்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு பதிலாக பரிசீலித்து இறுதியில் சரியான பதிலை அடையவேண்டும். சரி ஒரு பதில்தானே சரியானது அதனை அடைய ஏன்பல்வேறு பதில்களை அனுமதிக்க வேண்டும்? யார் கண்டது ஒரு கேள்விக்கான பல்வேறு பதில்களில் தவறாக அளிக்கப்படும் ஒரு பதில் மற்றொரு கேள்விக்கு இட்டுச் சென்று புதியன படைக்கத் தூண்டலாம்.
அறிவியலின் வரலாறு நெடுக தற்செயலாகக் கண்டறியப்பட்ட கண்டுபிடிப்புகளின் பட்டியல் மிக நீளமானது. இத்தொடரிலும் இவ்வாறான கண்டுபிடிப்புகளுக்கான உதாரணங்களைப் பார்த்தோம்.
அத்தனையும் கேள்வி கேள்: பார்க்கும் அனைத்தையும் கேள்விக்குட்படுத்தும் மனப்பான்மை மாணவர்களுக்குள் உண்டாக வேண்டும். அவ்வாறு வெளிப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அறிவாற்றலும் பொறுமையும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாய்க்கவேண்டும்.
இந்த தொடர் முழுவதையுமே மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகளை மையப்படுத்தியே எழுதினேன். அதிலும் 19-ம் நூற்றாண்டு வரையிலான விஞ்ஞானிகள்தான் இடம்பெற்றனர்.
அதற்கு காரணம், அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையான தொகுத்தல், பகுத்தல், ஆய்வு செய்தல், முடிவுக்கு வருதல் என்பன மட்டுமல்ல. ஆய்வின் மூலம் கிடைத்த அறிவை ஆவணப்படுத்த நிறுவனங்களும் தேவை.
உடன் பணியாற்றும் சக ஆராய்ச்சியாளர்களின் விமரிசனங்களும் முன்னேற உதவும். இந்த பணிகளுக்கு பல்கலைக்கழகங்கள், ராயல் கழகம் போன்ற அமைப்புகள் தேவை. இங்கிலாந்தின் ராயல் கழகம் 1660-ல் நிறுவப்பட்டது. முன்பாகவே ஐரோப்பிய நாடுகளில் பல பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன.
இவ்வாறான நிறுவனங்களின் ஏற்பாட்டிற்குப் பிறகும் அந்நாடுகளில் அறிவியல் பார்வை மலர்ந்துவிடவில்லை. அதற்கு பலரது கடின உழைப்பும், உயிர்த் தியாகமும் தேவையாக இருந்தது.
இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி: இந்தியாவைப் பொறுத்தவரை அறிவியல் ஆராய்ச்சிக்கான நிறுவனமான Indian Association for the cultivation of science 1876-ல் தொடங்கப்பட்டது.
இந்நிறுவனமே பின்னாளில் சர் சி.வி. ராமன், கே.எஸ். கிருஷ்ணன், ஜெகதீஷ் சந்திரபோஸ் போன்றோரின் வளர்ச்சிக்கு உதவியது. இதுபோல இந்தியாவில் பரவலாக அறிவியல் பார்வை வளர்வதற்கும், ஆராய்ச்சிகள் மேம்படுவதற்கும் பல நூறு அறிவியல் கற்றல் ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் தேவை.
அறிவியலை நேசிக்கும் ஆட்சியாளர்களால் மட்டுமே இப்படிப்பட்ட ஏற்பாடுகளை செய்ய இயலும். அப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் உருவாக அறிவியல் பார்வை கொண்ட குடிமக்கள் தேவை. இந்த திசையில் பயணிக்க சிறந்த குடிமக்களை உருவாக்கும் பணிகளை அனைத்துக் கல்வி நிறுவனங்களும் செய்ய வேண்டும்.
(நிறைவுற்றது)
- கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்; தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com