

ஒரே கதைதான். கதை எழுத தெரிந்த ஒருவர் அதைப் படிக்கிறார். வாசகராக மட்டுமே உள்ளவரும் படிக்கிறார். இரண்டு பேரின் வாசிப்புக்கும் வித்தியாசம் இருக்கும். அது எப்படி இருக்கும் என்று தோன்றுகிறதா? பார்ப்போம்.
தொலைக்காட்சியில் ஒருவர் பாடுவார். நமக்கு அது மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால், இசையில் அனுபவம் வாய்ந்த நடுவர்கள் அவர் பாடியதில் உள்ள குறைகளைச் சொல்வார்கள். அதுபோலவே, ஒருகதையைப் படிக்கும்போது எழுத்தாளருக்கும் வாசகருக்கும் வித்தியாசம் இருக்கும்.
ஒரு கதையை வாசகர் படிக்கும்போது, அவரது கவனம் கதையின் சுவாரஸ்யத்திலும், முடிவை நோக்கியும் மட்டுமே இருக்கும். ஆனால், அவர் ஓர் எழுத்தாளர் எனில், கதை எப்படி எழுதப்பட்டுள்ளது என்பது குறித்தும் யோசிப்பார். உதாரணத்துக்கு, நமக்கு நன்கு தெரிந்த ஒரு கதையைப் பார்ப்போம்.
முன்னா, சென்னா என்று இரண்டு நண்பர்கள் வெளியூர் சென்றனர். காட்டு வழியே செல்லும்போது தூரத்தில் கரடி ஒன்று வருவதைப் பார்க்கின்றனர். தங்களைத் தாக்கிவிடுமோ என்று பயந்தனர். ‘மரத்தில் ஏறினால் கரடியால் ஒன்றும் செய்ய முடியாது’ என்கிறான் முன்னா.
அதைக் கேட்டதும், ‘எனக்கு மரம் ஏற தெரியாதே!’ என்கிறான் சென்னா. அதைச் சொல்லி முடிக்கும் முன்பே, முன்னா பக்கத்தில் இருந்த பெரிய மரத்தில் ஏறிவிட்டான். கரடி இவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென்று வந்த யோசனையில், தரையில் பொத்தென்று விழுந்து இறந்தவன் போல நடித்தான் சென்னா.
அங்கு வந்த கரடி, சென்னாவை முகர்ந்து பார்த்துவிட்டு ஒன்றும் செய்யாமல் சென்றுவிடுகிறது. மரத்தில் இருந்து இறங்கிய முன்னா, ‘கரடி உன் காதில் என்ன சொன்னது’ என்று கேட்டான். ‘ஆபத்தில் உதவாத நண்பனை நம்பாதே என்றது’ என்றான் சென்னா.
இந்தக் கதையைப் படிக்கும் வாசகர், கரடியிடம் இருந்து சென்னா எப்படித் தப்பிப்பான், சென்னாவைக் கரடி கடித்து விடுமோ என்ற ஆர்வம் மட்டுமே இருக்கும். கதை எழுதத் தெரிந்தவர்கள் கதையின் நுட்பம் பற்றியும் கவனிப்பார்கள்.
கரடி கதை எப்படி எழுதப்பட்டுள்ளது? - கதையில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரங்கள் அறிமுகம் செய்யப்படுகிறார்கள். அடுத்து, அவர்களின் இலக்கான பயணம் பற்றிச் சொல்லப்படுகிறது. அடுத்து, கரடி எனும் ஆபத்தை கொண்டு வருகிறார் கதாசிரியர். கதை இங்கேதான் சூடு பிடிக்கிறது. ஆபத்தில் தப்பிக்கும் திறமையை ஒருவருக்கு மட்டுமே அளித்து, கதையைப் பரபரப்பாக ஆக்குகிறார்.
ஒருவன் தப்பிக்க, மற்றொருவன் என்ன செய்ய போகிறானோ என்ற பதற்றத்தைக் கொடுக்கிறார். சென்னாவிடம் ஆயுதமும் இல்லை; ஓடித் தப்பிக்க நேரமும் இல்லை. கரடியோடு சண்டை போடப் போகிறானா என்ற எதிர்பார்ப்பை கொடுக்கிறார். ஆனால், ஆயுதமே இல்லாமல் தப்பிக்கும் வழி ஒன்றை உருவாக்குகிறார். இவ்வளவு பரபரப்புக்குப் பிறகு இறுதியில், கரடி ஏமாந்து போகிறது எனும் முடிவைத் தருகிறார்.
சின்னக் கதைதான். ஆனால், அதற்கு இத்தனை நுட்பங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் வாசகர்கள் கவனிக்காவிட்டாலும், கதை எழுத நினைப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு சின்னப் பயிற்சி எடுக்கலாமா?
வீட்டு பாடம் கதை: கரடி கதையைப் போலவே, ’பாட்டி வடை சுட்ட கதை’யிலும் பல நுட்பங்கள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து எழுதி அனுப்புங்கள்.
- விஷ்ணுபுரம் சரவணன் | கட்டுரையாளர்: எழுத்தாளர், ‘ஒற்றைச் சிறகு ஓவியா’, ‘வித்தைக்காரச் சிறுமி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: vishnupuramsaravanan@gmail.com