

பாரதியின் வரியில் புத்தகத்தின் தலைப்பு. ஆமாம். கேளடா மானிடவா இங்கு கீழோர் மேலோர் இல்லை. எழுத்தாளர் பிருந்தா சேது அவர்களின் இப்புத்தகம் கூற வருவதும் கீழோர் மேலோர் இல்லை என்றுதான். நம் சமுதாயத்தில் ஆண் உயர்ந்தவனாகவும், பெண்கள் அடிமையாகவும் நினைக்கப்படு வதும், நடத்தப்படுவதும் சாதாரணம்.
நல்ல பெற்றோரா நாம்? - ஆண் குழந்தைகளை ஒருவிதமாகவும், பெண் குழந்தைகளை ஒருவிதமாகவும் வளர்ப்பதுதான் சமுதாயம் நிறைய பிரச்சினைகளை உள்வாங்கிக் கொண்டு தீர்வை நோக்கி நகராமலே இருப்பதற்கு காரணம் என்கிறார் பிருந்தா.
சாப்பிட தெரிந்த அனைவருக்கும் சமைக்கவும் தெரியவேண்டும் அல்லவா? ஆணாகப் பிறந்த காரணத்துக்காகவே குழந்தைகள் முதல் முதியவர் வரை உள்ளவர்கள், உட்கார்ந்த இடத்தில் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது சரியா?
பெண்களுக்கு பாதுகாப்பு: பெண் குழந்தைகளை பாதுகாக்க ஆறுமணிக்கு வீட்டிற்குள் அடைத்து வைக்கிறோமே? ஏன் ஆண் குழந்தைகளை அவ்வாறு இருக்கச் சொல்வதில்லை. அல்லது பெண் இனத்துக்கான பாதுகாப்பு கருதி, இரவில் பெண்களை வெளியில் செல்லாமல் பாதுகாக்கிறோம் எனில், ஏதோ நான்கைந்து பெண்கள் சூழ்நிலை காரணமாக வெளியில் செல்லவேண்டியிருப்பதால்தானே பாதுகாப்பின்மை ஏற்படுகிறது.
ஆண்கள் என்ன முக்கிய வேலைக்காக மட்டுமா வெளியில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். சும்மாவே வெளியில் இருப்பதில்லையா? அதுபோல பெண்களும் வெளியில் செல்வதை வழக்கப்படுத்திக் கொண்டால் இரவுநேரங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்கிறார்.
பெரியார்: பெண்ணடிமைத்தனம் நீங்க, பெண் களே கிராப் வெட்டிக்கொள்ளுங்கள் என்றார் பெரியார். உங்களை அடிமையாக்கும் கர்ப்பப்பையை நீக்கிவிடுங்கள் என்று பெண்களிடம் பேசியுள்ளார். நூலாசிரியர் பெண்ணுரிமை பேசிய பெரியார் கூட, பெண்களுக்குதான் விதிமுறைகளை கூறியுள்ளார். ஆண் களுக்கு எதையும் சொல்லவில்லை. ஏன் சொல்லவில்லை? என்று கேட்டு மாற்றுச் சிந்தனையை நம்மிடம் விதைக்கிறார்.
பதின்பருவம் மூன்று நிலைகளில் மனித வாழ்வில் நடைபெறும். குழந்தைகளுக்கு ஏற்படும் முன் பதின்பருவம், நாற்பதுகளில் மெனோபாஸ் காலத்தில் ஒரு பதின்பருவ மனநிலை, எழுபதுகளில் மூன்றாம் பதின்பருவ மனநிலை ஏற்படும் என்கிற தகவல் புதிதாக இருந்தது. சரி இந்தபதின்பருவ காலத்தில் மனநிலையை யும்,உடல்புரிதலையும் எப்படி சமாளிப்பது?
மீ டூ பிரச்சினைகள்: பெண் குழந்தைகள் எந்தளவுக்கு சிறிய வயதுகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களோ அதே மாதிரி ஆண் குழந்தைகளுக்கும் நிகழ்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
சிறிய வயது பாலியல் துன்புறுத்தல் ஏற்படுத்தும் காயம், வாழ்நாளில் எல்லா நிலையிலும் வெற்றி அடைவதை தடுக்கும் தடுப்பானாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
முறையான பாலியல் கல்வியை அரசு தருவதற்கு முன்வர வேண்டும். வளர்ந்தவர்கள், பெரியவர்கள் தேவைப் படுபவர்களுக்கு பாலியல் அறிவை, அரசியல் அறிவை கற்றுத் தந்துகொண்டே இருக்க வேண்டும் என்கிறார். மீ டூ மூலம் வெட்கப்படாமல் பாலியல் துன்புறுத்தல் கதைகளை சொல்ல ஆண்களும் முன்வர வேண்டும்.
எதைக் கற்றுத் தர வேண்டும்? - குழந்தை பெற்றுக்கொண்டோர் அனைவருக்குமே குழந்தையை வளர்க்கத் தெரிந்துதான் வளர்க்கிறோமா? வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்காமல் கதவை அடைத்துக் கொள்ள குழந்தைகளை பழக்கி வைத்திருக்கிறோம். வீட்டுக் கழிவறையை முழுமையாகப் பயன்படுத்தஆண் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும். வீட்டிலுள்ள அனைவருமே வாரத்திற்கு ஒருமுறை கழிவறையை சுத்தம் செய்வதை பழக்கமாகக் கொள்ள வேண்டும்.
தெருவில் எங்கு வேண்டுமானாலும் சிறுநீர் கழித்துவிட முடியும் என்பது ஆண்களுக்கான உரிமை இல்லை. அப்படி ஆண் செய்யாமல் இருக்க, தெருவிற்கு ஒரு பொதுக்கழிப்பறையைக் கட்டித் தரவேண்டியது அரசின் கடமை. கழிப்பறை கையாளல் வைத்துதான் ஒரு ஆணின் பொறுப்பின் தன்மையை அளவிட முடியும் என்கிறார் நூலாசிரியர்.
குழந்தைகளிடம் உரையாடுகிறோமா? - குழந்தைகள் இப்படிதான் இருக்க வேண்டும் என்று வற்புறுத்த உரிமையே இல்லை. இந்த வயதில் காதலிக்கக் கூடாது என்று சொல்லும் பெற்றோர், எந்த வயதில் காதலிக்கலாம் என்று சொல்லித் தருகின்றனரா? இதுமாதிரி வீடியோக்களைப் பார்க்கக் கூடாது என்று சொல்லும் பெற்றோர், எதுமாதிரி பார்க்க வேண்டும் என்று சொல்லித்தருகின்றனரா? பார்க்கக் கூடாத வீடியோக்களை தடை செய்ய முடிகிறதா?
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை மட்டுமல்ல. சமுதாயக் கடமையும் கூட. நல்ல குழந்தைகளை சமுதாயத்துக்கு தர வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. எழுத்தாளர் பிருந்தா சேது தன் அனுபவங்களுடன், முழுமையான சமத்துவம் நிலவ, ஆண் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டியது எப்படி? பெண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? என ஒவ்வொரு பருவத்திற்குமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். படிப்பவருக்கு நூலின் ஒவ்வொரு வரியும் தன் கடமையை எடுத்துச் சொல்லும் சிறப்பான நூல் ‘கேளடா மானிடவா.’
- ஆர்.உதயலஷ்மி | கட்டுரையாளர்: குழந்தை நேய செயற்பாட்டாளர், ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருப்புட்குழி,காஞ்சிபுரம். தொடர்புக்கு:udhayalakshmir@gmail.com