

யாழ்மதி, அப்பாவுடன் சேர்ந்து கட்டுரை வாசித்தாள். கரோனாவின் போது, இங்கிலாந்தில் குடும்ப வன்முறை அதிகரித்தது. உதவி பெறுவதும், புகார் சொல்வதும் பெண்களுக்கு சவாலாக இருந்தது. இப்பெண்களுக்கு உதவ, ரகசிய குறியீடு உருவாக்கினார் சூசன் ஜேக்கப். ஏறக்குறைய எல்லா மருந்துக் கடைகளுக்கும் தகவல் சென்றது.
பாதிக்கப்பட்ட பெண், அனி என்று சொன்னால் போதும் (ANI-Action Needed Immediately). உள்ளூர் அல்லது தேசிய உதவி மையத்துக்கு மருந்தாளுநர் தகவல் சொல்வார். காப்பாற்றப்படுவார்கள்.
இதை வாசித்ததும், இதை அறிந்த தென் ஆப்பிரிக்காவின், கரோலின் பீட்டர்ஸ் தங்களுக்கான ரகசிய குறியீடு உருவாக்கி கேப் டவுனில் நிறைய பெண்களைக் காப்பாற்றியுள்ளார் என்றார் அப்பா. அறைக் குள் வந்த அம்மாவும், போலந்து நாட்டில் கிறிஸ்டினா பாஸ்கோ இதேபோல செய்திருக்கிறாள் என்றார்.
உலகமெல்லாம் வன்முறை: கரோனா ஊரடங்கில், உலகம் முழுவதுமே பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்தது. மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டார்கள். கணவருக்கோ அல்லது வீட்டில் மற்றவர்களுக்கோ தெரியாமல் புகார் கொடுக்க செல்ல முடியாத நிலை. ஆதரவும் ஆறுதலும் தேடகூட வழியில்லை. தன் நாட்டு பெண்களுக்கு எப்படி உதவலாம் என்று, 17 வயது பள்ளி மாணவி கிறிஸ்டினா யோசித்தாள்.
மற்றவர்களுக்கு உதவுவதும், தன்னைத் சுற்றி இருக்கும் இந்த உலகை நேசிப்பதும் எவ்வளவு முக்கியமானது என்பதை சாரணர் இயக்கம் கற்றுக் கொடுத்தது. மனித உரிமை மற்றும் பெண் உரிமை குறித்து ஆர்வம் கொண்டிருந்த, கிறிஸ்டினா குடும்ப வன்முறை குறித்து ஏற்கெனவே நிறைய வாசித்துக் கொண்டிருந்தாள். வார்சா சாரணர் குழுவை வழிநடத்திய அனுபவமும் இருந்தது.
பிரான்ஸ் நாட்டில், பெண்கள் மருந்து கடைகளுக்குச் செல்லும் தகவலை கிறிஸ்டினா வாசித்தாள். ‘குறிப்பிட்ட முகக்கவசம் தாருங்கள்’ என்று கேட்டு வாங்கினால், அப்பெண், வீட்டில் தான் துன்புறுத்தப்படுவதை மறைமுகமாகச் சொல்கிறார் என்று பொருள். மருந்தாளுநர் துரிதமாகச் செயல்படுவார். அப்பெண் காப்பாற்றப்படுவார். இத்தகவல், கிறிஸ்டினாவுக்கு ஒரு தெளிவைக் கொடுத்தது.
பொய்யெல்லாம் பொய்யல்ல: அழகு சாதனப் பொருட்கள் விற்பதாக, போலி விற்பனை பக்கத்தை முகநூலில் தொடங்கினார். பெயர், ‘Rumianki i Bratki’. “இயற்கை அழகு சாதன பொருட்கள் இங்கு கிடைக்கும். மிகச் சரியான குறிப்பிட்ட பொருளை நீங்கள் வாங்குவதற்கும் உங்களின் மற்ற அனைத்து சிக்கல்களுக்கும் நாங்கள் உதவுகிறோம்” என்று பதிவிட்டார். 9 பொருட்களை பட்டியலிட்டார்.
பயன் குறித்தும் எழுதினார். வாங்க விரும்புகிறவர்கள், தனிப்பட்ட உரையாடலில் தொடர்பு கொள்ளவும் என குறிப்பிட்டார். தொடர்பு கொண்டவர்களுக்கு வழிகாட்டினார். 40 வயதுக்குட்பட்ட பெண்களே அதிகம். மேலும், பதின்பருவ ஆண் மாணவர்களும் உதவி கேட்டார்கள். மீட்புக்காக ஏங்கியவர்கள், பயன் குறித்து முகநூலில் எழுதினார்கள், பகிர்ந்தார்கள்.
நண்பர்களுக்கும் நண்பர்களின் நண்பர்களுக்கும் பயனளிக்கும் என்றுதான் முதலில் கிறிஸ்டினா நினைத்தார். ஆனால், எண்ணிக்கை அதிகரித்ததும், பெண்கள் உரிமை மையம், மற்றும் தன்னார்வ அமைப்பு ஒன்றிடம் உதவி கேட்டார். உளவியல் நிபுணர்களையும், வழக்கறிஞர்களையும் உதவிக்குக் கொடுத்தார்கள்.
அதன் பிறகு, தனிப்பட்ட உரையாடல் பகுதிக்கு யார் தகவல் அனுப்பினாலும், உளவியல் நிபுணர்தான் முதலில் பேசினார். “எவ்வளவு நாட்களாக தோல் வியாதி உள்ளது?” அல்லது பாதிக்கப்பட்ட தோலில் மருந்து பட்டால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படுகிறது? போன்ற கேள்விகளை முதலில் கேட்டார். உரையாடல் தொடரும். “பொருள் வேண்டும்” என்று ஒருவர் சொல்வதுதான் குறியீடு. உடனே, அதிகாரிகள் அந்த முகவரிக்குச் சென்று காப்பாற்றுவார்கள்.
“கடந்த 15 ஆண்டுகளாக பார்க்கிறேன்! குடும்ப வன்முறையை குற்றச் செயலாகப் பார்க்காமல், சாதாரண குடும்ப பிரச்சினைபோல கையாளுவதில் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். நம் சமூக அமைப்பே இச்சிந்தனைக்கு தீனி போடுகிறது” என்று சொல்லி பெண்கள் பாதுகாப்புக்காகப் போராடுகிறார் கிறிஸ்டினா.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர்; தொடர்பு: sumajeyaseelan@gmail.com