Published : 27 Feb 2023 05:59 AM
Last Updated : 27 Feb 2023 05:59 AM

டிங்குவிடம் கேளுங்கள் - 28: மனிதர்களால் மட்டுமே சிரிக்க முடியுமா?

காரமாகச் சாப்பிடும்போது கண்களிலும் மூக்கிலும் தண்ணீர் வருகிறதே ஏன், டிங்கு?

– என். ஆதித்யா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, திருச்சி.

மிளகாய் விதைகளில் கேபசைசின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. நாம் காரம் அதிகமான உணவைச் சாப்பிடும்போது, நாக்கில் தீப்பிடித்ததுபோல் எரிச்சல் உண்டாகிறது. உதடு, நாக்கு, மூக்கு போன்ற பகுதிகளில் சீதமென்சவ்வுப் (mucous membrane) படலம் அந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் இருக்கிறது.

அந்நியப் பொருள்களைத் தடுப்பது இவற்றின் முக்கியப் பணி. நாம் காரமாக உணவு சாப்பிடும்போது, உடலுக்குக் கேடு விளைவிக்கும் அளவுக்குக் காரம் இருக்கிறது என்பதை நம் மூளை எச்சரிக்கிறது. உடனே அந்தக் காரத்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகச் சீதமென்சவ்வுப் படலம் நீரைச் சுரக்கிறது.

அதனால் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் கண்களிலிருந்தும் நீர் வெளியேறுகிறது. சீதமென்சவ்வு மூலம் இந்தத் தகவல் குடலுக்கும் செல்கிறது. குடல் கேபசைசினை வெளியேற்றும் நடவடிக்கைகளில் இறங்குகிறது. அதிகமான காரத்திலிருந்து குடலைக் காக்க, நீரைச் சுரந்து பேதியாக வெளியேற்றிவிடுகிறது. காரமான உணவைச் சாப்பிட்டுவிட்டால், உடனே குளிர்ந்த பாலைப் பருகலாம், ஆதித்யா.

மனிதர்களால் மட்டுமே சிரிக்க முடியுமா, டிங்கு?

– மு. ரங்கராஜன், 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரை.

இல்லை, ரங்கராஜன். மனிதர்களைப் போல் இன்னும் சில விலங்குகளும் சிரிக்கின்றன. இவை சிரிப்பதுபோல் குரலை எழுப்புகின்றன, அல்லது பற்களைக் காட்டிச் சிரிக்கவும் செய்கின் றன. குரங்கு இனங்களில் சிம்பன்ஸி, கொரில்லா, மனிதக் குரங்கு, ஒராங் ஊத்தான் போன்றவை குரல் மூலமாகவும் பற்களைக் காட்டியும் சிரிக்கின்றன. விளையாடும்போது, மகிழ்ச்சியாகத் துரத்தும்போது, கிச்சுக்கிச்சு மூட்டும்போது சிரிப்பை வெளிப்படுத்துகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x