

இரை தேடிச் சென்ற புறாக் கூட்டம் மாமரத்தின் பொந்துகளில் மாலையில் வந்தடையும். அடுத்த மரக்கிளைகளில் காகமும் வசித்து வந்தது. எப்போதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். குஞ்சு புறாவுக்கு நீண்ட தூரம் பறக்க ஆசை. அதனால் இரை தேடி போனபோது பறந்து கொண்டே இருந்தது. நீண்ட தூரம் பறந்த களைப்பில் தண்ணீர் தாகம் எடுத்தது. சுற்றி முற்றி பார்த்தது எங்குமே தண்ணீருக்கான தடயமே இல்லை.
கொஞ்ச தூரத்தில் தண்ணீர் குடிக்கும் சத்தம் கேட்டு அருகே சென்றது. நீர் யானை தான் தண்ணீர் அருந்திக் கொண்டு இருந்தது. நல்லவேளை பிழைத்துக் கொண்டோம் என்று நீர் யானையிடம் நீரை பெற்று அருந்தியது. அப்பாடா... இப்ப தான் உயிர் வந்தது என்று நன்றி சொல்லியது. இருவரும் நண்பர்களாக பழகினர். தாயின் நினைவு வரவே நீர் யானையிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டது .
அதற்குள் தாய் புறாவோ கவலையோடு கூட்டிற்குள் அமர்ந்து இருந்தது. பட பட என்று சிறகு அடிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது குஞ்சு புறா மயங்கிய நிலையில் கிடந்தது. காகமும் புறாவும் மயக்கத்தை தெளிய வைத்து மன நிம்மதி அடைந்தார்கள். கண் விழித்துப் பார்த்த குஞ்சுப் புறா தாயிடம் நடந்ததை கூறியது. நீர் யானை சரியான நேரத்தில் உதவி செய்யா விட்டால் உன்னை பார்த்து இருக்கவே முடியாது என்று வருந்திக் கூறியது. இதைத்தான் வள்ளுவர்,
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது" என்றார்.
குறள்: 102
அதிகாரம்: செய்நன்றியறிதல்
- முனைவர் இரா.வனிதா | கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர்