

என்ன நிகழ்கிறது, ஏன் நிகழ்கிறது என வினவுவதே ஆய்வுச்சிந்தனைக்கான திறவுகோல் என்று எழில் விளக்கியதும், ஏன் ஆய்வுச்சிந்தனை தேவைப்படுகிறது? என்று வினவினாள் பாத்திமா.
வடிவழகியும் பெருந்தேவியும் அண்டைவீட்டினர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் உறவில் விரிசல் விழுந்தது. அதிலிருந்து அந்த இருவீட்டினரும் பேசிக் கொள்வது இல்லை. இந்நிலையில், பெருந்தேவியின் வீட்டு வாசலில் அவர் மகன், அவனைவிடச் சிறியவன் ஒருவனை அடித்துக் கொண்டு இருக்கிறான். அச்சிறுவனைக் காப்பாற்ற விரும்பும் வடிவழகி இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்று எழில் வினவினார்.
அடிக்க உரிமை இல்லை: பெருந்தேவி மகனைத் திட்டிவிட்டு, அச்சிறுவனை அங்கிருந்து அனுப்ப வேண்டும் என்றாள் நன்மொழி. அதனால் பெருந்தேவிக்கும் வடிவழகிக்கும் மீண்டும் சண்டை வருமே! என்றான் சுடர். அதற்காக அச்சிறுவனை அடிபடவிடலாமா? என்றாள் கயல்விழி. கூடாது என்றான் அழகன்.
அச்சிறுவனிடம் ‘நீ ஓடிவிடு’ என வடிவழகி கூற வேண்டும் என்றாள் மணிமேகலை. சிறுவன் ஓடினால், பெருந்தேவி மகன் விரட்டிப்போய் அடிப்பான். திரும்பி வந்து வடிவழகி பற்றிப் பெருந்தேவியிடம் கோள்மூட்டுவான் என்றான் சாமுவேல்.
சண்டை வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என எண்ணி, இப்பொழுது அச்சிறுவனை வடிவழகி காப்பாற்ற வேண்டும் என்றாள் இளவேனில். சண்டையே வராமல் அச்சிறுவனைக் காப்பாற்ற முடியாதா? என்று வினவினான் முகில். வடிவழகி நேரடியாகத் தலையிட்டால்தானே சண்டைவரும். அருகிலுள்ள யாரையேனும் தலையிடச் சொல்லாமே! என்றாள் மதி. வடிவழகிதான் பிறரைத் தலையிட வைத்தார் என்று பெருந்தேவிக்குப் பின்னர் தெரிந்தால் சண்டை வரதா? என்று வினவினான் தேவநேயன்.
அப்படி வந்தால், உண்மையில் என்ன நடந்தது என்பதை சிறுவர் சண்டையில் தலையிட்டவர் விளக்குவரே என்றாள் தங்கம். ஒருவேளை அந்தச் சிறுவன் தவறு செய்திருந்து, அதனைப் பெருந்தேவி மகன் கண்டித்துக் கொண்டிருந்தால்... என்று இழுத்தான் காதர். அப்படியே இருந்தாலும் யாரையும் அடிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்றாள் நன்மொழி.
ஆய்வுச் சிந்தனை ஏன் தேவை? - உரையாடலைக் கவனித்துக் கொண்டு இருந்த எழில், ஆய்வுச்சிந்தனை ஏன் தேவை என இப்பொழுது தெரிகிறதா? என்று பாத்திமாவிடம் வினவினார். சூழலை ஆராய்ந்து முடிவெடுத்துச் சிக்கலைத் தீர்க்க ஆய்வுச் சிந்தனை தேவைப்படுகிறது என்றாள் பாத்திமா. ஆம் என்ற எழில், நமது வாழ்வில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன; பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊடாடுகின்றனர்; நாம் வாழும் சமுதாயத்தில் எழும் சிக்கல்களுக்கும் நமக்கும் தொடர்புகள் இருக்கின்றன.
எனவே அச்சிக்கல்களை, ஆள்களை, சமுதாயத்தை ஆய்வுச்சிந்தனையோடு நோக்கினால்தான் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அப்பொழுதுதான் அவற்றைச் சரியாகக் கையாள முடியும். இல்லையென்றால் நமது உணர்வுகள், சிந்தனைகள், முடிவுகள், செயல்கள் உள்ளிட்ட அனைத்தும் தவறாகப் போய்விட வாய்ப்புகள் இருக்கின்றன என்று விளக்கினார்.
ஆய்வுச்சிந்தனையும் விமர்சனமும் ஒன்றா? என்று வினவினான் அருளினியன். இல்லை. ஒன்றைப் பற்றி ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வருவது ஆய்வுச்சிந்தனை. அந்த முடிவின் மீதுள்ள கருத்துமாறுபாட்டைத் தெரிவிப்பது விமர்சனம் என்றார் எழில்.
இந்த நிகழ்வில் வடிவழகி, அச்சிறுவனைக் காக்கும் வழிமுறையை ஆராய்ந்து, வேறொருவர் வழியாகத் தலையிட்ட முடிவுசெய்வதை ஆய்வுச்சிந்தனை எனவும் அந்த முடிவு தவறு எனக் கருதும் ஒருவர அதற்கான காரணத்தை விளக்குவதை விமர்சனம் எனவும் சொல்லலாமா? என்று வினவினாள் அருட்செல்வி. ஆ
ம் என்ற எழில், ஆய்வுச்சிந்தனை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வாழ்வில் உயர வாழ்த்துகள் என்று கூறி அன்றைய வகுப்பை நிறைவுசெய்தார்.
- அரிஅரவேலன் | கட்டுரையாளர், வாழ்க்கைத் திறன் கல்வித் திட்ட வடிவமைப்பாளர் மற்றும் பயிற்றுநர்; தொடர்புக்கு: ariaravelan@gmail.com