பிளஸ் 2 க்குப் பிறகு - 18: கணிதப் புலிகள் கவனத்துக்கு

பிளஸ் 2 க்குப் பிறகு - 18: கணிதப் புலிகள் கவனத்துக்கு
Updated on
2 min read

பள்ளிப் பருவத்தில் மாணவ மாணவியரின் விருப்பத்துக்குரிய பாடங்களில் ஒன்றாக கணிதம் இருக்கும். அவர்கள் அதன் பின்னரான உயர்கல்வியாகவும் கணிதத்தை எடுத்து படிக்க ஆர்வமாக இருப்பார்கள். ஆனால், கணக்கு நன்றாக வந்தாலே பொறியியல் படிப்பில் சேருமாறு பலரும் பரிந்துரை செய்வார்கள்.

கணிதம் எடுத்துப் படிப்பதும், பொறியியல் பாடங்களை எடுத்துப் படிப்பதும் அடிப்படையில் வெவ்வேறானது. பொறியியல் பாடங்களில் கணிதமும் அடங்கியிருக்கும் என்ற போதும், குறிப்பிட்ட துறையிலான பொறியியல் படிப்பை முடிக்க அது மட்டுமே போதாது.

மேலும் கணிதத்தில் மட்டுமே ஈடுபாடு கொண்டவர்களை ஏதேனும் ஒரு பொறியியல் துறையில் சேர நிர்ப்பந்திக்கக் கூடாது. அவர் விரும்பிய கணிதப் பாடத்திலேயே உயர்கல்விக்கான பிரகாசமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. பொறியியலை விட சிறப்பான எதிர்காலமும் அவற்றில் பொதிந்திருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாய் உயர்கல்வி படிப்புகள் அறிமுகமாகி வருகின்றன. ஆனபோதும் ஒரு சில அடிப்படையான படிப்புகள் தலைமுறைகள் தாண்டியும் வரவேற்பு இழக்காது இருக்கின்றன. அவற்றில் தலையாயது கணிதம். பிளஸ் 2 வரை கணிதத்தை விரும்பி படித்தவர்கள், உயர்கல்வியிலும் இளம் அறிவியல் படிப்பாக கணிதத்துக்கே விண்ணப்பிக்கலாம்.

விதவிதமான படிப்புகள்: கணிதத்தை பாடமாக எடுத்து படிப்பவர்களால் பொறியியல் மட்டுமன்றி இயற்பியல், நிதி, புள்ளியியல், பொருளாதாரம் என பல துறைகளில் தங்கள் உயர்கல்வியை முன்னெடுக்கவும், அவை சார்ந்த திடமான பணியிடங்களை குறிவைக்கவும் முடியும்.

பி.எஸ்சி., கணிதம் என்ற 3 ஆண்டு இளம் அறிவியல் படிப்பு கலை அறிவியல் கல்லூரிகள் அனைத்திலும் கிடைக்கிறது. சில கல்லூரிகள் பி.ஏ. என்ற இளங்கலை படிப்பாகவும் கணிதத்தை வழங்குகின்றன. பி.எஸ்சி.,-ல் கணிதம் பிரதான பாடமாகவும் இயற்பியல், வேதியியல் போன்ற இதர அறிவியல் பாடங்கள் உதவிப் பாடங்களாக அமைவதுபோல, பி.ஏ. கணிதத்தில் ஆங்கிலம் அமைந்திருக்கும்.

சென்னை கணித அறிவியல் நிறுவனம் (https://www.cmi.ac.in/) போன்ற சிறப்பான கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கணிதம் பயில்வது நல்லது. பெங்களூரு புள்ளியியல் நிறுவனம் 3 ஆண்டு படிப்பாகவும், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (https://www.iisc.ac.in/) 4 ஆண்டு படிப்பாகவும், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (https://www.iiseradmission.in/) மற்றும் பல ஐஐடி நிறுவனங்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பாகவும் கணிதத்தை வழங்குகின்றன. வேறு சில முன்னணி கல்வி நிறுவனங்கள், பிளஸ் 2 மதிப்பெண்களோடு, தனி நுழைவுத் தேர்வுகள் வாயிலாக சேர்க்கை நடத்துகின்றன. ஒரு சில தனியார் கல்லூரிகள் JEE தேர்வு மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.

சிறப்பான வேலைவாய்ப்பு: ஆர்வமுள்ளவர்கள் முதுகலை முடித்துஆராய்ச்சி நிலை வரை கணித உயர்கல்வியை கொண்டு செல்லலாம். முதுநிலைபடிப்பை கணிதம் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் சார்ந்த நவீன துறைகளில் மேற்கொள்வோருக்கு சிறப்பான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

சைபர் செக்யூரிட்டி, ஆட்டோமேஷன் இன்டலிஜென்ஸ், நியூமரிக்கல் அனலிடிக்ஸ், க்ரிப்ட் அனலிடிக்ஸ், டேட்டா அனலிடிக்ஸ் துறைகள் இவற்றில் அடங்கும். இவை தவிர்த்து கணிதமும் புள்ளியியலும் கலந்த Actuarial Science துறை, நிதிச்சந்தை, காப்பீடு, தொழில் வணிகம், கணினி சார்ந்தவை என கணிதம் படித்தவர்களுக்கான மிகப்பெரும் உலகம் காத்திருக்கிறது.

- கட்டுரையாளர் தொடர்புக்கு: subashlenin.s@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in