

இந்த மாநிலத்தோட பேரு கேள்விப்பட்டு இருக்கீங்களா? மத்தியப் பிரதேசம். பேருல இருந்தே என்ன தெரியுது? இந்தியாவின் மையத்துல இருக்குது. ஆம், இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம் இது. தலைநகர் போபால். குவாலியர், உஜ்ஜயின், ஜபல்பூர் உள்ளிட்ட பெரிய நகரங்கள் நிறைய இந்த மாநிலத்தில் உள்ளன. ஏழு கோடிக்கு மேல மக்கள் வாழறாங்க. இந்தி பிரதான மொழி.
வடக்கே கங்கை யமுனை சமவெளி; மேற்கே ஆரவலி மலைத் தொடர், கிழக்கே சத்தீஸ்கர் சமவெளி, தெற்கே தாப்தி சமவெளி உள்ளன. சோன் சமவெளி மேலே அமைந்துள்ளது. ஷாடோல், சித்தி மாவட்டங்கள் இங்கு உள்ளன. கீழே உள்ளது நர்மதா சமவெளி. கடல் மட்டத்தில் இருந்து 300 மீ மேலே இருக்கிறது. இங்கு விவசாயம் மிகுந்து காணப்படுகிறது. இதற்கு வடக்கே ‘மத்திய உயர் நிலம்’ நர்மதா, சோன் சமவெளி மற்றும் ஆரவெலி மலைத் தொடருக்கு இடையே முக்கோண வடிவத்தில் அமைந்துள்ளது. வடக்கே சரிந்து யமுனை நதிக் கரையில் முடிகிறது. ரேவா-பன்னா உள்ளடக்கிய விந்திய பீடபூமி இங்குள்ளது.
உயரமான சிகரம்: வடமேற்கே பண்டல்காண்ட் மண்டலம் உள்ளது. இங்குதான் டாடியா, சட்டர்பூர், பன்னா, டிகார்கர், குணா, சிவ்பூரி மாவட்டங்கள் உள்ளன. இதற்கு வடகிழக்கே விந்திய நிலப் பிரதேசம் இருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீ உயரம் உள்ளது. இந்தப் பகுதியில் பேட்வா, தசன், ஜாம்னர் ஆறுகள் பாய்ந்து யமுனையில் கலக்கின்றன. சிவ்புரி மோரினா, குவாலியர் மாவட்டங்களின் வழியே காளிசிந்து மற்றும் பார்வதி ஆறுகள் பாய்கின்றன.
மால்வா பீடபூமிக்கு வடக்கே சம்பல் பள்ளத்தாக்கு உள்ளது. ஷஜபூர் தேவாஸ் இந்தூர் உஜ்ஜயின் தார் ரட்லம் சேஹூர் ஜபுவா மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளது தலைநகர் போபால். ஷிப்ரா, பார்வதி, காளிசிந்து, கம்பீர், சம்பல் ஆறுகள் இங்கு பயணிக்கின்றன. கங்கை – நர்மதா படுகைகளுக்கு இடையில் உள்ள தண்ணீர்க் கோடு இது.
சாத்புரா மைக்கல் மண்டலத்தில் உயரமான மலை முகடுகள் நிறைய உள்ளன. மாநிலத்தின் மிக உயரமான சிகரம் டூப்கார் 1360மீ உயரத்தில் உள்ளது.
கிழக்குப் பகுதியான சாத்புரா அரை வட்ட வடிவில் உள்ளது. மைக்கல் எனப்படும் இந்த மலைப் பகுதியில் இருந்துதான் நர்மதா மற்றும் சோனே ஆறுகள் உருவாகின்றன. இந்த பகுதியில் உள்ள பிற ஆறுகள் ஜொகிலா, மச்சர்வா, தென்வா, ச்ஹோடி தாவா. இவைஅனைத்தும் நர்மதாவில் சென்று சேர்கின்றன. கிழக்குப் பகுதியில் பகல்காண்ட் சமவெளி உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 1033மீ உயரத்தில் உள்ளது.
விந்திய சாத்புர மலைகளுக்கு இடையே ஓடும் நர்மதா நதியைக் கொண்டுதான், வட இந்தியா, தென் இந்தியா என்று கூறுகிறோம்.
கரைபுரண்டோடும் நதிகள்: ம.பி.யில் ஆற்றுப் படுகைகள் ஐந்து உள்ளன. கங்கை/யமுனைப் படுகை; நர்மதா; தாப்தி; மஹி; வெயின்கங்கா (கோதாவரிப் படுகையின் ஒரு பகுதி. பேட்வா, சிந்த், தசன், கென், சம்பல், பைசனி, பாகியன் ஆறுகள் – யமுனையில் சேரும் கிளை ஆறுகள்; (யமுனை ஆறு பிறகு கங்கையில் கலக்கிறது) சோனே, தப்தி – நேரடியாக கங்கையில் சேரும் கங்கையின் கிளை ஆறுகள்.
மத்தியப் பிரதேசத்தில் உருவாகும் 12 ஆறுகள்: நர்மதா (ரேவா என்றும் அழைக்கப் படுவதுண்டு) மஹி, சம்பல், பேட்வா, சோன், டோன்ஸ், தாப்தி, கென், தசன், குன்வாரி, சிந்த், பைசனி