

குடிமைப்பணி பிரிவுகளில் முக்கியமான இந்திய தகவல் பணி (ஐஐஎஸ்) பெற்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றுகிறார் மருத்துவர் அருண் குமார் சிங். யூபிஎஸ்சி தேர்வை தனது இரண்டாவது முயற்சியில் பெற்ற இவர் 2018 பேட்ச்சின் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அதிகாரியாகி விட்டார்.
இவரது தந்தை பதன் சிங், மத்தியப் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மூத்த மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி கமலேஷ் மற்றும் மகன் டாக்டர் அருண் குமார் சிங், மகள் டாக்டர் அகான்ஷா சிங் ஆகியோர் உள்ளனர்.
தற்போது இவர் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் வசிக்கிறார். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தின் பல்வேறு நகரங்களிலும், டெல்லியிலும் தந்தை பதன் சிங் பணியாற்றினார். எனவே, சிறுவயதில் அருண் சிங், லக்னோவின் தனியார் நர்சரி பள்ளியில் சேர்க்கப்பட்டார். பின்னர் டெல்லியிலும், ம.பி மாநிலத்தின் பல நகரங்களின் கேந்திர வித்தியாலயா பள்ளிகளிலும் பயின்றுள்ளார்.
ஐஏஎஸ் பற்றி தெரியாமலே வளர்ந்தேன்: தன் பள்ளி நாட்கள் குறித்து அதிகாரி டாக்டர் அருண் குமார் சிங் கூறும்போது, “நான் ஆங்கிலவழி பள்ளிகளில் படித்தேன். எப்போதும் முதல் மூன்று ரேங்க் வரை பெற்றேன். அடிக்கடி பள்ளிகள் மாறுவது எனக்கு பழகி விட்டதால், அதன் பாதிப்பு எனக்கு சிறிதும் இல்லை.
ஆசிரியர்கள் வகுப்பில் நடத்தும் பாடங்களை நன்றாகப் புரிந்துகொள்ளும் திறனும் எனக்கிருந்தது. எனது பள்ளிப் பருவத்தில் பெற்றோர், நான் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என தொடர்ந்து கூறி வளர்த்தனர். பள்ளி வாழ்க்கை வரை அதன் அர்த்தம் கூட எனக்கு புரியவில்லை” எனத் தெரிவித்தார்.
பிளஸ் 2-ல் முதல் குரூப் எடுத்த அருண் சிங்கிற்கு, அரசு நுழைவுத்தேர்வு மூலம் இளநிலையில் மருத்துவம் கிடைத்தது. உபி கான்பூரிலுள்ள கணேஷ் சங்கர் வித்தியார்தி மெமோரியல் அரசு மருத்துவக் கல்லூரியில் 2013-ல் எம்பிபிஎஸ் முடித்தார்.
அதே வருடம் முதுநிலைக்கான அரசு நுழைவுத்தேர்விலும் மீரட்டின் லாலா லாஜ்பத் ராய் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அதிலும் சவால் மிகுந்த ரேடியாலஜி துறையில் அதை 2017-ல் முடித்தார்.
எம்பிபிஎஸ் படிக்கும்போது குடிமைப்பணிக்கான யூபிஎஸ்சி தேர்வு பற்றி அறிந்தார். தன் முதுகலைக் கல்வியின் இறுதியாண்டில் முதல் முயற்சி செய்தார். பிறகு முதுநிலை முடித்தவரின் இரண்டாம் முயற்சியில் 2017-ல் அருண் சிங்கிற்கு ஐஐஎஸ் கிடைத்தது. இப்பணியில் அவர் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல் தொடர்பு பிரிவில் உதவி இயக்குநராக உள்ளார்.
தோல்விக்கு அஞ்சாமல் முயன்றேன்: இது தொடர்பாக அதிகாரி அருண் சிங் நினைவுகூருகையில், “மருத்துவராகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. அதிலும் மருத்துவரான பின் குடிமைப்பணிக்கு செல்ல விரும்புபவர்கள் மிகவும் குறைவு. இப்பணிக்கான தேர்வை எழுத முடிவு செய்தபோது, எம்பிபிஎஸ் வகுப்பில் இருந்தேன். இருப்பினும், முதுநிலையும் முடித்து முழுமையான மருத்துவரானால் கையில் ஒரு நிரந்தர தொழில் கிடைத்து விடும்.
அதன்பின், குடிமைப்பணிக்கான தேர்வு எழுதி தோல்வியுற்றாலும் கவலை இல்லை என நினைத்தேன். யூபிஎஸ்சிக்காக டெல்லியின் வாஜிராம் நிறுவனத்தில் மட்டுமே பயிற்சி பெற்றேன். அதுவரையிலும் நான் எதற்கும் கூடுதல் பயிற்சி பெறவில்லை. ஐஐஎஸ் பெற்ற பின் ஒரு வருடம் சிறப்பு விடுமுறை எடுத்து படித்து 2019 -ல் ஐஏஎஸ் பெற மீண்டும் தேர்வு எழுதினேன். இதில், நேர்முகத்தேர்வு வரை சென்றாலும் எந்த பணியும் கிடைக்கவில்லை” என்றார்.
பள்ளியில் சமஸ்கிருத மொழியை கற்ற அருண் மருத்துவம் பயிலும்போது பிரஞ்சு மொழியும், ஐஐஎஸ் பயிற்சியில் ஸ்பானிஷ் மொழியும் கற்றுள்ளார். இதற்கு அம்மூன்று மொழிகளுக்கும் இலக்கணத்தில் நெருங்கியத் தொடர்பு இருந்தது காரணமானது. 75 மாவட்டங்கள் கொண்ட உபியில் தற்போது 62 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
ஆனால், அருண் சிங் எம்பிபிஎஸ் நுழைந்த காலத்தில் வெறும் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இதனால், அதில் சேர அருண் சிங் பெரும் போட்டியை சந்திக்க வேண்டி இருந்தது. இச்சூழலில், கிடைத்த மருத்துவ பணியை விடுத்து குடிமைப்பணிக்கு வரவேண்டிய அவசியத்தையும் அருண் சிங் உற்சாகத்துடன் விவரித்தார்.
ஐஐஎஸ் பணிக்கு உதவும் மருத்துவம்: அருண்சிங் கூறும்போது, “குடிமைப்பணியில் உள்ள அதிகாரிகள் கலை, அறிவியல், அக்கவுண்டன்ஸி மற்றும் பொறியியல் உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளில் படித்து வந்தவர்கள். இவர்களுக்கு தாங்கள் பெற்ற இளைநிலை பட்டப் படிப்பு பணியின்போது அதிகம் உதவுகிறது.
இதுபோல், மருத்துவம் பயின்றவர்களும் குடிமைப்பணியில் இருப்பது அரசுக்கும், பொதுமக்களுக்கும் நல்லது. இதைத்தான் நான் தற்போது ஐஐஎஸ் பணியில் பல அமைச்சகத் துறைகளில் பூர்த்தி செய்து வருகிறேன். எந்த பணியிலும் தாம் வாழ்க்கையில் பயின்ற கல்வி உதவாமல் இருக்க முடியாது” என உறுதியாகப் பேசினார்.
தனது வெற்றிக்கான பெரும்பங்கு தன் பெற்றோரையே சேரும் எனத் தெரிவிக்கும் அதிகாரி அருண் சிங்கிற்கு அவரது பள்ளி வகுப்பின் ஆங்கில ஆசிரியரான பத்ருல் ஹசன்உள்ளிட்ட பல ஆசிரியர்களும் வழிகாட்டியாக இருந்துள்ளனர். ஐஐஎஸ் பணி மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகிறது. இதனால் அருண் சிங், அதன் சார்பில் தேசிய வானொலி உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களில் பணியாற்றி உள்ளார்.
தற்போது அவர், மிக முக்கியமான மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவல் தொடர்பு அதிகாரிகள் குழுவில் உதவி இயக்குநராக உள்ளார். இதில் தேசப் பாதுகாப்பு பணியின் உள்துறை அமைச்சகத்தின் ரகசியங்களையும் காத்து செய்திகளை வெளியிடும் அருண் குமார் சிங்கின் திறமை பாராட்டுதலுக்கு உரியது.
- கட்டுரையாளர் தொடர்புக்கு: shaffimunna.r@hindutamil.co.in