

நாம் இதுவரை நிறைய படித்து விட்டோம். இனி செய்து பார்க்க வேண்டியது முக்கியம். செய்து பார்ப்பதில் இரண்டு வகை உண்டு. முதலாவது நடைமுறை (practical). இரண்டாவது பயிற்சி (practice).
நடைமுறை என்பது நாம் படித்து அறிந்து கொண்டதை சோதித்துப் பார்த்து சரி என நம்புவது. உதாரணத்துக்கு, காலால் உதைத்தால் பந்து வேகமாக நகரும் என படித்ததை ஒரு முறை செய்து பார்த்தால் நம்பி விடுவீர்கள். ஆனால், நீங்கள் சிறந்த கால்பந்தாட்ட வீரராக உருவாக வேண்டும் என்றால் தினமும் பயிற்சி செய்ய வேண்டும். இதைத்தான் பிராக்டிஸ் என்கிறோம்.
இன்றைய எலக்ட்ரானிக்ஸை பயிற்சி செய்து பார்த்து கற்க வேண்டும் என மாணவர்களிடம் கூறினால், மாணவர்கள் முதலில் கேட்பது என்ன ப்ராஜக்ட் செய்ய வேண்டும், அதற்கு என்ன எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்க வேண்டும், எங்கு வாங்க வேண்டும், எவ்வளவு செலவாகும் என்பதாகும். இதற்கு பதில் அளிப்பதற்கு முன் நவீன தொழில்நுட்பத்தின் ஒரு சிறப்பு அம்சத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு செயலை கணினியை உதவியுடன் அதேபோல் உருவகப்படுத்தி (simulation) அதில் செய்து பார்த்து பழகுவதுதான் இந்த முறை. உதாரணத்துக்கு, விமானத்தை ஓட்டி பழகுவது என்பது மிகவும் கடினமான செயல். பழகும்போது தவறு செய்தால் ஏற்படும் விபத்துகளும் இழப்புகளும் அதிகம்.
இதற்காக கணினி உதவியுடன் விமானத்தின் ஓட்டுனர் அறை போன்று மாதிரியை செய்து வைத்திருப்பார்கள். இதில் அமர்ந்து மெய்நிகர் வழியில் விமானத்தை ஓட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளைட் சிமுலேட்டர் (Flight Simulator) என்று இதற்கு பெயர். இந்த முறை மிகவும் பாதுகாப்பானது, அதிக செலவில்லாதது.
மின்னியல் பழக உதவும் சிமுலேட்டர்: ஆகவே விமானத்தை பார்க்காமலேயே ஒருவர் விமானம் ஓட்ட கற்றுக் கொள்ள முடியும். உருவகப்படுத்தி கற்றுக் கொள்வதற்கும் பயிற்சி செய்வதற்கும் நிறைய மென்பொருள்கள் (சாப்ட்வேர்) வந்துவிட்டன. அதேபோல் எலக்ட்ரானிக்ஸ் கற்றுக் கொள்வதற்கும் நிறைய சிமுலேட்டர் மென்பொருள்கள் வந்துவிட்டன. அவை இலவசமாகவே கிடைக்கின்றன.
நடைமுறையில் எலக்ட்ரானிக்ஸ் கற்பதற்கு முன் இப்படி உருவாக்கப்பட்ட மென்பொருள்கள் மூலம் எலக்ட்ரானிக்ஸ் கற்று கொள்ளலாம். இது இன்றைய சிந்தனை. இதற்கு நமக்கு தேவை ஒரு கணனி, இணைய இணைப்பு மட்டுமே. இணைய சேவை இல்லாமல் வேலை செய்யக் கூடிய மென்பொருள்கள் இருக்கின்றன.
- பாலாஜி | கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்; தொடர்புக்கு: balajeeseshadri@gmail.com