

சர்வதேச தாய்மொழி நாள் அண்மையில் கொண்டாடப்பட்டிருக்கும் சூழலில் ஊடகத்தில் தமிழ் எந்த வகையில் உள்ளது என்று பேசவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மொழியின் முக்கியத்துவத்தை இன்றைய இளைய சமுதாயம் சரியாகக் கையாளவில்லையோ என்ற ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. இன்று ஊடகம் படித்துவரும் மாணவர்கள் மத்தியில் இதனை நன்றாகவே அறிந்து கொள்ள முடிகிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் கைப்பேசி.
இன்று வாட்சப் மற்றும் பல்வேறு சமூக ஊடகங்களில் பயன்படுத்தும் மொழி பெரும்பாலும் ‘தமிங்கிலீஸாக’ உள்ளது. எழுத்து இல்லாத மொழிகள் எத்தனையோ உள்ளன. அந்த மொழியைப் பயன்படுத்தும் மக்கள், தமக்கென்று ஒரு தனித்துவமான எழுத்து இல்லையே என வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் அதே சமயத்தில்தான் நாம், நம் மொழியை சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.
முதலில் இதை சாதாரண விடயமாகத் தான் பார்த்தோம். ஆனால், சமீபத்தில் ஒரு மாணவன் தனது தேர்வையே, இந்த முறையில் எழுதிப் பீதியடைய வைத்தார். அவரிடம் பேசிய போது, ‘வாய்ஸ் டு டெக்ஸ்ட்’ வந்த பின் குரல் வழியாகவே அனைத்து செய்திகளையும் டைப் செய்யும் வசதி, இது போன்ற மாணவர்களை மேலும் ‘சோம்பேறி’ ஆக்கிவிட்டது புரிய வந்தது.
உச்சரிப்பு முக்கியம்
என்னதான் ‘வாய்ஸ் டு டெக்ஸ்ட்’ வசதி இருந்தாலும், அடிப்படை மொழி அறிவு இல்லை என்றால், திண்டாட்டம்தான். அதனைத்தான் இன்று ஒரு சில ஊடகங்களில் ‘ஸ்க்ரோலிங்கில்’ ஓடும் எழுத்துப் பிழைகள் ஊடாக அறிந்து கொள்ள முடிகிறது.
உச்சரிப்பு சரியாகத் தெரிந்திருந்தால், இந்த பிரச்சினை முற்றிலும் வராது. ஆனால், இன்று மொழியே கேள்விக்குறியாகும் இடத்தில், உச்சரிப்பு என்பது இரண்டாம் பட்சமாகப் போய்விட்டது. ன,ண,ந, ல,ள,ழ, ர,ற போன்ற எழுத்துக்கள், இன்றைய ஊடக மாணவர்களுக்கு கசக்க காரணம், அடிப்படையிலேயே இதை கோட்டை விட்டுவிடுவதால் மட்டுமே.
ண, ந, ன எழுத்துக்களை சரியாக பயன்படுத்த எளிய வழிமுறை உள்ளது. ட இணைந்து வந்தால், ண வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எ.கா.: சுண்டல், வண்டல், கொண்டல். த இணைந்து வந்தால், ந வரும். எ.கா.: பந்து, வந்து, சொந்தம். ற இணைந்து வந்தால், ன வரும். எ.கா.: தென்றல், மன்றம், கொன்றை. அதே நேரத்தில், இப்படியான எழுத்து இல்லாத இடங்களில், சொற்கள் என்ன பொருள் உணர்த்த வேண்டுமோ அதற்கேற்ப ண, ந, ன எழுத்துக்களின் பயன்பாடு மாறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எ.கா.: பனம் – பனை மரம் - பணம் – காசு. மனம் – உள்ளம் - மணம் – திருமணம், நறுமணம். ஊண் – உணவு - ஊன் – புலால்.
கொஞ்ச நேரம் செலவழித்தால் போதும், இந்த பிரச்சினையை ஊடக மாணவர்கள் தவிர்த்துவிடலாம். குறிப்பாக ங, ட, ண, ர, ல, ழ, ள, ற, ன ஆகிய எழுத்துக்கள் சொல்லின் முதலில் வராது. தவிர்க்க முடியாமல் ர, ல போன்றவை முதலில் வரவேண்டியிருப்பின், ஓர் உயிரெழுத்தைத் தொடர்ந்தே வரவேண்டும் என்பது மரபு. எ.கா. அரங்கன், இரம்பம், இலப்பை.
ஊடக மாணவர்கள் என்றில்லாமல், எழுத ஆர்வம் கொண்ட அனைத்து மாணவர்கள் கையிலும் புரட்டிப் படிக்கும் விதமான நல்லதொரு தமிழ் அகராதி இருந்தால் நலம். ‘க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி’ இன்றைய ஊடக மாணவர்களுக்கு வரப்பிரசாதம். மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்டவர்கள், சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘தமிழ்-ஆங்கிலம்’ அகராதியை பயன்படுத்தலாம்.
- தங்க.ஜெய்சக்திவேல் | கட்டுரையாளர்: உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: bbcsakthi@gmail.com