தயங்காமல் கேளுங்கள் - 30: தேயாமல் இருக்கும் தேமல்!

தயங்காமல் கேளுங்கள் - 30: தேயாமல் இருக்கும் தேமல்!
Updated on
2 min read

“டாக்டர்.. என் முகம், கழுத்து, முதுகுப்புற பகுதிகள்ல திட்டுதிட்டா தேமல் இருக்கு. வெய்யில் காலம், வேர்வைனு வந்தாலே இதுவும் வந்துடுது. இது வராம இருக்க வழி எதுவும் இருக்கா?" என்று கேட்டிருக்கிறார் பிளஸ் 1 பயிலும் நவீன்.

நமது உடல் உறுப்புகளிலேயே மிகப்பெரியது தோல். இது நமது உள் உறுப்புகளுக்குப் பாதுகாப்பு உறையாக செயல்படுகிறது. அது மட்டுமல்லாமல் நமது உடலின் தட்பவெப்பத்தை சமச்சீராக வைக்கவும், காயங்களை குணப்படுத்தவும், நீர் மற்றும் கொழுப்பை சேமிக்கவும், வெளிப்புறத்திலிருந்து பாதிக்கும் புற ஊதாக் கதிர்கள், ரசாயனங்கள் மற்றும் தொற்றுநோய் கிருமிகள் நேரடியாக நமது உடலுக்குள் நுழையவிடாமல் நம்மைப் பாதுகாக்கும் கேடயமாக விளங்குகிறது.

ஆனால், இப்படி பல்வேறு கிருமிகளின் பாதிப்பிலிருந்து நம்மைக் காக்கும் நமது தோல்தான் பல்லாயிரக்கணக்கான கிருமிகளுக்கான வாழ்விடம் என்பதுதான் இதிலுள்ள வினோதமான முரண்.

ஆம்! கொடிய கிருமிகள் உடலுக்குள் புகாமல் பாதுகாப்பதே ‘skin microbiome' எனப்படும் நல்ல நுண்ணுயிரிகள்தான். இவற்றில் பெரும்பாலானவை commensals அதாவது 'கூட்டு உயிர்ப்பு நுண்ணுயிரிகள்'. இவை சில சமயங்களில் அதிகமாக வளருவதே பல நோய்கள் உண்டாகக் காரணமாகவும் அமைகிறது.

அப்படிப்பட்ட மலசீசியா (Malassezia) பூஞ்சை என்னும் ஒரு நுண்ணுயிரிதான் தேமல் எனும் Tinea versicolor நோயை உண்டாக்கும் காரணியாகும். பொதுவாக வெயில் படும் பகுதிகளான முகம், கழுத்து, மார்பு, கைகால்கள் மற்றும் முதுகுப் பகுதிகளில் வளரும் இந்தப் பூஞ்சை நோயானது, சருமத்தின் நிறத்தைக் குறைத்தோ அல்லது கூட்டியோ, வெண்ணிற அல்லது கருமை நிற வட்ட வடிவிலான திட்டுகளாகக் காணப்படுவதுடன், சிலருக்கு தோலின் செதில்களை அதிகமாக வெளியேற்றி தோலில் அரிப்பு, எரிச்சல் மற்றும் பிளவுகளுடன் கூடிய வலி நிறைந்த லேசான சருமத்தையும்ஏற்படுத்திவிடுகிறது. அதுமட்டுமின்றிபொடுகு, முகப்பரு போன்றவற்றை ஏற்படுத்துவதும் இதே மலசீசியா பூஞ்சைக் கிருமிதான்.

தீர்வு உண்டு: பொதுவாக இது 10-30 வயதுள்ளவர்களை, குறிப்பாக பதின்பருவத்தினரை அதிகம் பாதித்தாலும் குழந்தைகள் மற்றும் வயோதிகர்களை இது பெரும்பாலும் பாதிப்பதில்லை. ஆனால், ஊட்டச்சத்து குறைபாடுகள், நோயெதிர்ப்பு குறைவானவர்கள், சர்க்கரை நோய், ஹெச்ஐவி தொற்று மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் உட்கொள்பவர்களுக்கு எந்த வயதிலும் தேமல் ஏற்படக் கூடும் என்பதால் இதை நோயெதிர்ப்புத் திறன் குறித்த முன்னெச்சரிக்கை அறிகுறியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

தேமல் என்பது உண்மையில் ஒரு தொற்றுநோய் என்றாலும், இது பெரிய ஆபத்துகளை விளைவிப்பதில்லை. இறுக்கமில்லாத தளர்வான பருத்தி ஆடைகளை உடுத்துவது, பள்ளியிலிருந்து திரும்பியவுடன் மீண்டும் ஒருமுறை குளிப்பது, அதிக வெயிலில் நீண்ட நேரம் நிற்காமல் இருப்பது, தேவையான நீரைப் பருகுவது, சமச்சீர் உணவின் மூலம் உடலின் ஊட்டக் குறைபாடுகளைக் குறைப்பது, தேவைப்படும்போது சன்-ஸ்க்ரீன் லோஷன்களையோ, வியர்வையைக் குறைக்கும் டால்கம் பவுர்களையோ பயன்படுத்துவது போன்ற எளிய முறைகள் இதில் உதவும்.அதேநேரம் இந்த முறைகள் பயனளிக்காதபோது மருத்துவ உதவியைப் பெறுவது அவசியம்.

மேலும் சாதாரண வீட்டு வைத்தியமான வேப்பிலை, கற்றாழை, மஞ்சள், மருதாணி, எலுமிச்சை போன்றவை அதிக வியர்வை மற்றும் அதிக எண்ணெயைப் போக்க உதவும் இயற்கை வழிமுறைகள். ஆகவே நவீன், உனது தேமல் பாதிப்பு தற்காலிகமானதுதான். சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மட்டுமே இதில் தேவை என்பதுடன் மருத்துவரின் பரிந்துரையின்றி எந்தவொரு எண்ணெய் அல்லது களிம்பை மேல் பூச்சாகப் பயன்படுத்தக் கூடாது.

- டாக்டர் சசித்ரா தாமோதரன் | கட்டுரையாளர் : மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்; தொடர்புக்கு: savidhasasi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in