

வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டாலோ, ரயில் விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலோ ஆரஞ்சுநிற சீருடையில் பம்பரமாய் இரவு பகல் பாராமல் உழைத்து உயிர்களை மீட்கும் வீரர்களை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். அவர்கள் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (National Disaster Response Force -NDRF).
2006-ம் ஆண்டில் என்.டி.ஆர்.எப்., தொடங்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் இந்தப் படையின் 16 பட்டாலியன் பிரிவுகளில் 18,500 வீரர்கள் பணிபுரிகின்றனர். என்.டி.ஆர்.எப்., இதுவரை 1.5லட்சம் உயிர்களை காப்பாற்றியிருக்கிறது. பேரிடர்களில் சிக்கிதவித்த 7 லட்சம் பேரை மீட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி பேரிடரில் சிக்கும் அண்டை நாடுகளிலும் தனது சேவையை வழங்கி வருகிறது இந்தப் படை.
என்.டி.ஆர்.எப்-ல் இணையலாம்: துணை ராணுவப்படைகளான சி.ஆர்.பி.எப்., (CRPF), சி.ஐ.எஸ்.எப்., (CISF), எல்லை பாதுகாப்புப்படை (BSF), இந்திய திபெத் காவல் படை (ITBP) ஆகியவற்றின் அதிகாரிகள், வீரர்களைக் கொண்டு என்.டி.ஆர்.எப்., உருவாக்கப்பட்டது. இந்தப் படை நேரடியாக ஆள் சேர்ப்பில் (Direct Recruitment) ஈடுபடாமல், அயல்பணி (Deputation) மூலமாகவே தனது படைக்கு தேவையானவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
இந்திய அரசு, மாநில அரசுகள், முப்படைகள், துணை ராணுவப்படைகள், காவல்துறை ஆகியவற்றில் பணியில் இருப்பவர்கள் என்.டி.ஆர்.எப்., படையில் சேர தகுதியானவர்கள். இப்படி ஏற்கெனவே அரசின் ஒரு துறையில் பதவியில் இருப்பவர்கள், மற்றொரு துறையில் உள்ள பதவிக்கு விண்ணப்பித்து பணியில் சேருவதற்கு அயல்பணி என்று பெயர். குறிப்பிட்ட கால அயல்பணிக்குப் பிறகு தங்களுடைய துறைக்கே அதிகாரிகள் மறுபடியும் திரும்பி விடுவார்கள். என்.டி.ஆர்.எப்., நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுகிறார்.
யாரெல்லாம் சேரலாம்? - பொறியியல் துறையில் பட்டம், பட்டயம் பெற்றவர்கள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், மருத்துவர்கள், துணை மருத்துவப் படிப்புகளை படித்தவர்கள் என பலருக்கும் என்.டி.ஆர்.எப்., படையில் வாய்ப்புகள் உள்ளன. இது தவிர துணை ராணுவப்படை, முப்படை, காவல்துறை உள்ளிட்ட படைப்பிரிவுகளில் சாகசப்பணிகளில் அனுபவமுள்ளவர்களும் என்.டி.ஆர்.எப்., படையில் சேரலாம்.
நாக்பூரிலுள்ள என்.டி.ஆர்.எப்., பயிற்சிப்பள்ளி, புது டெல்லியிலுள்ள தேசிய பேரிடம் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் பேரிடர் மீட்பு தொடர்பான சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
பள்ளி மாணவர்களும் சேரலாம்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்.டி.ஆர்.எப்., நிறுவனத்தின் பயிற்சிகளை பெறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. நேரு யுவ கேந்திரா, தேசிய சாரணர் படை ஆகிய அமைப்புகளோடு இணைந்து என்.டி.ஆர்.எப்., அவ்வப்போது மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குகிறது.
பேரிடரின் நெருக்கடி நிலைகளில் மக்களை காக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் என்.டி.ஆர்.எப்., படையில் விருப்பமுள்ள மாணவ மாணவிகள் இணையலாம். அதற்கு முதலில் ஒரு அரசுப்பணியில் இணைய வேண்டும். பின்பு அவ்வப்போது வெளியாகும் என்.டி.ஆர்.எப்., நிறுவனத்தின் அயல்பணி வேலைவாய்ப்பு விளம்பரங்களை கவனித்து விண்ணப்பித்து பணியில் சேரலாம்.
தேச மக்களை காக்கும் நேசப் பணியில் உச்சம் தொட வாழ்த்துகள்!
(தொடரும்)
- கட்டுரையாளர், ‘போர்முனை முதல் தெருமுனை வரை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com